Published : 29 Sep 2017 12:18 PM
Last Updated : 29 Sep 2017 12:18 PM

சிம்புதான் எனக்கு எல்லாமும்!- சந்தானம் நேர்காணல்

‘‘ஒரு நல்ல ஹீரோவுக்கு ஆக்‌ஷன், நடனம் இது இரண்டும்தான் ரொம்ப முக்கியம். சமயத்தில் நடனத்துலக்கூட ஏதாவது கொஞ்சம் மேனேஜ் பண்ணிக்கலாம். ஆனா, ஒரு ஹீரோவோட பரிமாணம் ஆக்‌ஷன் காட்சிகளில்தான் முழுமையாக வெளிப்படும். அதில் கொஞ்சமும் சமரசம் செய்துகொள்ளாமல் உழைப்பைக் கொடுக்கணும் என்பதுதான் இப்போ என் நோக்கமாக இருக்கிறது’’ – உங்களை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக அடையாளப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறீர்களே என்ற கேள்விக்கு சந்தானம் அளித்த பதில் இது.

வரும் நவம்பரில் ‘சக்கப்போடு போடு ராஜா’, அடுத்தடுத்து,‘சர்வர் சுந்தரம்’, ‘மன்னவன் வந்தானடி’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’ என்று ஹீரோ சந்தானத்தின் நடிப்பு டைரி நிரம்பி வழிகிறது. ‘தி இந்து’வுக்காக அவர் அளித்த விரிவான பேட்டியிலிருந்து…

‘சக்கப்போடு போடு ராஜா’ என்ன மாதிரியான படம்?

காதல், காமெடி, ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல்தான். இரண்டரை மணி நேரம் கவலையை மறந்து இருக்கணும்னுதான் மக்கள் தியேட்டருக்கு வர்றாங்க. அந்த மனநிலைக்கு மருந்து போடுறதுதான் இந்த ஹீரோவோட வேலை. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை கூலா எதிர்கொள்கிற கதாபாத்திரம். இந்தமாதிரிதான் வாழணும்னு நானே ஆசைப்படும் ஒரு கதை.

29chrcj_santhanam 1

இந்தப் படத்துக்கு சந்தானம், விவேக் கூட்டணி எப்படிச் சாத்தியமானது?

ஹீரோவா நான் கதைக்குள்ள இருக்குறதால காமெடிக்கு வேற ஒரு நடிகர் தேவை. அப்போ வடிவேலு சார், விவேக் சார் ரெண்டு பேரும்தான் நினைவுக்கு வந்தாங்க. அதுவும் இந்தக் களத்துக்கு விவேக் சார் நல்லாவே பொருந்துவார்னும் தோணுச்சு. கேட்டோம். உடனே ஓ.கே சொன்னார். நானும் - ஆர்யாவும், நானும் - உதயநிதியும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? அந்தமாதிரிதான். எங்க ரெண்டு பேரோட டைமிங் சென்ஸும் படத்துக்குப் பலமா இருக்கும். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் ‘இவ்ளோ நாளா.. விவேக் சாரை மிஸ் பண்ணிட்டோமே’ன்னு நினைக்கவைத்தார்.

‘சர்வர் சுந்தரம்’ நாகேஷ் படத் தலைப்பு. எந்த வகையில் அவருக்குக் கவுரவம் சேர்க்கும்?

இது முழுக்க ஒரு சமையல் கலைஞன் பத்தின கதை. படத்தோட இயக்குநர் ஆனந்த் பால்கி கேட்டரிங் படித்துவிட்டு அந்த வாழ்க்கையைப் படமாக்க வந்தவர். நிச்சயம் இந்தமாதிரி ஒரு கதைக் களத்தை அவர் மாதிரியான ஒருவரால் மட்டும்தான் உருவாக்க முடியும். ஹோட்டல், சமையல், சர்வர் என்று கதை சுழல்வதால் ‘சர்வர் சுந்தரம்’ என்ற தலைப்பு பொருத்தமாக இருந்தது..

நீங்கள் கல கல பேர்வழி. இயக்குநர் செல்வராகவன் சீரியஸான மனிதர். ‘மன்னவன் வந்தானடி’ கூட்டணியை நம்பவே முடியலையே?

