Last Updated : 28 Oct, 2017 11:51 AM

 

Published : 28 Oct 2017 11:51 AM
Last Updated : 28 Oct 2017 11:51 AM

பொருள் புதிது 06: மின் கட்டணம் குறைக்கும் ஸ்மார்ட் வெப்பநிலைச் சீராக்கி

வெ

ப்பநிலைச் சீராக்கி (Temperature Controller) இல்லாத குளிர்சாதனப் பெட்டி (Refrigerator), குளிர்பதனப் பெட்டி (AC), நீர்க்கொதிகலன் (water heater) ஆகியவற்றை நாம் அன்றாட வாழ்வில் உபயோகித்தால் என்ன ஆகும்? சற்றே யோசித்துப் பார்ப்போம்.

இரவில் தூங்க முடியாமல் குளிரில் நடு நடுங்கி விழித்திருந்து இருக்க வேண்டி வரும். இட்லி மாவு உறைந்து பனிக்கட்டியாகி இருந்திருக்கும். காலையில் கரண்டிக்குப் பதில் சுத்தியலைத் தேட வேண்டிய நிலை வரும். குளியல் அறையில் வெந்நீரின் சூடானது பிளாஸ்டிக் வாளியை உருக வைத்திருக்கும், ஒரு வேளை மறந்தபடி வெந்நீரைத் தொட்டிருந்தால் கைகள் வெந்து போகு

இந்த மாதிரியான ஆபத்தான மற்றும் அசௌகரியமான நிகழ்வுகளைத் தவிர்க்க தான் வீட்டு உபயோக சாதனங்கள் இந்த வெப்பநிலைச் சீராக்கியைத் தன்னகத்தே கொண்டுள்ளன. இதன் செயல்பாடு மிகவும் எளிதானது. நாம் குறிப்பிட்டிற்கும் வெப்பநிலையை விட அதிகமாகவோ குறைவாகவோ வீட்டு உபயோக சாதனத்தின் வெப்பநிலை சென்றால், வெப்பநிலைச் சீராக்கி உடனடியாக அந்தச் சாதனத்தின் செயல்பாட்டை நிறுத்திவிடும். இதன் தொழில்நுட்ப நீட்சிதான், இப்போது சந்தைகளில் பரவலாக விற்கப்படும் ஸ்மார்ட் வெப்பநிலைச் சீராக்கி.

ஏற்கனவே வீட்டில் இருக்கும் வெப்பநிலைச் சீராக்கியில் என்ன குறை உள்ளது?

உலக எரிசக்தி அறக்கட்டளையின் ஆய்வின்படி, 60 விழுக்காடு பயனாளிகளுக்கு இந்த வெப்பநிலைச் சீராக்கியை எப்படிச் சரியாக நிறுவுவது என்று தெரியவில்லை. இந்த அடிப்படை தவறு வீட்டின் மின்சாரக் கட்டணத்தை அதிகரித்து நமது மாத பட்ஜெட்டில் பெரிய செலவை இழுத்துவைத்துவிடும்.

மேலும் இந்த வெப்பநிலைச் சீராக்கிகள் தனித் தனி தீவைப் போன்று ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தனித்து இயங்குகின்றன. இதன் செயல்பாடும் மிகவும் குறுகிய ஆற்றல் கொண்டது. இதனால் செயற்கை நுண்ணறிவைப் பெற்று சுதந்திரமாக இயங்கவும் முடியாது. மேலும் இதனால் நமது அன்றாட தேவைகளுக்கு ஏற்றபடியோ அல்லது அன்று நிலவும் தட்பவெப்பநிலைக்கு ஏற்ற படியோ தன் செயல்பாட்டை மாற்றி அமைக்க முடியாது.

shutterstock_409681483

ஆனால் ஸ்மார்ட் வெப்பநிலைச் சீராக்கி (Smart Temperature Controller), நமது தேவைகள் மற்றும் தட்பவெப்பநிலைக்கு ஏற்ற வண்ணம் தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளும். மேலும் எந்த நாளில் எத்தனை மணிக்கு என்னென்ன சாதனங்கள் செயல்பட வேண்டும் என்று அட்டவணை போட்டு கொடுத்தால், அதன் படி இது அவற்றை இயக்கும். இவ்வாறு நமது தேவைக்கும் தட்பவெப்பநிலைக்கும் ஏற்ற வண்ணம் சாதனங்கள் இயங்குவதால், நம் வீட்டின் மாதாந்திர மின் கட்டணம் கணிசமான அளவு குறையும்.

ஸ்மார்ட் வெப்பநிலைச் சீராக்கியில் அப்படி என்ன தான் சிறப்பம்சம் உள்ளது?

