Last Updated : 29 Oct, 2017 12:31 PM

 

Published : 29 Oct 2017 12:31 PM
Last Updated : 29 Oct 2017 12:31 PM

நாட்டு நடப்பு: வீடு தேடிவரும் மருத்துவர்கள்

றுமையும் வறட்சியும் சூழ்ந்த ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்திலுள்ள கதிரி பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் மும்பை, டெல்லி, புனே நகரங்களுக்குக் கடத்திச் செல்லப்படுகின்றனர். மாநகரங்களில் வேலையும் நல்ல கூலியும் உண்டு என்ற நம்பிக்கையுடன் செல்லும் பெண்கள் அங்கே பாலியல் தொழிலில் தள்ளப்படுகின்றனர். பாலியல் தொழிலிலிருந்து தப்பித்தும் மீட்கப்பட்டும் மீண்டும் கதிரி திரும்பும் பெண்கள் சமூகப் புறக்கணிப்புடன் பாலியல் நோய் சார்ந்த சிக்கல்களையும் எதிர்கொள்கிறார்கள். அவர்களுக்கு ஆறுதலாக பதலப்பள்ளி-கதிரி சாலையிலிருக்கும் தொற்றுநோய் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் கிராமத்துக்கே வந்து சிகிச்சை தருகின்றனர்.

கதிரியைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு வரும் மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் நோயாளிப் பெண்களைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொண்டு அவர்களது வீட்டுக்கே போய் சிகிச்சை அளிக்கின்றனர். பெரும்பாலும் பாலியல் நோய் பாதிக்கப்பட்ட பெண்களின் சிகிச்சைக்கே அவர்கள் முக்கியத்துவம் தருகின்றனர். “மருத்துவமனையின் சுவர்களைத் தாண்டியும் அவர்களுக்கு சிகிச்சை செய்யச் செல்வதற்கான நியாயமுள்ளது” என்கிறார் மருத்துவமனையின் இயக்குநரான கெரார்டோ ஆல்வாரஸ் உரியா.

பாலியல் நோய் பாதித்த பெண்களைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ளவும் சிகிச்சை முறையைத் திட்டமிடவும் மருத்துவப் பணியாளர்கள் வலைப்பின்னலையும் உருவாக்கியுள்ளனர்.

வீட்டு சிகிச்சையின் தேவை

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் 21 லட்சம் பேரை எச்.ஐ.வி. பாதித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதில் அதிகம் பாதிக்கப்பட்டோர் ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் உள்ளனர். அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள 40 லட்சம் பேரில் 25 ஆயிரம் பேர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள். தொடர்ந்த இடம்பெயர்தல், சமூக விலக்கம் தொடர்பான அச்சம் காரணமாக இன்னும் தெரியவராத எச்.ஐ.வி. நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

‘எச்.ஐ.வி. நோய் ஒழுக்கமின்மை சார்ந்த பிரச்சினையாகப் பார்க்கப்படுவதால் முதல் தடவை சிகிச்சைக்கு வந்தாலும் தவறான முகவரியை அளித்துவிட்டுச் செல்லும் பெண்கள்தான் அதிகம். அதனால்தான் வீடுகளுக்கே சென்று சிகிச்சை தர வேண்டியிருக்கிறது” என்கிறார் மருத்துவ ஆலோசகர் சகுந்தலா பயல்லா.

அரசின் உதவிக் கரம்

இந்தத் தொற்றுநோய் மருத்துவமனையை ‘ரூரல் டெவலப்மெண்ட் ட்ரஸ்ட்’ என்ற தொண்டு நிறுவனம் நடத்திவருகிறது. இதில் 82 படுக்கைகள் உள்ளன. இந்த மருத்துவமனைக்கு இலவச மருந்துகள், பரிசோதனைப் பொருட்கள் மற்றும் பயிற்சிகளை அரசே வழங்குகிறது.

இங்குள்ள மருத்துவப் பணியாளர்கள், தாதிகள், தன்னார்வலர்கள் எல்லோருடைய ஆத்மார்த்தமான பணியால் இங்கு முதன்முறை வரும் பெண்கள்கூட மிகுந்த நம்பிக்கையைப் பெறுகின்றனர். அவர்களுக்குப் பயணம் செய்துவருவதில் சிக்கல்கள் இருந்தால் அவர்கள் வீட்டுக்கே வந்து மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் வீடு திரும்புகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x