Published : 20 Oct 2017 12:32 PM
Last Updated : 20 Oct 2017 12:32 PM

கதை: அம்மாவிடம் மாட்டிய பூதம்!

 

கா

ட்டின் எல்லையில் இருந்த கிராமத்தில் வசித்துவந்தாள் குறும்புக்கார ஜானு. சாப்பிட, குளிக்க, விளையாட என்று எல்லாவற்றுக்கும் பிடிவாதம் செய்வாள்.

அன்று இரவு ஜானுவுக்குச் சோறு ஊட்ட ஆரம்பித்தார் அம்மா. வழக்கம்போல் சாப்பிட மாட்டேன் என்று அடம்பிடித்தாள்.

“ஜானு, சாப்பிட்டால்தான் அம்மா மாதிரி பெரிய ஆளாக வளரலாம்.”

“ம்ஹும்… எனக்குச் சாப்பாடு வேண்டாம்.”

“சாப்பிடலைன்னா நரி கிட்ட பிடிச்சுக் கொடுத்துடுவேன்” என்று அம்மா மிரட்டிக்கொண்டிருக்கும்போது, அந்த வழியே நரி ஒன்று வந்தது.

’ஆஹா! எத்தனை நாளுக்குத்தான் நண்டுகளைச் சாப்பிடறது? இன்னிக்கு நல்ல விருந்து!’ என்று மகிழ்ச்சியடைந்தது நரி.

இரவு முழுவதும் காத்திருந்து ஏமாற்றமடைந்த நரி, மறுநாள் பார்த்துக்கொள்ளலாம் என்று காட்டை நோக்கி ஓடிவிட்டது.

மறுநாள் குளிக்க அடம்பிடித்துக்கொண்டிருந்தாள் ஜானு.

”குளிக்க வரலைன்னா உன்னை பூதம்கிட்ட பிடிச்சிக் கொடுத்துடுவேன்!” என்று அம்மா சொல்வதை மரத்தில் இருந்த பூதம் கேட்டுக்கொண்டிருந்தது.

’அடடா! நல்ல விருந்து!’ என்று பூதம் நினைத்துக்கொண்டது.

அன்று இரவு வீட்டுக் கதவைத் தட்டியது நரி. ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த அம்மா திடுக்கிட்டார்.

”என்ன அம்மா, சொல்றீங்களே தவிர செய்ய மாட்டேங்கிறீங்க! நான் எவ்வளவு நேரம் காத்துக்கிட்டு இருக்கிறது? குழந்தையைக் கொடுங்க” என்று கேட்டது நரி.

அம்மாவுக்குப் பயம் வந்துவிட்டது. ’குழந்தையை மிரட்ட விளையாட்டுக்குச் சொன்னால் நரி வந்து நிற்கும் என்று நான் நினைக்கவில்லையே!’ என்று பதறினாலும் சமாளிக்க முடிவு செய்தார்.

“நரியாரே, அஞ்சு நிமிஷம் கழிச்சு பின்னால உள்ள வயலுக்கு வாங்க. நீங்க கேட்டதைக் கொடுத்துடறேன் ” என்று சொல்லிவிட்டு, ஒரு பையில் கற்களை அடைத்தார். வயலில் தூக்கி எறிந்தார். ஜானுவைக் கிள்ளிவிட்டார்.

அழுகை சத்தம் கேட்டவுடன் நரி ஆவலோடு வயலுக்குள் பாய்ந்தது.

அந்த வயலுக்குச் சொந்தக்காரர் இரவில் விலங்குகள் வந்து பயிர்களைப் பாழ்படுத்தாமல் இருப்பதற்காகக் குழி தோண்டி பொறி வைத்திருந்தார். பொறியில் வசமாகச் சிக்கிக்கொண்டது நரி.

தப்பித்தோம் என்று பெருமூச்சு விட்டார் அம்மா. எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த பூதம், நரியைப்போல நான் ஏமாறக் கூடாது என்று நினைத்துக்கொண்டது.

மறுநாள் அம்மா ஜானுவுக்குச் சோறு ஊட்டிக்கொண்டிருக்கும் போது வாசலில் வந்துநின்றது பூதம். நடுங்கிப் போனார் அம்மா.

”யார் நீ! என்ன வேண்டும்?”

”நீங்க சொன்ன பூதம் நான்தான். குழந்தையைப் பிடிச்சுட்டுப் போக வந்திருக்கேன்!”

”ஓ… அப்படியா! நீ அங்கேயே இரு. சரியா சாப்பிடா விட்டால் குழந்தையைத் தூக்கிப் போடுறேன்” என்று சொல்லிவிட்டு, இரும்புச் சங்கிலியை எடுத்தார், ஓர் இரும்புக் குண்டை அடுப்பில் போட்டார்.

“சீக்கிரம் வெளியே அனுப்பு” என்று கத்தியது பூதம்.

”இந்த உருவத்தில் இருந்தால் குழந்தை பயப்படும்.”

”சரி, நாயாக மாறிடறேன்” என்ற பூதம், சட்டென்று உருவம் மாறியது.

”உன்னைச் சங்கிலியால் கட்டினால்தான் குழந்தை நம்பும்.”

”சரி, கட்டு.”

சங்கிலியால் நாயைக் கட்டிப் போட்டார் அம்மா.

”இப்போது நான் போடும் பந்தைப் பிடித்து குழந்தைக்கு விளையாட்டு காட்டு! அப்போதுதான் குழந்தை உன்கிட்ட வரும்.”

பழுக்கக் காய்ச்சிய இரும்புக் குண்டை கரண்டியிலிருந்து வீசினார். நாய் வேஷத்தில் இருந்த பூதம் அதை வாயில் கவ்வியது.

”ஆ… ஐயோ… ஐயோ…” என்று அலறியது.

சங்கிலியால் கட்டப்பட்டதால் தப்பிக்க முடியாமல் தவித்தது பூதம். ”இனி இந்தப் பக்கம் திரும்ப மாட்டேன். என்னை அவிழ்த்துவிடு” என்று கெஞ்சியது அது.

ஜானு கைதட்டிச் சிரித்தாள்.

பூதத்தை அவிழ்த்துவிட்டபடி, “இதோ பாரு ஜானு நாய்க்குட்டி. ஒழுங்காகச் சாப்பிடு. இல்லைன்னா பூதம் கிட்டப் பிடிச்சுக் கொடுத்திருவேன்” என்று சொல்லிக்கொண்டே சோறூட்ட ஆரம்பித்தார் அம்மா.

விட்டால் போதும் என்று அலறியடித்து ஓடியது பூதம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x