Published : 31 Oct 2017 11:09 AM
Last Updated : 31 Oct 2017 11:09 AM

கேள்வி நேரம் 07: பூமிப் பந்தின் பிரம்மாண்டங்கள்

1. சஹாராவே உலகின் மிகப் பெரிய பாலைவனம் என்பது பலருடைய நம்பிக்கை. இதன் பரப்பு 90 லட்சம் சதுர கிலோமீட்டர். உலகின் மிகப் பெரிய மணல் பாலைவனம் என்கிற தகுதியை வேண்டுமானால் சஹாரா பெறலாம். ஆனால், அதைவிட பெரிதான 130 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பைக் கொண்டதே உலகின் மிகப் பெரிய பாலைவனம். அது எது?

2. உலகில் இதுவரை வாழ்ந்த உயிரினங்களிலேயே மிகப் பெரியது நீலத் திமிங்கிலம். 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்ட டைனோசர்களைவிடவும் இதுவே பெரிது. எடை அதிகபட்சமாக 1,80,000 கிலோ, அதாவது 1.8 லட்சம் கிலோ. நீளம் கிட்டத்தட்ட 100 அடி. பாலூட்டியாக இருந்தாலும் கடலிலேயே வாழ்கிறது. நிலத்தில் வாழ்வதில் மிகப் பெரிய உயிரினம் யானை. திமிங்கிலத்தின் நாக்கின் எடையை எத்தனை யானைகளின் எடைக்கு ஈடாக வைக்கலாம்?

3. கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட், உலகின் மிகப் பெரிய கோயில் வளாகம். இது கிட்டத்தட்ட 500 ஏக்கர் பரப்புக்கு விரிந்திருக்கிறது. இந்தக் கோயில் வளாகத்துக்குள் 300 கால்பந்து மைதானங்களை உள்ளடக்கலாம். தரையிலிருந்து 9 அடுக்குகளுடன் அதிகபட்சமாக 700 அடி உயரம் கொண்டது மைய கோபுரம். இந்தக் கோயில் கட்டுமானக் கலை எதனால் உத்வேகம் பெற்றதாகக் கருதப்படுகிறது?

4. நாம் வாழும் ஆசிய கண்டமே, உலகின் மிகப் பெரிய கண்டம். பரப்பளவுரீதியிலும் மக்கள்தொகைரீதியிலும் ஆசியாவே பெரியது. பூமிப்பந்தின் கிழக்கு, வடக்கு அரைக்கோளங்களில் அமைந்துள்ளது. பூமியின் நிலப்பரப்பில் 30 சதவீதம், பூமியின் மொத்தப் பரப்பில் 8.7 சதவீதத்தைக் கொண்டிருக்கிறது. சரி, உலகின் எத்தனை சதவீத மக்கள்தொகையை ஆசியா கொண்டுள்ளது?

5. உலகின் மிகப் பெரிய தீவு எது என்று கேட்டால், உடனடியாக ஆஸ்திரேலியா என்ற பதிலை சிலர் கூறுவார்கள். ஆனால், ஆஸ்திரேலியா தீவுக் கண்டமாகக் கருதப்படுவதால் பொதுவாக அப்படிச் சுட்டப்படுவதில்லை. உலகின் மிகப் பெரிய தீவாகக் கருதப்படுவது கிரீன்லாந்து. பரப்பு 2.175,600 சதுர கிலோமீட்டர். இதன் முக்கால்வாசிப் பகுதி நிரந்தரப் பனியால் மூடப்பட்டது. இங்கு வாழும் மக்கள் இனுயிட் எனப்படுகிறார்கள். உலகிலேயே மிகக் குறைந்தது என்கிற ரீதியில் கிரீன்லாந்துக்கு ஒரு பெருமை உண்டு, அது என்ன?

6. உலகின் மிகப் பெரிய நீர்ப்பாசனப் பகுதி (டெல்டா) கங்கை பாசனப் பகுதி. இப்பகுதியில் கங்கையின் துணையாறுகள் பத்மா, ஹூக்ளி, பிரம்மபுத்திராவின் கிளையாறுகள் யமுனை, மேக்னா போன்றவை பாய்வதே இதற்குக் காரணம். மேற்கு வங்கம், வங்கதேசம் என இரண்டு பகுதிகளில் இந்தப் பாசனப் பகுதி அமைந்துள்ளது. இந்த பாசனப் பகுதிக்கு கங்கை-பிரம்மபுத்திரா பாசனப்பகுதி, சுந்தரவன பாசனப் பகுதி, வங்க பாசனப் பகுதி என்கிற மற்ற பெயர்களும் இருந்தாலும், மற்றொரு சிறப்புப் பெயர் இதன் பண்பைச் சொல்லும், அந்தப் பெயர் என்ன?

7. நெருப்புக்கோழிதான் உலகின் மிக உயரமான, எடை மிகுந்த பறவை. இவ்வளவு பெரிதாக இருக்கும் நெருப்புக்கோழியால் பறக்க முடியாது. வேகமாக ஓடவே முடியும். நெருப்புக்கோழியைப் பயன்படுத்தி ஓட்டப் போட்டிகளும்கூட சில பகுதிகளில் நடைபெறுகின்றன. ஓடும்போது ஒரு அடியில் அதிகபட்சமாக எத்தனை அடி தொலைவை ஒரு நெருப்புக்கோழியால் கடக்க முடியும்?

8. உலகின் மிகப் பெரிய, ஆழமான பெருங்கடல் பசிஃபிக். 15 கோடி சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்டது. பூமியின் பாதிக்கு மேற்பட்ட சுழலும் தண்ணீரை பசிஃபிக் பெருங்கடலே கொண்டிருக்கிறது. பூமியின் மொத்தத் தண்ணீரில் 46 சதவீதத்தைக் கொண்டிருக்கிறது. பூமிப் பந்தின் மொத்தப் பரப்பில் எந்த அளவை பசிஃபிக் பிடித்திருக்கிறது?

9. கோட்டைச் சுவர்களுக்குள் அடங்கியது என்று கணக்கில் கொண்டால் உலகின் மிகப் பெரிய அரண்மனை என்கிற பெருமையைப் பெற்றிருப்பது, பீஜிங்கில் உள்ள சீனாவின் கோடைகால அரண்மனை வளாகம். ஏரிகள், தோட்டங்கள், கட்டிடங்கள் அடங்கிய இந்த அரண்மனை வளாகம் லாங்கேவிட்டி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரபல சுற்றுலா தலம். இந்த அரண்மனை வளாகத்தின் பரப்பளவு 715 ஏக்கர். இதில் முக்கால் பங்கு அடைத்திருக்கக்கூடிய இயற்கை நிலஅமைப்பு எது?

10. காஸ்பியன் கடலின் பரப்பளவு 3,71,000 சதுர கிலோமீட்டர், அதாவது 3.7 லட்சம் சதுர கி.மீ. நிலப்பகுதிக்கு இடையே அமைந்திருப்பதால் இது கடலுக்கும் ஏரிக்கும் உரிய பண்புகளைக் கொண்டுள்ளது. ஈரான், ரஷ்யா, அசர்பெய்ஜான், கஜகஸ்தான், துருக்கி, துருக்மெனிஸ்தான், ஜார்ஜியா, ஆர்மெனியா என எட்டு நாடுகள் சூழ்ந்திருக்கும் சிறப்பைப் பெற்றது. பெரியது என்ற அளவில் இந்த நீர்நிலைக்கு ஒரு சிறப்பு உண்டு, அது என்ன?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x