Published : 15 Oct 2017 12:22 PM
Last Updated : 15 Oct 2017 12:22 PM

மனைவியே மந்திரி: பிரியமான தோழி ப்ரியா - இயக்குநர் அட்லி

தோ

ழியே மனைவியாவது எவ்வளவு பெரிய கொடுப்பினை என்பதை ஒவ்வொரு நாளும் உணரவைக்கிறார் என் மனைவி ப்ரியா.

பிரியமான தோழி

ஒருநாள் அவருக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்று என்னிடம் அவருடைய நண்பர்கள் சொன்னார்கள். “என் ஜாதகம் தருகிறேன், வேண்டுமானால் பார்க்கச் சொல்” என்று ப்ரியாவிடம் சொன்னேன். “என்ன இப்படிச் சொல்கிறாய்?” என்று அவர் பதறினார். “உண்மையைத்தான் சொல்கிறேன்” என்றேன். அப்படியே வளர்ந்து, பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு நடக்க வேண்டிய திருமணம், ரொம்ப சாதாரணமாக இரு வீட்டாரும் பேசி நடந்தது.

ஆம், எட்டு ஆண்டுகள் நண்பர்களாக இருந்தோம். எங்களுடையது இருவர் வீட்டிலும் பேசி நிச்சயிக்கப்பட்ட காதல் திருமணம். நேற்றும் இன்றும் என்றும் ப்ரியா எனக்குப் பிரியமான தோழிதான்.

மகிழ்விக்கும் கலை

என் மனைவிக்கு அவ்வப்போது பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தாண்டி, அவரால் மறக்க முடியாத தருணங்களை உருவாக்குவேன். திருமணத்துக்குப் பிறகான முதல் பிறந்தநாளை மாலத்தீவில் உள்ள தனித் தீவில் கேக் வெட்டி கொண்டாடினோம். அவருக்காக நான் இயக்கிய படம் ஒன்றை புரொஜக்டர் வைத்து திரையிட்டுக் காட்டினேன். ‘உலகத்தில் யாருக்குமே இப்படி நடந்திருக்காது’ என்று ப்ரியா தன் மனதுக்குள் நினைத்துக்கொண்டதை உணர்ந்தேன். எவருமே பிறந்தநாள் கொண்டாடாத ஓர் இடத்துக்கு அழைத்துபோய்க் கொண்டாடியபோது, நெகிழ்ச்சியில் அவர் கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள், எங்கள் கொண்டாட்டத்தை எட்டிப் பார்த்தன.

மழலையாக்கும் தாய்

என் சிறு வயதில் ஆசைப்பட்டு அனுபவிக்க முடியாத விஷயங்களை எப்போதாவது பேச்சுவாக்கில் ப்ரியாவிடம் சொல்லியிருப்பேன். அதையெல்லாம் மனக்குறிப்பில் பதிந்துவைத்து, சரியாக எனது பிறந்தநாளன்று அவற்றைப் பரிசாக நிறைவேற்றித் தருவார். கடந்த 31-வது பிறந்த நாளுக்கு 31 பொருட்களைப் பரிசாக அளித்தார். அவற்றை ஒரே நேரத்தில் மொத்தமாகத் தராமல், ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒவ்வொன்றாகத் தந்து அசத்தினார். சிறு வயதில் எனக்குப் பிடித்த ரிமோட் கார் வாங்க முடியாததை நினைவு வைத்துக்கொண்டு ஒரு ரிமோட் காரும் வாங்கிக் கொடுத்தார். அதைவைத்து அவ்வப்போது வீட்டில் விளையாடுவேன். என்னுள் புதைந்திருக்கும் மழலையை மீட்டெடுத்து ஒரு தாயாக மாறி அன்பூட்டுவார்.

சிறு வயதிலிருந்தே நாய்க்குட்டி வளர்க்க வேண்டும் என்று ஆசை. அப்போது நாங்கள் வாழ்ந்த வீடு மிகவும் சிறியது என்பதால் நாய் வளர்ப்பதற்கான வசதி கிடையாது. என் பிறந்தநாளுக்கு ‘பெக்கி’ என்ற பெயருடைய நாய்க்குட்டியை வாங்கிக் கொடுத்தார். எங்களுடைய மகன் அவன்தான். என் வாழ்க்கையில் மிகவும் நெகிழ்ந்த தருணம் அது.

உளவியல் ஆலோசகர்

வாழ்க்கையில் எல்லாவற்றையும் பக்குவமாக அணுகுவது எப்படி என்பதை ப்ரியாவிடம் கற்றுக்கொண்டேன். திரைப்பட வேலைகளில் நான் நினைத்தது சரியாக வரவில்லை என்றால், உடனே எனக்குக் கோபம் வந்துவிடும். அவரோ, “எதற்கெடுத்தாலும் கோபப்படாதே” என்று அன்போடு சொல்வதுடன் நிற்காமல், எப்படி அந்தச் சூழ்நிலையைப் பதற்றமின்றி, கோபப்படாமல் எதிர்கொள்ள வேண்டும் எனவும் சொல்லிக் கொடுப்பார். மனைவி வந்த பிறகு நிறையவே மாறியிருப்பதாகப் படப்பிடிப்பு தளத்தில் சொல்வார்கள். என் உள்ளம் கவர் உளவியல் ஆலோசகரும் அவர்தான்!

சிறந்த நிர்வாகி

என் குடும்பத்தை நிர்வகிப்பதே அவர்தான். எனது தோளிலிருந்த மிகப் பெரிய சுமையை அவர் எடுத்துக்கொண்டார். இதனால், திரைத் துறையில் முழு ஈடுபாட்டுடன் வேலை செய்ய முடிகிறது. வீட்டுக்கு என்ன தேவை, என் அப்பா - அம்மாவுக்கு என்ன தேவை என அனைத்தையும் சரியாகத் திட்டமிட்டுச் செய்வார். எந்தவொரு இடத்திலும் தவறு நடக்காது. யாரையும் முகம் சுளிக்க விடவே மாட்டார். இதுபோன்ற பல நல்ல விஷயங்களை நான் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

அவருக்குச் சமைக்க வேண்டும் என்று ஆசைதான். ஆனால், என் அம்மா அதற்கு அனுமதிக்காமல் சமையலைத் தானே கவனித்துக்கொள்வார். சில முக்கியமான நாட்களில் மட்டும் ப்ரியா சமைப்பார். அது மட்டுமன்றி, நான் என்ன உணவு சாப்பிட்டால் நல்லது என்று திட்டமிடுபவர் என் மனைவிதான்.

சக பயணி

எங்கு சென்றாலும் என்னுடனேயே இருப்பார். அவரை ஒருபோதும் மிஸ் பண்ணவே மாட்டேன். திருமணத்துக்குப் பிறகு அவர் இன்றி எங்கும் சென்றதே இல்லை. படப்பிடிப்புத் தளத்தில் அருகில் உட்கார்ந்து எனது இயக்கத்தை ரசிப்பார். படப்பிடிப்பில் ஒன்றாகவே மதிய உணவு சாப்பிடுவோம். எனது அனைத்துப் பயணங்களிலும் அவர் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன், அவரும் அதையே விரும்புகிறார். என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒருவர் என்னுடனேயே பயணிக்கிறார் என்பதில் அளவு கடந்த மகிழ்ச்சி. எனது சந்தோஷம், துக்கம் என அனைத்தும் தெரிந்த அன்பர் அவர்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x