Published : 18 Sep 2017 10:59 AM
Last Updated : 18 Sep 2017 10:59 AM

சிக்கன நடவடிக்கையில் டாடா மோட்டார்ஸ்

ட்டோமொபைல் துறையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத் தயாரிப்புகளுக்குத் தனி இடம் உண்டு. இங்கு செயல்படும் விரல் விட்டு எண்ணக்கூடிய இந்திய நிறுவனங்களில் டாடா மோட்டார்ஸும் ஒன்று.

முதலில் கனரக வாகனம் பிறகு பொது போக்குவரத்துக்கான பஸ் இதையடுத்து இலகு ரக வாகனங்கள் மற்றும் குடும்பத்தினருக்கேற்ற கார்கள், எஸ்யுவிக்கள் என படிப்படியாக தனது தயாரிப்பை விரிவுபடுத்திக் கொண்டே வந்துள்ளது டாடா. போட்டிகள் அதிகரித்துவிட்ட சூழலில் இந்நிறுவனத்தின் லாபம் கணிசமாகக் குறைந்து வந்துள்ளது. இதனால் செலவைக் குறைக்கும் நடவடிக்கையில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளது.

முதல் கட்டமாக தாங்கள் எதில் அதிக வலுவாக இருக்கிறோம் என்பதை ஆராய்ந்து அந்தப் பிரிவில் கூடுதல் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. நிறுவனத்தின் ஆதாரமான கனரக வாகனங்கள் உற்பத்தியில் மீண்டும் கவனம் செலுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதிகரித்து வரும் போட்டி காரணமாக சமீப காலமாக இப்பிரிவு தான் கடுமையான சரிவைச் சந்தித்து வரு கிறது.

வாகனத் தயாரிப்பில் குறிப்பாக கொள்முதல் செய்வது மற்றும் பிற செலவினங்களைக் குறைக்க முடிவு செய்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் சிக்கன நடவடிக்கை மூலம் ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் வர்த்தக வாகன பிரிவின் தலைவர் கிரிஷ் வாஹ் தெரிவித்துள்ளார்.

வர்த்தக வாகனப் பிரிவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 14 சதவீத அளவுக்கு சந்தையை டாடா மோட்டார்ஸ் இழந்துள்ளது. வாகன உற்பத்தியில் செலவைக் குறைக்கும் முயற்சியாக அனைத்து வர்த்தக வாகன உற்பத்திக்கும் ஒரே மாதிரியான உற்பத்தி முறையை பின்பற்ற திட்டமிட்டுள்ளதாக வாஹ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் செலவைக் குறைப்பதோடு, வாகனங்கள் உரிய சமயத்தில் சந்தையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதற்கென கன்டெய்னர் மூலமாக சரக்குகளை டெலிவரி செய்யவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

வாகன அசெம்பிளி பிரிவில் தற்போது 99 உதிரி பாகங்களை இணைக்கும் பகுதிகள் உள்ளன. இவற்றை 33 பிரிவுகளாகப் பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை 12 மண்டலங்களாக பிரிக்கப்படும். பொதுவான பாகங்களை இணைக்கும் வசதிகள் ஒரே இடத்தில் உருவாக்கப்படும். இதனால் அனைத்து பிரிவிலிருந்தும் வரும் வாகனங்கள் இங்கு ஒருங்கிணைக்கப்படும். இதனால் செலவும் குறையும்.

எதிராளியை அறிந்துகொள்

இதுவரையில் நானே ராஜா, நானே மந்திரி என்கிற தோரணையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மட்டுமே சந்தையில் இருக்கும் சூழல் நிலவியது. ஆனால் இப்போது பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பெருகிவிட்டதால் சந்தையில் நிறுவனத் தயாரிப்புகளுக்கான விற்பனை குறைந்து வந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு முதலில் தங்களது தயாரிப்புகளுக்கு எந்நிறுவனத் தயாரிப்புகள் போட்டியாகத் திகழ்கின்றன என்பதை அறியும் முயற்சியில் டாடா மோட்டார்ஸ் இறங்கியுள்ளது.

எந்நிறுவனத் தயாரிப்புகள் என்பதை அறிந்து அவற்றைவிட சிறந்த தயாரிப்புகளை அளிப்பது, தங்களது தயாரிப்புகளின் விலையைக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் எடுக்க உள்ளது டாடா மோட்டார்ஸ். ஒவ்வொரு வாகன உற்பத்தி பிரிவிலும் ஒரு குழுவை உருவாக்கி எந்தெந்த வகையில் உற்பத்தி செலவைக்குறைக்கலாம் என்பதை ஆராய உள்ளது.

விலை குறைப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து வாடிக்கையாளரை திருப்திபடுத்தும் நடவடிக்கைகளையும் எடுக்க உள்ளது. விற்பனைக்குப் பிந்தைய சேவையை வலுப்படுத்தும் நோக்கில் 500 நடமாடும் பழுது நீக்கு மையங்களையும், கன்டெய்னரில் உள்ள பழுது நீக்கு மையங்களையும் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பழுது நீக்கு வசதிகள் கிடைக்கப் பெறாத பகுதிகளில் உள்ள வாடிக்கையாளருக்கும் இத்தகைய சேவை கிடைக்கவும், 48 மணி நேரத்துக்குள் வாடிக்கையாளரது வாகனங்களை சரி செய்து தரவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக வாஹ் கூறினார்.

துரோணர் குழு

இது என்ன மகாராபாத பெயராக உள்ளதே என்று நினைக்க வேண்டாம். வில் வித்தையில் துரோணருக்கு நிகரான குரு கிடையாது. அதைப் போல வாகனங்களை பழுது நீக்குவதில் நிபுணத்துவம் கொண்டவர்களை உள்ளடக்கிய குழு உருவாக்கப்படும். இக்குழுவுக்கு துரோணர் குழு என பெயர் சூட்டப்படும். இக்குழுவில் மிகச் சிறந்த டிரைவர்களும் இருப்பர். இவர்கள் வாடிக்கையாளரது வாகனங்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு அளிப்பர். அத்தோடு அதிக எரிபொருள் சிக்கனத்துக்கான வழிவகைகளையும் அளிப்பர். இதுவரையில் 40 துரோணர்களை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. பாரத் 4 விதிமுறைகள் கொண்ட வாகனங்கள் சந்தைக்கு வர உள்ளது. இவற்றை பழுது நீக்கும் திறன் கொண்ட 12 ஆயிரம் மெக்கானிக்குகளுக்கு நாடு முழுவதும் நிறுவனம் பயிற்சி அளித்துள்ளது.

வெளிநாடுகளிலும்…

உள்நாட்டில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள தீவிரம் காட்டி வரும் அதேவேளையில் வெளிநாடுகளிலும் புதிய சந்தை வாய்ப்புகளைக் கண்டறிய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் வருமானத்தில் வெளிநாட்டு விற்பனை வருமானம் 20 சதவீத அளவுக்கு உயரும் வகையில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது டாடா மோட்டார்ஸ்.

ஆரம்பத்தில் வந்தோம், நம்மை யாராலும் அசைக்க முடியாது என்றிருந்தால் காலப் போக்கில் வாய்ப்புகள் கைவிட்டுப் போகும் என்பதற்கு டாடா மோட்டார்ஸுக்கு ஏற்பட்டுள்ள சரிவே சிறந்த உதாரணம். புதிய நடவடிக்கைகள் நிறுவனத்துக்கு எந்த அளவுக்கு புத்துயிரூட்டும் என்பதற்கு காலம்தான் பதிலாக அமையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x