Published : 23 Oct 2017 11:27 AM
Last Updated : 23 Oct 2017 11:27 AM

அலசல்: டார்ஜிலிங்கில் அமைதி தொடரட்டும்

மே

ற்கு வங்க மாநிலத்தில் ஒரு பகுதியை முடக்கி வைத்திருந்த கூர்காலாந்து போரா ட்டம் ஒரு வழியாக 104 நாட்களுக்கு பின்னர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதி மக்க ளின் உரிமைப் போராட்டம், மாநில பிரிவினைவாதம் என்கிற எதிரெதிர் கருத்து கள் இருந்தாலும் டார்ஜிலிங் பிராந்தியத்தின் அமைதி திரும்ப வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாகும்.

கடந்த நான்கு மாதங்களில் கூர்காலாந்து தனி மாநில உரிமைப் போராட்டத்தினால் டார்ஜிலிங் பிராந்தியத்தின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. உலகிலேயே மிகத் தரமான தேயிலையை உற்பத்தி செய்யும் டார்ஜிலிங் மலைப் பிரதேசத்தில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தவிர பிரதான தொழிலான சுற்றுலாவும் மொத்தமாக முடங்கியது. தேயிலை பறிப்பு நடைபெறாததால் நிறுவனங்கள் சுமார் ரூ. 200 கோடி வரை நஷ்டத்தை சந்தித்தன.

தற்போது மாநில அரசு, கூர்காலாந்து போராட்டக்காரர்களுடன் அமைதி பேச்சு வார்த்தைகளைத் தொடங்கியதை அடுத்து மலைகளின் ராணி என்றழைக்கப்படும் டார்ஜிலிங்கில் சற்றே ஆசுவாசம் திரும்பியுள்ளது. கடந்த 15 நாட்களாக மக்கள் பழைய நிலைமைக்கு திரும்பி வருகின்றனர். பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக பண்டிகை காலம் வருவதையடுத்து சுற்றுலா சீசன் களை கட்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் ஓட்டல்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. சுற்றுலா நிறுவனங்கள் அடுத்த அடுத்த மாதங்களுக்கான பயணத் திட்டங்களை வெளியிட்டுள்ளன.

போராட்டத்தின் ஆரம்ப கட்டத்தில், மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நிலைமை மோசமாக இருந்தது. டார்ஜிலிங் பகுதியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளுக்கு உணவு, போக்குவரத்து இல்லாமல் மோசமான சுற்றுலா அனுபவத்தை சந்தித்தனர். முன்பதிவு செய்திருந்த சுற்றுலா பயணிகளுக்கான கட்டணத்தை ஓட்டல்கள் திருப்பி அளித்தன. தேயிலை பறிப்புக்கு செல்ல முடியாமல் 1 லட்சம் பணியாளர்கள் பாதிக்கப்பட்டனர். பள்ளிக்கு அனுப்பாமலேயே பெற்றோர்கள் பள்ளிக் கட்டணங்களை கட்ட வேண்டிய சூழல், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மூன்று மாத ஊதியம் கிடைக்கவில்லை. சிறு வர்த்தகம் முடங்கியதால் அதை நம்பி இருந்தவர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் சற்றே அமைதி திரும்புவதையடுத்து டார்ஜிலிங்கில் நிலைகொண்டுள்ள ராணுவத்தினரை திரும்ப பெற மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. பேச்சு வார்த்தைகளை மாநில அரசு முன்னெடுத்தாலும், மத்திய அரசின் இந்த முடிவுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கொல்கொத்தா உயர்நீதிமன்றம் மத்திய அரசின் முடிவுக்கு அக்டோபர் 27ம் தேதி வரை தடை விதித்துள்ளது. இன்னும் முழுமையான அமைதி திரும்பவில்லை. அதனால் ராணுவத்தை விலக்கிகொள்ள வேண்டாம் என்கிறார் மம்தா. அடுத்த வாரத்தில் இது தொடர்பாக இறுதி முடிவு எட்டப்படலாம்.

டார்ஜிலிங்கில் அமைதி நிலவுவதை அடுத்துதான் ராணுவம் விலக்கிக் கொள்ளப்படுகிறது என மத்திய அரசு கூறியுள்ளது. இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை நிறுத்தி வைக்கவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது. மக்களின் நலன், பொருளாதார இழப்புகளை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் கூட்டாக இணைந்து இந்த சூழலை கையாள வேண்டும். கூர்காலாந்து தனிமாநில கோரிக்கை குறித்து ஒருமித்த கருத்து எட்டப்படும் வரை இந்த அமைதியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x