அதுவும் பெரிய காமெடிதான். அவரோட ‘7ஜி ரயின்போ காலனி’ படத்தை நான் ‘லொள்ளு சபா’வில் பயங்கரமாக கிண்டல் பண்ணியிருப்பேன். என்னிடம் பேசும்போது, ‘நானும் ஜாலியான, கிண்டலான ஆள்தான். படங்கள், அது வெளிக்கொண்டுவரும் கதாபாத்திரங்கள் என்னை வேறு மாதிரி பார்க்க வைத்துவிட்டது’ என்றார். அதோடு, ‘நீங்களும் நானும் சேர்ந்தால் புதுமையாக இருக்கும்’ என்றும் சொன்னார். அப்படி அமைந்ததுதான் எங்கள் கூட்டணி. 80 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டோம்.

படங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் நகைச்சுவை பகுதி எழுதிய அனுபவம் கொண்டவர் நீங்கள். எதிர்வரும் நாட்களில் திரைக்கதை எழுதும் எண்ணம் இருக்கிறதா?

ஏன்.. படம் இயக்கும் எண்ணமே உள்ளது. கதைகள் எழுதி வைத்திருக்கிறேன். கண்டிப்பாக நீங்க எல்லோரும் எதிர்காலத்தில் என்னை இயக்குநராகப் பார்த்தே ஆகவேண்டும்.

உங்கள் நண்பர், உங்கள் படத்தின் இசையமைப்பாளர் சிம்பு என்ன சொல்கிறார்?

‘மன்மதன்’ படத்தில் மலர்ந்த அன்பு. எல்லாக் காலகட்டத்திலும் எனக்கு காட் ஃபாதராக இருப்பது என் நண்பன் சிம்புதான். காமெடியில் இருந்து ஹீரோன்னு வந்ததும், ‘உன் படத்துக்கு நான் இசையமைக்கிறேன்’ என்பதெல்லாம் எவ்வளவு பெரிய விஷயம். ‘சக்கப்போடு போடு ராஜா’ படத்தோட பாடல்கள் ரொம்ப அருமையாக வந்திருக்கிறது. அக்டோபரில் இசை வெளியீட்டு விழா. என் எல்லாத் தருணங்களிலும் நண்பன் சிம்பு கூடவே இருப்பது எனக்கு மிகப் பெரிய பலம்.

மற்ற நடிகர்களுடன் சேர்ந்து காமெடியனாக நடித்தபோது பார்த்த ஹீரோக்கள் இப்போது உங்களோடு எந்த மாதிரி பழகுகிறார்கள்?

ஒன்றும் பிரச்சினை இல்லை. அப்போ எப்படியோ அதேமாதிரிதான். இப்பவும் இருக்காங்க. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’னு பிஸியாக இருந்த நேரத்தில் நண்பன் ஆர்யா போன் பண்ணி, ‘என்ன மச்சி! நீ அப்படியே விட்டு போய்ட்டே. ரெண்டு, மூணு காமெடி நடிகர்களை வளர்த்துவிட்டுட்டு போயிருக்கலாமே’ன்னு சொல்லுவார். உதயநிதி, ‘நான் உங்கக்கூட காமெடி பண்ண வரட்டுமா’ன்னு ஜாலியா பேசுவார். திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை பண்ண வேண்டாமேன்னுதான் ஹீரோன்னு வந்தேன். இங்கேயும் சில வருஷங்களுக்கு பிறகு போர் அடித்தால் முன்னாடி சொன்ன மாதிரி டைரக்‌ஷன்குள்ள போயிடுவேன். எப்பவும் கிரியேடிவிடியோட இருக்கணும். அவ்வளவுதான்.

‘ஓடி ஓடி உழைக்கணும்’ படம் எந்த நிலையில் உள்ளது?

50 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டோம். போலீஸ் கதை. முழுக்க காமெடி, திரில்லர் வகை படம். எனக்கு முதன் முறையாக போலீஸ் அவதாரம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கே.எஸ்.மணிகண்டன். படம் நன்றாக வந்துகொண்டிருக்கிறது.

அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை டைமிங் காமெடியில் கொண்டு வந்து அசத்தும் சந்தானம் தற்போதைய தமிழக அரசியல் சூழலை எப்படிப் பார்க்கிறார்?

அரசியலில் இப்போ நடந்துக்கிட்டிருக்கிற காமெடி விஷயங்களை தாண்டி பெரிய காமெடி டிராக்கை படத்தில்கூட வைக்க முடியாதுன்னுதான் தோணுது. நாம வாழ்ந்த காலகட்டத்தில் இப்படி எல்லாம் அரசியலில் காமெடி நடந்திருக்கேன்னு பின்னாடி சொல்லிக்கிற மாதிரி ஒரு அனுபவம். வேறென்ன சொல்வது. அவ்வளவுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x