Last Updated : 08 Oct, 2017 11:57 AM

 

Published : 08 Oct 2017 11:57 AM
Last Updated : 08 Oct 2017 11:57 AM

கண்ணீரும் புன்னகையும்: லலிதா சொல்லும் பொருளாதாரம்

பெண்களுக்குப் பணம், நிதி தொடர்பான அறிவு ஏன் அவசியமாக இருக்கிறது என்பது குறித்த ஆங்கிலக் கட்டுரை நூலை எழுதியிருக்கிறார் லலிதா ஐயர். புத்தகத்தின் பெயர் ‘தி ஹோல் ஷீபேங்க்’. குழந்தைப் பருவத்திலிருந்தே வீட்டிலும் வெளியிலும் பணத்தைக் கையாள்வது, நிதி நிர்வாகக் கல்வி போன்றவை பெண் குழந்தைகளுக்குக் கற்றுத்தரப்படுவதில்லை. ஆனால், பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை நிதி தொடர்பான கல்வி பள்ளியிலிருந்தே தரப்பட வேண்டும் என்கிறார் அவர்.

“கல்வியறிவு பெற்ற பெண்கள் பணத்தைக் கையாள்வது தொடர்பாக அறிவை அதிகம் பெற்றிருப்பதாக நம்மிடையே ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், கிராமத்தில் வசிக்கும் கல்வியறிவற்ற பெண்களும் என்னுடைய பாட்டி போன்றவர்களும் நவீன கல்வி பெற்ற நகரப் பெண்களைவிட அதிக நிதியறிவைப் பெற்றுள்ளனர். கணவரின் குறைவான வருவாயிலிருந்து நிறையக் குழந்தைகளையும் வைத்துக்கொண்டு அவர்களால் சேமிக்கவும் முடிந்திருக்கிறது. இந்த விஷயத்தில் அவர்களை நவீனப் பெண்கள் முன்மாதிரிகளாகக் கொள்ள வேண்டும்” என்கிறார் லலிதா. நிதி தொடர்பான போதிய அறிவின்மையால் பெண்களின் பேரம் பேசும் சக்தியும் குறைகிறது என்று இந்தப் புத்தகத்தில் அவர் கூறியுள்ளார். “வாழ்க்கையின் சகல நிலைகளிலும் நிதி மேம்பாடு என்பது உளவியல்ரீதியாகப் பெண்களை நம்பிக்கையுள்ளவர்களாக வைத்திருக்கிறது. நல்லபடியாகப் பணத்தைக் கையாண்டால் நல்லபடியாக வாழ்க்கையையும் கையாள முடியும்” என்கிறார் லலிதா. வேலை பார்க்கும் பெண்கள்கூடத் தங்கள் ஓய்வு கால நிதித் தேவைகள் குறித்துப் பொருட்படுத்தாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார். மாறும் சமூக நிலைகள், பொருளாதாரத்துக்கு ஏற்ப எதிர்காலத்தில் நிம்மதியாக வாழ்வதற்கான ஆலோசனைகளையும் இந்தப் புத்தகத்தில் வழங்கியுள்ளார் லலிதா.

துர்கா பூஜையில் விளையாட்டு வீராங்கனைகள்

08chsrs_durga100 

த்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் நகரத்தில் தசரா நாட்களில் துர்க்கை சிலை இருக்கும் பந்தல் புதுமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த தடகள, விளையாட்டு வீராங்கனைகள் சுவரொட்டிகளாகத் துர்க்கையைச் சுற்றி அலங்கரிக்கப்பட்டிருந்தனர். டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, கோல்ஃப் வீராங்கனை சர்மிளா நிகோலட், மல்யுத்த வீராங்கனை கீதா போகத், கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ், வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி போன்றோரின் சுவரொட்டிகள் இடம்பெற்றிருந்தன. இந்தப் பந்தலில் ஒவ்வொரு விளையாட்டு வீராங்கனையும் பெற்ற பரிசுகள், அங்கீகாரங்கள் ஆகிய விவரங்களும் எழுதப்பட்டிருந்தன. சென்ற ஆண்டு துர்கா பந்தலில் பெண் குழந்தைகள், பெண் கல்வியின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தி இந்தப் பந்தல் வடிவமைக்கப்பட்டிருந்தது.

முதல் பெண் அதிகாரி

08chsrs_royona ரோயோனா சிங்

னாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் 101 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக மாணவர் கண்காணிப்பாளராக (ப்ரோக்டார்) ரோயோனா சிங் நியமிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளேயே மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவத்தை அடுத்து நிகழ்ந்த போராட்டத்துக்குத் தார்மிகப் பொறுப்பேற்று ஆன் சிங் பதவியிலிருந்து விலகினார். இதைத் தொடர்ந்து ரோயோனா சிங் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் அவர், பாதிக்கப்பட்ட மாணவி தொடர்பான சங்கடமான கருத்தைப் பல்கலைக்கழக வார்டன் சொன்னதற்கும் வருத்தம் தெரிவித்துள்ளார். மாணவிகளின் பிரச்சினைகளைப் பொறுத்தவரை கூடுதலாகக் கவனம் செலுத்தப்படுமென்றும், ஒரு பெண்ணுடன் தங்கள் பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்வது மாணவிகளுக்கு சவுகரியமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உடை, உணவு தொடர்பான கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x