Published : 09 Oct 2017 10:20 AM
Last Updated : 09 Oct 2017 10:20 AM

பேட்டரி வாகனத்துக்கு அரசு முன்னுரிமை: அச்சத்தில் ஆட்டோமொபைல் துறை

மா

ற்றத்துக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக்கொள்வதில் எப்போதுமே ஆட்டோமொபைல் துறை முன்னோடியாகத் திகழ்கிறது. அதிக அளவிலான மாற்றங்கள், புதுமைகளைப் புகுத்துவதும் இத்துறைதான். ஆனால் பேட்டரி வாகனங்களுக்கு மாறுவதில் அரசு காட்டும் வேகம், இத்துறையினரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

2030-ம் ஆண்டிலிருந்து அனைத்து வாகனங்களும் பேட்டரி வாகனங்களாகத்தான் உற்பத்தியாக வேண்டும் என்ற இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதற்கான வேலைகள் ஒருபுறம் நடந்துவந்தாலும், பேட்டரி வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படவில்லை. இத்தகைய வாகனங்களுக்கு அரசு எந்த அளவு சலுகை அளிக்கும் என்பதிலும் தெளிவில்லை. இத்தகைய குழப்பம் காரணமாக ஆட்டோமொபைல் துறையினர் எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உறைந்து போயுள்ளனர்.

அரசு தீவிரம் காட்டுவது ஏன்?

சுற்றுச் சூழலை பாதுகாக்க முடியும் என்பது பிரதானம். அதேசமயம் கச்சா எண்ணெய் இறக்குமதியை 30,000 கோடி டாலர் வரை குறைக்க முடியும் என்று அரசு உறுதியாக நம்புகிறது. பேட்டரி வாகன புழக்கம் மட்டுமே கரியமில வாயு வெளியேற்றத்தை பெருமளவு குறைக்க உதவும் என நிதி ஆயோக்கும் உறுதிபட அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் போக்குவரத்து மூலம் வெளியாகும் 64% கரியமில வாயு வெளியேற்றத்தை 37% அளவுக்குக் குறைக்க வேண்டுமெனில் பேட்டரி வாகன உபயோகம்தான் சிறந்த மாற்று என புள்ளி விவரத்தோடு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

நிறுவனங்கள் அஞ்சுவது ஏன்?

பேட்டரி வாகன புழக்கத்துக்கு மாறிய சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இந்த மாற்றம் படிப்படியாக நிகழ்ந்தது. மேலும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கென தயாரித்த கம்பஸ்டன் இன்ஜினை மாற்றி அவற்றை பேட்டரி வாகனங்களுக்கு ஏற்றவாறு வடிவமைத்தனர். ஆனால் இந்தியாவில் ஆண்டுக்கு 30 லட்சம் கார்கள் விற்பனையாகும் சூழலில் இதுபோன்ற மாற்றத்தை நிறைவேற்ற முடியுமா என்று ஆட்டோமொபைல் துறையினர் அஞ்சுகின்றனர். இதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கிடைக்கும் அளவுக்கு முன்னேறிய தொழில்நுட்ப வசதியும் இங்கு கிடைக்காது என்பதே அதற்குக் காரணமாகும்.

பிரதான காரணங்கள்

கடந்த ஆண்டில் (2016) பாரத் ஸ்டேஜ் 4 புகை விதிமுறைகளுக்குப் பதிலாக பாரத் ஸ்டேஜ் 6 நிலையை எட்டுமாறு ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட்டது. இத்தகைய மாற்றங்களை மேற்கொள்ள நிறுவனங்களுக்கு ரூ 60 ஆயிரம் கோடி முதலீடு தேவைப்படுகிறது. இந்நிலையில் அடுத்து பேட்டரி வாகனங்களுக்கு மாறுவது என்ற நெருக்கடி இத்துறை நிறுவனங்களை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது.

இன்ஜின் தயாரிப்பு நிறுவனங்கள்

ஆட்டோமொபைல் துறையில் ஒவ்வொரு வாகனத்துக்கும் என பிரத்யேக இன்ஜின்களைத் தயாரித்து அளிப்பதற்கென்றே நிறுவனங்கள் உள்ளன. பேட்டரி மயமாக்கப்பட்டால் இந்த இன்ஜின் தயாரிப்பு மற்றும் பவர் டிரைன் ஆகிய தொழில் முற்றிலுமாக பாதிக்கப்படும். இத்தோடு துணை நிறுவனங்களான காஸ்டிங், போர்ஜிங் உள்ளிட்ட தொழில்கள் முற்றிலுமாக நசிந்து போகும். இத்துறையில் மட்டும் தற்போது 15 லட்சம் பேர் பணி புரிகின்றனர். இவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும்.

சீன ஆதிக்கம்

பேட்டரி வாகன உற்பத்தியில் சீனா ஆதிக்கம் செலுத்துமோ என்ற அச்சமும் முக்கியமாக உள்ளது. ஏற்கெனவே ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்களில் இங்கு சீன தயாரிப்புகளை முன்னிலை வகிக்கின்றன.

