

நாட்டிலிருக்கும் அனைத்து வீடுகளுக்கும் மின்வசதி கிடைப்பதற்கு வழிசெய்யும் ‘சவுபாக்யா’ (பிரதம மந்திரி ‘சஹஜ் பிஜலி ஹர் கர்’) திட்டத்தை செப்டம்பர் 25-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். 16,320 கோடி ரூபாய் மதிப்பில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்தால் 500 ரூபாய் செலுத்தி மின்வசதியைப் பெறமுடியும். இந்த 500 ரூபாயைப் பத்து மாத தவணையில் செலுத்தும் வசதியும் இந்தத் திட்டத்தில் இருக்கிறது. எரிவாயு, மின்சாரம், மருத்துவ வசதிகள் போன்றவையும் இந்த ‘சவுபாக்யா’ திட்டத்தால் மேம்படும் என்று தெரிவிக்கிறது மத்திய அரசு.
மூன்று ஆண்டுகளை நிறைவு செய்தது மங்கல்யான்!
இஸ்ரோவின் செவ்வாய் சுற்றுப்பாதை திட்டமான (Mars Orbitor Mission)‘மங்கல்யான்’ மூன்று ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கிறது. இப்போதும் நல்ல நிலையில் செயலாற்றுகிறது என்று தெரிவித்திருக்கிறது இஸ்ரோ. மங்கல்யான் செப்டம்பர் 24, 2014 அன்று வெற்றிகரமாகச் செவ்வாய் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இந்த நேரத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளின் (2014-2016) மங்கல்யான் பற்றிய அறிவியல் தரவுகளை செப்டம்பர் 25-ம் தேதி இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது. 450 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட மங்கல்யான், செவ்வாயின் மேற்பரப்பு, தாது கலவை போன்றவற்றை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்டது.
பொருளாதார போட்டித்திறனில் 40வது இடம்!
உலக பொருளாதார அமைப்பின் (World Economic Forum) 2017-18-ம் ஆண்டுக்கான உலகளாவிய போட்டித்திறன் குறியீட்டில் (Global Competitiveness Index) இடம்பெற்ற 137 நாடுகளில் 40வது இடத்தைப்பிடித்திருக்கறது இந்தியா. கடந்த ஆண்டு, 39வது இடத்திலிருந்த இந்தியா இந்த ஆண்டு, ஓர் இடம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் சுவிட்ஸர்லாந்தும், இரண்டாவது இடத்தில் அமெரிக்காவும், மூன்றாவது இடத்தில் சிங்கப்பூரும் இருக்கின்றன. நிறுவனங்கள், உள்கட்டமைப்பு, சுகாதாரம், அடிப்படை கல்வி, தொழிலாளர் சந்தை திறன், நிதி சந்தை வளர்ச்சி உள்ளிட்ட பன்னிரண்டு காரணிகளை அடிப்படையாக வைத்து இந்தப் பொருளாதார போட்டித்திறன் வாய்ந்த நாடுகளைப் பட்டியிலட்டிருக்கிறது உலக பொருளாதார அமைப்பு.
காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டம்!
காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை செப்டம்பர் 27-ம் தேதி, ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இந்தத் திட்டத்துக்காக மொத்தம் 25,060 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் மத்திய அரசு நிதியாக ரூ. 18,636 கோடியும், மாநிலங்களின் நிதியாக ரூ. 6,424 கோடியும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின்கீழ், உள்நாட்டு பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, நவீன ஆயுதங்கள், காவல் படைகளின் இயக்கம், ஹெலிகாப்டர்கள் வாடகை, மின்சிறை திட்டம் போன்ற அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவிருக்கிறது.
5 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்!
தமிழ்நாடு, அருணாசலப் பிரதேசம், பிஹார், அசாம், மேகாலயா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்களைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், செப்டம்பர் 30-ம் தேதி நியமித்தார். தமிழ்நாட்டின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டிருக்கிறார். அத்துடன், பிஹார் ஆளுநராக சத்ய பால் மாலிக், அசாம் ஆளுநராகப் பேராசிரியர் ஜகதீஷ் முகீ, மேகாலயா ஆளுநராக கங்கா பிரசாத், அருணாசலப் பிரதேசத்தின் ஆளுநராக டாக்டர் பி.டி. மிஷ்ரா, அந்தமான் நிகோபர் தீவுகளின் துணைநிலை ஆளுநராக தேவேந்திர குமார் ஜோஷி நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அணுசக்தி நிறுவுதலில் 3-வது இடம்!
உலக அணு தொழிற்சாலை நிலை அறிக்கை 2017-ன் ஆய்வு முடிவுகள்படி, ஆறு அணு உலைகளை நிறுவியிருக்கும் இந்தியா, அணுசக்தி உலைகளை நிறுவுவதில் உலகில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. 20 அணு உலைகளை நிறுவியிருக்கும் சீனா, முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், உலகளவில் அணு உலை கட்டுமான நிறுவுதல்கள் தொடர்ந்து நான்காவது ஆண்டாக சரிவைச் சந்தித்துவருகிறது. 2013-ம் ஆண்டின் இறுதியில், உலகில் 68 அணு உலைகள் இருந்த நிலையில், 2017-ம் ஆண்டின் நடுவில் அவை 53-ஆகக் குறைந்திருக்கின்றன. அத்துடன், பெரும்பான்மையான அணு உலை கட்டுமானங்களைத் திட்டமிட்டபடி முடிக்க முடியாத நிலையில், உலகில் 37 உலைகளின் கட்டுமானம் முடிவடையாமல் தாமதமாகிக்கொண்டிருக்கிறது.
10 விஞ்ஞானிகளுக்குச் சாந்தி ஸ்வரூப் பட்னாகர் விருது!
இந்தியாவின் உயரிய அறிவியல் விருதான சாந்தி ஸ்வரூப் பட்னாகர் விருது 10 விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 26-ம் தேதி, டெல்லியில் நடைபெற்ற அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் விழாவில் விருதைக் குடியரசுத் தலைவர் விஞ்ஞானிகளுக்கு வழங்கினார். தீபா நாயர், சஞ்ஜீவ் தாஸ், நரேஷ் பட்வாரி, சுரேஷ் பாபு, அலோகே பால், நீலேஷ் மேத்தா, அமித் தத், தீபக் கவுர், நிஸ்ஸிம் கனேகர், வினய் குப்தா உள்ளிட்ட பத்து விஞ்ஞானிகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு கணித அறிவியலுக்கான விருதுகள் வழங்கப்படவில்லை.
இந்தியா-நார்வே: சுகாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம்!
இந்தியா-நார்வே நாடுகளுக்கு இடையே சுகாதார ஒத்துழைப்பு தொடர்பான கடிதம், செப்டம்பர் 28-ம் தேதி கையெழுத்தானது. 2018-ம் ஆண்டிலிருந்து தொடங்கும் இந்த இருநாட்டு கூட்டு முயற்சி, சுகாதாரத் துறையில் மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும். மகப்பேறு, குழந்தை நலன், பதின்பருவத்தினரின் நலன் போன்ற அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும்படி இந்தச் சுகாதார ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. இந்தியாவின் தேசியச் சுகாதாரக் கொள்கை 2017-ன்படி, நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்டுவதன் ஒரு பகுதியாக இரு நாடுகளுக்கு இடையே இந்த ஒத்துழைப்புக் கடிதம் கையெழுத்தாகிஇருக்கிறது. மத்திய சுகாதார செயலர் சி.கே. மிஷ்ராவும், இந்தியாவுக்கான நார்வே தூதர் நில்ஸ் ரக்னரும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டிருக்கின்றனர்.