Published : 23 Oct 2017 11:25 AM
Last Updated : 23 Oct 2017 11:25 AM

ஹார்லி டேவிட்சன் பல்கலைக் கழகம்

சா

லைகளில் சீறிப் பாயும் ஹார்லி டேவிட்சன் மோட்டார் பைக்குகளைப் பற்றி நமக்கு நன்கு தெரியும். அந்நிறுவனம் பல்கலைக் கழகம் தொடங்க திட்டமிட்டிருப்பது புது விஷயம். அதுவும் அடுத்த சில வாரங்களில் தலைநகர் டெல்லியில் ஹார்லி டேவிட்சன் பல்கலைக் கழகம் தொடங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்த பல்கலைக் கழகத்தின் மூலம் தனது டீலர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களின் திறனை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்கான பயிற்சி இந்த பல்கலைக்கழகத்தில் அளிக்கப்படும்.

மோட்டார் சைக்கிள்களுக்கான வழக்கமான தொழில்நுட்பப் பயிற்சி தவிர்த்து வேறு பல பயிற்சிகளையும் இப்பல்கலைக் கழகம் வழங்க உள்ளது. நிர்வாகம், நிதி மேலாண்மை, பிராண்டிங் உள்ளிட்ட விஷயங்களையும் இது கற்றுத் தர உள்ளது.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஏற்கெனவே 3 ஹார்லி டேவிட்சன் பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. டெல்லியில் தொடங்கப்படுவது இப்பிராந்தியத்தின் 4-வது பல்கலைகழகமாகும்.

இந்தியாவில் உள்ள மனித வளங்களை திறம்பட பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் இப்பல்கலைகழகம் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக இந்நிறுவனத்தின் இந்தியா மற்றும் சீனாவுக்கான நிர்வாக இயக்குநர் பீட்டர் மெக்கின்ஸி தெரிவித்துள்ளார்.

இங்கு தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் தொழில்நுட்பம் சாராத இருவகை பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. நாடு முழுவதும் உள்ள இந்நிறுவனத்தின் பணியாளர்கள், டீலர்கள் ஆகியோருக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படும்.

ஹார்லி டேவிட்சன் நிறுவனத் தயாரிப்புகள் இந்தியாவில் 2009-ம் ஆண்டிலிருந்து விற்பனை செய்யப்படுகின்றன. ஸ்டிரீட் 750, ஸ்டிரீட் ராட் உள்ளிட்ட பிரபல மாடல்கள் உள்பட 14 மாடல் பைக்குகள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியா முழுவதும் 27 விநியோகஸ்தர்கள் உள்ளனர்.

வெறுமனே பிரீமியம் மோட்டார் சைக்கிள் விற்பனையில் ஈடுபடாமல், தங்களது வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் அனைத்து சேவைகளும் கிடைக்கச் செய்வதன் ஒரு பகுதியாக பல்கலைக் கழகம் தொடங்கப்படுவதாக மெக்கன்ஸி தெரிவித்தார்.

அடுத்த கட்டமாக கிராமப் பகுதிகளிலும் தங்களது தயாரிப்புகளை கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஹார்லி டேவிட்சன் பல்கலைக் கழகம், இந்நிறுவனத் தயாரிப்புகள் மீதான அபிப்ராயத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று நம்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x