கதை: கிராமத்தில் விடுமுறை

கதை: கிராமத்தில் விடுமுறை
Updated on
2 min read

கடைசித் தேர்வை எழுதிவிட்டு, மகிழ்ச்சியாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள் தரணி, ஜோதி, தேவா மூவரும்.

"அப்பாடா... இன்னிக்கு நல்லா தூங்கணும். காலையில் மெதுவா எழணும்” என்றாள் ஜோதி.

“ஆமா. ஆனா, எனக்கு லீவ்லதான் சீக்கிரமே விழிப்பு வந்துடும்” என்று தரணி சொல்லவும் தேவாவும் ஜோதியும் சிரித்துவிட்டனர்

“நீ என்ன பண்ணப் போறே தேவா?”

“நாளைக்கு எங்க தாத்தா, பாட்டி ஊருக்குப் போறேன். அதை நினைக்கும்போதே அவ்வளவு சந்தோஷமா இருக்கு.”

“எங்கேயாவது டூர் போவேன்னு நினைச்சேன். கிராமத்துக்குப் போகணும்ங்கிறே... அங்கே பொழுது போகுமா?”

“அங்கே போனா பொழுதே எனக்குப் பத்தாது. ஒவ்வொரு நொடியும் அவ்வளவு சந்தோஷமா இருக்கும்.”

“அப்படிக் கிராமத்துல என்னதான் இருக்கும்னு எங்களுக்கும் சொல்லேன்” என்றாள் தரணி.

அப்போது சில மாணவர்கள் புளிய மரத்திலிருந்து பிஞ்சுகளைப் பறித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

"இங்கே ஒரு புளிய மரம்தானே இருக்கு, எங்க ஊருக்குப் போற வழியெல்லாம் புளிய மரங்கள்தாம். எங்க தாத்தாவோட தோப்புல புளி, பனை, தென்னை மரங்கள் எல்லாம் இருக்கு. புளியம் பிஞ்சுகளை அப்படியே சாப்பிடுவேன். உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்தும் சாப்பிடுவேன்.”

“சாப்பிடத்தான் ஊருக்குப் போறீயா?” என்று சிரித்தாள் ஜோதி.

"அதுக்கும்தான். காலையில் எழுந்ததும் பதநி குடிப்போம். அப்புறம் பருத்திப் பால் கொடுப்பாங்க பாட்டி. பணியாரம், புட்டு, இடியாப்பம், கேப்பைக் கூழ் இப்படி விதவிதமா டிபன். நான், எங்க சித்தி பிள்ளைகள், மாமா பிள்ளைகள் எல்லாரும் சாப்பிட்டுட்டு, தோப்புக்குப் போயிருவோம். அங்கே மாங்காய், கொய்யா, கீரை, மிளகாய், கத்தரி, வெண்டை, அவரை, தக்காளிகளை எல்லாம் பறிப்போம். தேங்காய் நாரை உறிப்போம். வேலை செஞ்சு களைச்சுப் போகும்போது, ஜில்லுனு இளநி குடிப்போம். நுங்கு சாப்பிடுவோம். உச்சி வெயிலில் பம்ப் செட்டில் ஒரு மணி நேரம் குளிப்போம். பசியோட வீட்டுக்கு வருவோம்...”

“நீ சொல்லும்போது எனக்கும் உங்க ஊருக்கு வரணும்னு ஆசையா இருக்குடா” என்றாள் தரணி.

“வர்றீயா?”

“எங்க வீட்ல விட மாட்டாங்கப்பா.”

“தேவா, மீதிக் கதையைச் சொல்லு.”

“அங்கே என்ன சமைச்சாலும் அது எனக்குப் பிடிக்கும். சாப்பிட்ட பிறகு ஏதாவது விளையாடுவோம். படிப்போம். நாடகம் எழுதி, நடிச்சுப் பார்ப்போம். அரட்டை அடிப்போம். நேரம் வேகமா ஓடிடும்.”

“ஆ... அப்படியா! டிவி எல்லாம் பார்க்க மாட்டீயா தேவா?”

“அதுக்கெல்லாம் அங்கே நேரம் இருக்காது. எங்களுக்கு டிவி நினைப்பே வராது.”

“எப்படிடா டிவி பார்க்காம இருக்கீங்க?”

“பொழுது போகாதவங்கதான் டிவி பார்ப்பாங்க. அவனுக்குதான் பொழுதே பத்தலையே” என்றாள் தரணி.

அப்போது வகுப்பாசிரியர் வந்தார். மூவரும் எழுந்து நின்றனர்.

“எல்லாரும் கொஞ்ச நேரம் இங்கேயே இருங்க. ஆபிஸ் ரூம் வேலையை முடிச்சிட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் ஆசிரியர்.

மூவரும் மீண்டும் அரட்டையை ஆரம்பித்தனர்.

“எங்க கிராமத்துலதான் நீச்சல், சைக்கிள், தோட்ட வேலைகளைக் கத்துக்கிட்டேன். எல்லார் கிட்டேயும் பழகக் கத்துக்கிட்டேன். விட்டுக்கொடுக்கக் கத்துக்கிட்டேன். ரொம்ப முக்கியமா உழைப்பைக் கத்துக்கிட்டேன்.”

“என்னடா சொல்றே? லீவுக்குப் போகும்போது இவ்வளவு கத்துக்கிட்டீயா?”

“எவ்வளவு வருஷமா போயிட்டிருக்கேன்...”

“பிரமாதம் தேவா.”

“பெரிய திண்ணையில் பெரியவங்களும் சின்னவங் களும் உட்கார்ந்து பேசுவோம். விளையாடுவோம். மொட்டை மாடிக்குப் போய் சாப்பிடுவோம். கதை பேசிட்டே தூங்குவோம். சில நாள் நாங்க உருவாக்கின நாடங்களை நடிச்சுக் காட்டுவோம். மாமாவும் தாத்தாவும் பரிசெல்லாம் கொடுப்பாங்க.”

“ம்... அதான் இங்கே நாடகத்துல அசத்தறே!”

“காலையில் எழுந்து வீட்டில் வளர்க்கும் கோழி, வாத்து, வான்கோழி, முயல், ஆடுகளுக்கு எல்லாம் தீனி போடுவோம்.”

“நானும் எங்க கிராமத்துக்கு இந்தத் தடவை போகப் போறேன்” என்றாள் ஜோதி.

“நானும்...” என்று தரணி சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஆசிரியர் வந்துவிட்டார். கிராமத்துக் கனவுகளுடன் மூவரும் வகுப்புக்குள் சென்றனர்.

- பிச்சிப்பூ

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in