Last Updated : 26 Sep, 2017 11:10 AM

 

Published : 26 Sep 2017 11:10 AM
Last Updated : 26 Sep 2017 11:10 AM

சேதி தெரியுமா?- அணு ஆயுதத் தடைக்கு 50 நாடுகள் ஆதரவு

அணு ஆயுதத் தடைக்கு 50 நாடுகள் ஆதரவு

ணு ஆயுதங்களைத் தடை செய்வதற்கான ஒப்பந்தத்தில் 50 நாடுகள் செப்டம்பர் 20 அன்று கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தில் முதலில் பிரேசில் கையெழுத்திட்டது. அதைத் தொடர்ந்து அயர்லாந்து, இந்தோனேஷியா, வெனிசுவேலா, அல்ஜீரியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியிருக்கின்றன. கடந்த ஜூலை மாதம் ஐ.நா. கொண்டுவந்த அணு ஆயுதத் தடைக்கான ஒப்பந்தத்துக்கு 122 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. இதுவரை இந்த ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்திட்டிருக்கும் நிலையில், அணுசக்தி நாடுகள் இந்த அணு ஆயுதத் தடை வெற்றிபெறாது என்று தெரிவித்திருக்கின்றன.

உலகின் முதல் மூலக்கூறு ரோபோட்

லகின் முதல் மூலக்கூறு (molecular) ரோபோட்டை மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். மூலக்கூறுகளைக் கட்டமைக்கவும், புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்கவும் இந்த ரோபோட்டைப் பயன்படுத்த முடியும். ஒரு மில்லிமீட்டரில் பத்து லட்சத்தில் ஒரு பங்கு அளவில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தச் சிறிய ரோபோட், 150 கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன் அணுக்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்த ஆய்வுக் கட்டுரை,‘நேச்சர்’ இதழில் செப்டம்பர் 21-ம் தேதி வெளியானது. இந்த ரோபோட் தனியாக ஒரு மூலக்கூறை உருவாக்கும் திறனைக் கொண்டது. அளவைப் பொறுத்தவரை, இவ்வகை 100 கோடி ரோபோட்கள் ஒன்றின் மேல் ஒன்றாக ஏறி நின்றாலும் ஒரு உப்புக் கல்லின் அளவுதான் இருக்கும்.

இந்தியாவின் முதல் மின்சாரப் பேருந்து

இந்தியாவின் முதல் மின்சாரப் பேருந்து சேவை இமாச்சலப் பிரதேசத்தின் சுற்றுலாத் தளமான ரோத்தாங் கணவாயில் செப்டம்பர் 21-ம் தேதி தொடங்கப்பட்டது. தேசியப் பசுமை தீர்ப்பாயம் (NGT), பலவீனமான சுற்றுச்சூழல் பகுதிகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களைக் கட்டுப்படுத்த உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவால் மின்சாரப் பேருந்து சேவையைத் தொடங்கியிருக்கிறது இமாச்சலப் பிரதேச அரசு. 13,000 அடி உயரத்தில் இந்த மின்சாரப் பேருந்து சேவை சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. தற்போது, மணாலியிலிருந்து ரோத்தாங் கணவாய்வரை 10 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கார்பன் உமிழ்வால் இமய மலை பனிப்பாறைகள் உருகுவது இந்த முயற்சியால் கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரிய ஓபன் பட்டம் வென்ற பி.வி. சிந்து

இந்தியாவின் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, 2017 கொரிய ஓபன் பட்டத்தை செப்டம்பர் 17-ம் தேதி வென்றார். கொரியாவின் தலைநகரான சியோலில் நடைபெற்ற இந்தத் தொடரில், மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நோசாமியை எதிர்த்து விளையாடினார் சிந்து. இதில் நோசாமியை 22-20, 11-21, 20-18 செட் கணக்கில் தோற்கடித்து கொரிய ஓபன் பட்டத்தை வென்றிருக்கிறார். இந்த வெற்றியால் கொரிய ஓபன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் சிந்து. தற்போது, இவர் உலக பாட்மிண்டன் தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளார்.

