Last Updated : 03 Oct, 2017 09:42 AM

 

Published : 03 Oct 2017 09:42 AM
Last Updated : 03 Oct 2017 09:42 AM

வேலை வரும் வேளை! 02 - இதற்கு ‘நீட்’ குறுக்கே இல்லை!

உணவுப் பண்டங்கள் என்றால் எனக்கு அலாதிப் பிரியம். சாப்பிடுவது மட்டுமல்ல, சமைக்கவும், உணவுப் பண்டங்களைப் பற்றி அறிவியல்பூர்வமாகப் படிக்கவும் மிகவும் பிடிக்கும். அதே நேரத்தில் கேட்டரிங் டெக்னாலஜி, நியூட்ரீஷியன் படிப்புகள் அல்லாமல் ஏதாவது புதிய படிப்பு படிக்க ஆசை.

- ரஞ்சித் குமார், புதுச்சேரி

உலக அளவில் பழங்களின் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆனால், அவ்வாறு உற்பத்தியாகும் பழங்களை முறையாகப் பதப்படுத்தத் தவறுவதால் மூன்றில் ஒரு பங்கு பழங்கள் வீணாகுகின்றன. அவசர கதியில் இயங்கும் இன்றைய உலகில் வீட்டில் தயாரிக்கப்படும் உணவுக்கு இணையாகப் பதப்படுத்தப்பட்ட உணவுப் பண்டங்களும் மெள்ள நமது இல்லங்களுக்குள் நுழைந்து அன்றாட உணவில் கலந்துவிட்டன. இத்துறையில் குறுகிய காலத் திறன் பயிற்சி பெற்றவர்கள் முதல் ஃபுட் டெக்னாலஜி பட்டம் பெற்றவர்கள்வரை தகுதிக்கு ஏற்ப வாய்ப்புகள் உள்ளன. மேலும் கடல்சார் உணவும் பெரும்பங்கு உணவு பதப்படுத்தும் துறையில் வகிக்கிறது.

பிளஸ் 1 படித்துக்கொண்டிருக்கிறேன். என்னுடைய அக்கா பிளஸ் டூவில் பெரும்பாலான அறிவியல் பாடங்களில் சதம் எடுத்தும் நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததனால் எம்.பி.பி.எஸ். சேர முடியாமல் கால்நடை மருத்துவம் சேர்ந்திருக்கிறார். எனக்கும் மருத்துவம் தொடர்பான படிப்புகள் படிக்க ஆசை. ஆனால், இதில் வேறென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதைத் தெளிவுபடுத்துங்களேன்.

- முத்துமாரி, தேனி

மருத்துவ உலகில் மிக முக்கியமானவர்கள் துணை மருத்துவர்கள். அறுவைச் சிகிச்சை அரங்குகளை ஆயத்தப்படுத்தவும், மயக்கமருந்து உபகரணங்களைக் கையாளவும், செவிலியர்கள் உட்படப் பல்வேறு உட்பிரிவுகளில் துணை மருத்துவப் பட்டயம், பட்டம் பெற்றவர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். உதாரணமாக டயாலிஸிஸ் டெக்னீசியன்கள், ரெஸ்பிரேட்டரி டெக்னீசியன்கள், இமேஜிங் டெக்னாலஜி – ரேடியாலஜி- எக்ஸ்ரே டெக்னீசியன்கள், கத்திட்டரைசேஷன் செய்பவர்கள் எனப் பல நிபுணர்கள் உள்ளனர். குறிப்பாக வயதானவர்களை அருகில் இருந்து கவனிக்க ஹோம் நர்ஸ்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றனர். ஆனால், இத்துறைகளில் பயிற்சி பெற்றவர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். பேராமெடிக்கல் என்னும் இந்தத் துறைகளுக்குள் நுழைய இதுவரை நீட் தேர்வு குறுக்கே வரவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். 

‘வேலை வரும் வேளை’ கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை முன்னாள் இணை இயக்குநர் இரா. நடராஜன்.

வாசகர்கள் தங்களுடைய படிப்பு மற்றும் பணி வாழ்க்கை தொடர்பான சந்தேகங்களை இப்பகுதிக்கு அனுப்பலாம்.

முகவரி: வெற்றிக்கொடி,

தி இந்து-தமிழ் நாளிதழ், கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை-600 002,

மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x