ஸ்மார்ட் வெப்பநிலைச் சீராக்கி நாம் உபயோகிக்கும் ஸ்மார்ட் கைப்பேசியைப் போன்று தொடு உணர்ச்சி கொண்ட காட்சித் திரையைக் கொண்டிருக்கும், இதன் மூலம் நமக்கு வேண்டிய செயல்பாடுகளை எளிதில் வடிவமைத்துக் கொள்ளலாம். மேலும் இதற்கான செயலிகளைக் கைப்பேசியில் தரவிறக்கம் செய்வதன் மூலம் இதனைக் கைப்பேசியின் வாயிலாகவும் இயக்கலாம்.

கைப்பேசி மூலம் என்பதால், இதனை வீட்டிலிருந்து மட்டுமல்லாமல் வெளியில் இருந்தும் இயக்கலாம். உதாரணத்துக்கு நாம் அலுவலகத்தில் இருந்து கிளம்பும்போதே நம் வீட்டின் ஏசியை ஓட வைக்கலாம். இது மட்டுமின்றி நாம் மறதியில் நிறுத்தாமல் விட்ட சாதனங்களின் செயல்பாட்டை அலுவலகத்தில் இருந்தபடியே நிறுத்தலாம்.

சில ஸ்மார்ட் வெப்பநிலைச் சீராக்கிகள் இதற்கு ஒருபடி மேலே போய், நாம் வீட்டை நெருங்கும் போது, வீட்டில் இருக்கும் வெப்பத்தின் அளவைச் சொல்லி, ஏசியை ஓட வைக்கவா என்று கேட்கும்.

வெப்பநிலைச் சீராக்கிகள் மூலம் பயன் என்ன?

ஸ்மார்ட் வெப்பநிலைச் சீராக்கி அடிப்படையில் நமது சவுகரியத்தை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று. ஆனால் இது நம் வசதியை மேம்படுத்துவது மட்டுமின்றி நமது மாதாந்திர மின்கட்டணத்தையும் 30 சதவீதம் குறைக்கிறது. மேலும் இதனுடன் ஸ்மார்ட் மானிட்டரையும் சேர்த்து உபயோகித்தால், எந்தச் சாதனம் அதிக மின்சாரத்தை உறிஞ்கிறது என்பதை நமக்கு அறிவுறுத்திக் கொண்டே இருக்கும்.

மேலும் நம் வீட்டில் உள்ள அறைகளின் வடிவமைப்பு மற்றும் வடிவளவுக்கு ஏற்ற வண்ணம் அங்குள்ள சாதனங்கள் இயங்கும் வண்ணம் அதன் செயல்பாடுகளை வடிவமைத்துக் கொள்ளலாம்.

ஒரு ஸ்மார்ட் வெப்பநிலைச் சீராக்கியின் விலை எவ்வளவு?

ந்த வெப்பநிலைச் சீராக்கிகள் அதன் திறன் மற்றும் செயல்பாடுகளை பொறுத்து ரூபாய் 10,000 முதல் ரூபாய் ஒரு லட்சம் வரையிலான விலையில் சந்தையில் கிடைக்கின்றது. Hive, Nest and Honeywell Evohome போன்ற தயாரிப்புகளின் செயல்பாடுகள் மிகவும் பெயர் பெற்றவை.

இதனை நாமே நிறுவ முடியுமா?

சில வகை வெப்பநிலைச் சீராக்கிகளை நாமே எளிதில் நிறுவிக் கொள்ள முடியும் தான். ஆனால் வீட்டில் உள்ள சாதனங்களை இணைப்பதற்குச் சற்று வையரிங் வேலையும் தேவை என்பதால், தகுந்த தொழில்நுட்ப வல்லுநரைப் பயன்படுத்துவது நல்லது. முறையான தொழில்நுட்ப வல்லுநருக்கு இதனை நிறுவுவதற்கு அதிகபட்சம் ஒரு மணி நேரம் தான் எடுக்கும்.

பணத்தை இது மிச்சப் படுத்துமா?

மின் கட்டணத்தை 30 விழுக்காடு வரை குறைப்பதால் கண்டிப்பாக இது நமது பணத்தை மிச்சப் படுத்தும். இதனை வீட்டில் உள்ள ஸ்மார்ட் Hubல் இணைப்பதன் மூலம், மற்ற ஸ்மார்ட் சாதனங்களுடன் இணைந்து இது செயல்படும். இதன் மூலம் நமது மின்சார பயன்பாடு மேலும் குறைந்து நம் சேமிப்பும் அதிகரிக்கின்றது.

சிறு துளி பெரும் வெள்ளம்

ந்த வெப்பநிலைச் சீராக்கி ஒரு மிக எளிய கருவிதான். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சி அதற்குப் பல செயல்பாடுகளைக் கொடுத்திருக்கிறது. இந்தச் செயல்பாடுகள் நமக்கு எண்ணற்ற வசதிகளைக் கொடுப்பதோடு மட்டுமில்லாமல் நமது மின் உபயோகத்தையும் வெகுவாகக் குறைக்கிறது..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x