Published : 18 Sep 2017 11:12 AM
Last Updated : 18 Sep 2017 11:12 AM

சாதிக்குமா சாம்சங் நோட் 8

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சாம்சங் நிறுவனத்துக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. சாம்சங் நோட் 7 ஸ்மார்ட்போனை அவ்வளவு எதிர்பார்ப்புடன் வெளியிட்டார்கள். ஐபோன் 7 மாடல் ஸ்மார்ட்போனுடன் நிச்சயம் போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்நிறுவனம் சந்திக்காத பிரச்சினை நோட் 7 ஸ்மார்ட்போனில் எழுந்தது. நோட் 7 ஸ்மார்ட்போனில் உள்ள பேட்டரி கோளாறு காரணமாக ஸ்மார்ட் போன் வெடித்த நிகழ்வு சில இடங்களில் ஏற்பட்டது. பின்னர் விமானங் களில் கூட அந்த ஸ்மார்ட் போன் வெடித்த நிகழ்வு அந்நிறுவனத்துக்கு அதிர்ச்சியை தந்தது. விமானத்தில் சாம்சங் நோட் 7 ஸ்மார்ட்போனை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

அதன் பிறகு அனைத்து ஸ்மார்ட்போனையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாக சாம்சங் நிறுவனம் அறிவித்தது. இது அந்த நிறுவனத்துக்கு மிகப் பெரிய நெருக்கடியையும் தந்தது. ஆனால் இந்த ஆண்டு அதே செப்டம்பர் மாதம் நோட் 8 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி அனைவரையும் திரும்பி பார்க்கவைத்துள்ளது. தொழில்நுட்ப வகையில் அனைத்து அம்சங்களுடன் ஐபோன் 8 உடன் போட்டி போடும் வகையில் மிக பிரமாண்டமாக சாம்சங் நோட் 8 சில தினங்களுக்கு முன் அறிமுகப்படுத்தியுள்ளது. அப்படி என்னென்ன சிறப்பு தொழில் நுட்பம் இதில் இருந்து விட போகிறது என்பவர்களுக்கு சில சாம்பிள் விஷயங்கள்..

பிக்ஸ்பி தொழில்நுட்பம்

உலகத்தின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நோக்கி வேகமாக நடைபோட்டுக் கொண்டிருக்கின்றன. அதற்கான பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இதை சரியாக புரிந்து கொண்ட சாம்சங் நிறுவனம் புதிய நோட் 8 ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளது. பிக்ஸ்பி என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் உங்களது குரல் வழி மூலம் உங்களது போனை இயக்கமுடியும். உதாரணமாக நீங்கள் ரவி என்பவருக்கு `ஹாய்’ என்று குறுஞ்செய்தி அனுப்பச்சொன்னால் அதுசெய்துவிடும். பிக்ஸ்பிக்கு என்று தனியான பொத்தான் ஒன்றும் ஸ்மார்ட்போனில் இருக்கிறது.

பின்புறம் இருபக்க கேமரா

முதன்முறையாக சாம்சங் ஸ்மார்ட்போனில் பின்புறம் இரண்டு கேமராக்கள் உள்ளன. இரண்டு கேமராக்களும் 12 மெகாபிக்ஸல் திறன் கொண்டவை. ஒரு கேமரா வைட் ஆங்கிளை எடுப்பதற்கும் இரண்டாவது கேமரா ஜூம் செய்து எடுப்பதற்கும் பிரத்யேகமாக வைத்துள்ளனர். இரு கேமராக்களையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும்.

அதுமட்டுமல்லாமல் 6.3 அங்குல அளவுக்கு மிக நீண்ட திரை உள்ளது. திரை நீளமே சாம்சங் நோட் 8 வெற்றிக்கு காரணமாக இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சாம்சங் நோட் 8 வெளியான அன்று ஐபோன் 8 வெளியானது. இந்தியாவில் பிரீமியம் ஸ்மார்ட்போன் பிராண்டில் சாம்சங் 68 சதவீத சந்தையை வைத்துள்ளது. அதை தக்கவைத்துக் கொள்ள பலவேறு புதிய தொழில்நுட்பங்களை சாம்சங் நிறுவனம் நோட் 8-ல் பயன்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் ஐபோன் சந்தையை பிடிக்கவும் திட்டமிட்டு நோட் 8 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் உத்தி வெற்றிபெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x