மானிய உதவி

பிற நாடுகளில் பேட்டரி வாகனங்களுக்கு அளிக்கப்படும் மானிய உதவி போல மத்திய அரசு அளிக்குமா என்பதும் கேள்வியாக உள்ளது. டென்மார்க்கில் 22,000 டாலர் வரையிலும் நார்வேயில் 18 ஆயிரம் டாலரும். நெதர்லாந்தில் 11,000 டாலரும், சீனாவில் 900 டாலரும், அமெரிக்காவில் 700 டாலரும் மானியமாக அளிக்கப்படுகிறது. இந்தியாவில் 200 டாலர் மட்டுமே அளிக்கப்படுகிறது. இதுவும் நிறுவனங்களின் தயக்கத்துக்கு முக்கிய காரணமாகும்.

ரூ. 4.5 லட்சம் கோடி

ஆட்டோமொபைல் துறையின் மொத்த மதிப்பீடு ரூ. 4.5 லட்சம் கோடிக்கும் அதிகமாகும். இத்துறையைச் சார்ந்து 10 ஆயிரம் உதிரி பாக உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் மூலம் 3 கோடி பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இத்துறையின் பங்களிப்பு 7 சதவீதமாகும்.

பேட்டரி வாகன உற்பத்தி சார்ந்து கொள்கை வகுப்பதில் பல்வேறு அமைச்சகங்கள் இணைந்துள்ளன. அரசுக்கு ஆலோசனை வழங்கும் நிதி ஆயோக், கன ரக தொழில்துறை, மரபு சாரா எரிசக்தித்துறை, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், மத்திய பெட்ரோலிய அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகம் ஆகியன இதில் சம்பந்தப்பட்டுள்ளதால் அனைத்தும் ஒருங்கிணைந்து ஒரு முடிவுக்கு வர முடியாத சூழல் நிலவுகிறது.

ஏற்றுமதியில் ஆட்டோமொபைல் பங்களிப்பு ரூ. 1.5 லட்சம் கோடியாகும். அதாவது மொத்த உற்பத்தியில் 30 சதவீதம் ஏற்றுமதியாகிறது. இதனாலேயே ஆட்டோமொபைல் துறையில் `மேக் இன் இந்தியா’ கோஷம் உரக்க ஒலிக்கிறது. ஆனால் பேட்டரி வாகன மாற்றம் இதே நிலை தொடர உதவுமா என்பது சந்தேகமே.

பிஎஸ் 6 சவால்

அதிகரித்து வரும் வாகன புகையைக் கட்டுப்படுத்த டீசல் வாகனங்களுக்கு கூடுதல் வரி (கிரீன் செஸ்) விதிப்பது போன்ற நடவடிக்கையை அரசு எடுத்தது.2020-ம் ஆண்டுக்குள் பாரத் 6 புகை வெளியிடு அளவுக்கு வாகனங்கள் தரம் உயர்த்தப்பட்டு வெளியிடப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விதம் மாற்றம் செய்வதற்கு ஆட்டோமொபைல் துறையினருக்கு ரூ. 60 ஆயிரம் கோடி முதலீடு தேவைப்படுகிறது.

சாதாரண பெட்ரோல், டீசல் கார்களுக்கான இன்ஜினில் மட்டும் 3,000 உதிரி பாகங்கள் உள்ளன. ஆனால் பேட்டரி வாகன இன்ஜினில் உள்ளதோ 30 உதிரிபாகங்கள் மட்டுமே.

வால்வு, பிஸ்டன், கிராங்ஷாஃப்ட், கார்புரேட்டர், பியூயல் இன்ஜெக் ஷன் சிஸ்டம், கூலிங் சிஸ்டம் உள்ளிட்ட உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்துக்குமே வேலையில்லாமல் போய்விடும். அடுத்த 10 ஆண்டுகளில் இத்துறையிலிருந்து வேலையிழப்போருக்கு என்ன மாற்று என்பது எவரும் அறியாத ஒன்றாகும்.

பேட்டரி வாகனத்துக்கு மாறுவதற்கு எதிரானவர்கள் ஆட்டோமொபைல் துறையினர் அல்ல. ஆனால் அதற்குரிய தொலை நோக்கு திட்டம், எந்தெந்த கால கட்டத்தில் எவ்வளவு வாகனங்கள் மாற வேண்டும் என்ற இலக்கு அவசியம். பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதற்கேற்றவகையில் உருவாக்கப்பட வேண்டும். இதில் எந்த தொழில்நுட்பத்துக்கு எவ்வளவு மானியம், அரசு உதவி கிடைக்கும் என்பது தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும். அது இல்லாவிடில் இலக்கை எட்டுவது சிரமம் என்கின்றனர் இத்துறையினர்.

மேலும் பேட்டரி தொழில்நுட்பம் மிகவும் முக்கியமானதாகும். அதிலும் பேட்டரி சார்ஜ் செய்வதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் இன்னமும் மெத்தனப் போக்கு காணப்படுகிறது. தற்போது வரை 500 சார்ஜிங் மையங்கள்தான் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசு நிர்ணயித்துள்ள இலக்கில் 30 சதவீத அளவை எட்டினால் கூட டெல்லியில் மட்டும் 3 லட்சம் சார்ஜிங் மையங்கள் தேவை என்கின்றனர் இத்துறையினர்.

தொழில்துறையினரின் அச்சத்தைப் போக்கி, பேட்டரி வாகனத்துக்குரிய தெளிவான கொள்கைகளை வகுத்த பிறகு செயல்படுத்தினால் மட்டுமே இலக்கை எட்ட முடியும் என்பது நிச்சயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x