திறக்கப்பட்டது சர்தார் சரோவர் அணை

பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் சர்தார் சரோவர் அணையை செப்டம்பர் 17-ம் தேதி திறந்துவைத்தார். 56 ஆண்டுகளுக்கு முன் இந்த அணைக்கு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அடிக்கல் நாட்டினார். இந்த அணையின் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, இந்த அணையை நாட்டுக்கு அர்ப்பணம் செய்வதாகத் தெரிவித்தார். ஏப்ரல் 5, 1961-ல் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த அணைத் திட்டம், அந்தப் பகுதியில் வசித்துவந்த பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகளால் நிறைவடைவதற்கு 56 ஆண்டுகளானது. இந்த அணையிலிருந்து உருவாக்கப்படும் மின்னாற்றல், மகாராஷ்ட்ரா (57%), மத்தியப் பிரதேசம் (27%), குஜராத் (16%) என மூன்று மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

இந்தியா, ரஷ்யா முயற்சியில் வங்கதேச அணு உலை!

ங்கதேசத்தில் அமைக்கப்படும் ரூப்பூர் அணு உலையை இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து கட்டமைக்கப்போவதாக செப்டம்பர் 20-ம் தேதி அறிவித்தன. மூன்றாம் உலக நாடுகளுக்கு அணுசக்தி திட்டங்களுக்கு உதவிசெய்யும் இந்திய-ரஷ்யா ஒப்பந்தத்தின்படி இந்த முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச அளவில் இந்தியாவால் தொடங்கப்படும் முதல் அணு சக்தி திட்டமாக இது அமைந்திருக்கும். வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவில் அமைக்கப்படும் இந்த ரூப்பூர் அணு உலை அமையவிருக்கிறது. ஆனால், இந்தியா, வங்கதேசம் என இரண்டு நாடுகளும் அணு வினியோகக் குழுவில் உறுப்பினராக இல்லாததால் இந்த அணுசக்தி ஒத்துழைப்பு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

பிரம்மபுத்ராவில் மிதக்கும் ஆய்வுக்கூடம்!

த்திய உயிரித்தொழில்நுட்பத் துறை, பிரம்மபுத்ரா ஆற்றில் பல்லுயிர் பெருக்கத்தையும் சூழலமைப்பையும் ஆய்வுசெய்வதற்கு மிதக்கும் ஆய்வுக்கூடங்களை அமைக்கப்போவதாக செப்டம்பர் 20-ம் தேதி அறிவித்திருக்கிறது. பி-4 (Brahmaputra Biodiversity and Biology Boat) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த மிதக்கும் ஆய்வுக்கூடம், பிரம்மபுத்ரா ஆற்றில் அமைந்திருக்கும் மாஜுலி தீவைப் பாதுகாக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. வரும் டிசம்பர் மாதம் தொடங்கப்படவிருக்கும் இந்தத் திட்டத்துக்கு 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அணைகள், பருவநிலை மாற்றம், மனிதத் தலையீடுகள் போன்றவை ஆற்றின் சூழலமைப்பை எவ்வாறு பாதிக்கின்றன என்பதும் இந்தத் திட்டத்தில் ஆராய்ச்சி செய்யப்படும்.

முதல் நீர்மூழ்கிக் கப்பல்!

முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் நீர்மூழ்கி கப்பலான ‘ஐ.என்.எஸ். கல்வரி’ (INS Kalvari) மும்பையில் இந்தியக் கடற்படையிடம் செப்டம்பர் 21-ம் தேதி ஒப்படைக்கப்பட்டது. புலிச் சுறாவின் (Tiger shark) பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த நீர்மூழ்கி கப்பல், ‘திட்டம்-75’-ன் படி மும்பையின் மஸாகன் கப்பல்துறையில் தயாரிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் ஃபிரஞ்சு நிறுவனம் டி.சி.என்.எஸ். (DCNS) உடன் இணைந்து இந்த நீர்மூழ்கிக்கப்பலை இந்திய கடற்படை தயாரித்தது. 1550 டன்கள் எடையுடைய இந்த நீர்மூழ்கிக்கப்பல், டீசல்-மின்சாரத்தில் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x