Published : 18 Sep 2017 10:56 am

Updated : 18 Sep 2017 10:56 am

 

Published : 18 Sep 2017 10:56 AM
Last Updated : 18 Sep 2017 10:56 AM

வான் மண் பெண் 23: பசுமைப் போராட்டத்தின் எளிமை!

23

து 2011-ம் ஆண்டு. கும்மிடிப்பூண்டிக்கு அருகில் உள்ள தேர்வாய் கண்டிகை கிராமத்தில் டயர் தயாரிப்பு நிறுவனம் ஒன்று தொழிற்சாலை அமைப்பதற்காக விவசாய நிலத்தைக் கையகப்படுத்தியிருந்தது. அதை எதிர்த்துப் போராட மேதா பட்கர் சென்னை வருவதாகத் தகவல் கிடைத்தது. சில நிருபர்கள் விமான நிலையத்தில் காத்திருந்தோம். எங்களுக்கு ஆச்சரியம். சாதாரணப் புடவையில் தோளில் ஜோல்னா பையை மாட்டிக்கொண்டு அவர் வருவார் என்று தெரியும். ஆனால், அவர் மட்டுமே வந்ததை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.


பிறகு அங்கிருந்து ஒரு ஜீப்பில் அந்தக் கிராமத்துக்குக் கிளம்பினோம். கிராமத்தை அடைந்ததும், ‘மேடை எங்கே, மைக் எங்கே’ என்றெல்லாம் கேட்காமல் வழியில் தென்பட்ட பெண்களுடன் பேசினார். அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒரு பிரமுகருடன் பேசினார். இரண்டு பேரிடமும் ஒரே மாதிரியான தொனியில்தான் பேச்சு இருந்தது.

அமைப்பு சாரா தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக இன்னொரு முறை சென்னை வந்தார். அப்போது பெண்களுடன் பெண்ணாக சாலையில் அமர்ந்துகொண்டார். அவர்களுடனே உணவருந்தினார். அவரது பையில் கத்தை கத்தையாக ஆவணங்கள். அவற்றை அவ்வப்போது எடுத்துப் புரட்டினார், குறிப்பெடுத்தார். யாரிடமும் அதிர்ந்து பேசாத அவர், முன்வைத்த கருத்துகள் மாநில, மத்திய அரசுகளைக் கிடுகிடுக்க வைக்கின்றன. இந்த எளிமைதான் அவருக்கான அடையாளம். அது, பசுமைப் போராட்டத்தின் அடையாளம்!

கைவிடப்பட்ட முனைவர் கனவு

1954 டிசம்பர் 1 அன்று சுதந்திரப் போராட்ட வீரர் வசந்த் கனோல்கருக்கும் பெண்களின் மேம்பாட்டுக்காக உருவான ‘ஸ்வதார்’ எனும் அமைப்பில் உறுப்பினராக இருந்த இந்துமதிக்கும் மகளாகப் பிறந்தார் மேதா பட்கர். இப்படியொரு பெற்றோருக்குப் பிறந்ததால் சிறுவயது முதலே நாட்டின் நலனில் அவர் ஆர்வம் கொண்டதில் வியப்பேதுமில்லை. அந்த ஆர்வம் அவரைப் புகழ்பெற்ற டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ் கல்லூரியில் சமூகப் பணித் துறையில் முதுகலைப் பட்டம்பெறச் செய்தது. பிறகு அங்கேயே சில காலம் ஆசிரியராகப் பணியாற்றியவர், களப் பணிக்காகத் தன் பணியைத் துறந்தார்.

பழங்குடிகள், குடிசைவாழ் பகுதி மக்கள் ஆகியோரின் மேம்பாட்டுக்காகப் பல தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றிய மேதா, ‘மரபார்ந்த சமூகங்களின் மீது பொருளாதார மேம்பாட்டின் தாக்கம்’ என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை டாடா இன்ஸ்டிட்யூட்டில் மேற்கொண்டார். எம்.ஃபில்.வரை படித்த அவர், பின்னர் மக்கள் பணிகளுக்காகத் தன் முனைவர் பட்ட ஆய்வைக் கைவிட்டார்.

ராட்சதத்தன்மை நோய்க்கு எதிராக

1955-ம் ஆண்டு அணைகளை ‘நவீன இந்தியாவின் கோயில்கள்’ என்றார் முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு. அவரேதான் 1958-ம் ஆண்டில், அணைகளை ‘ராட்சதத்தன்மை நோய்’ (டிசீஸ் ஆஃப் ஜைஜான்டிசம்) என்றும் விமர்சித்தார். மேதா பட்கர், இந்த நோய்க்கு எதிராகத்தான் போராடுகிறார். சொல்லப்போனால் நேரு சொன்ன அந்த விமர்சனம் இந்திய வரலாற்றில் மறந்துபோயிருந்த காலகட்டத்தில், அதை மீண்டும் மக்களின் நினைவுக்குக் கொண்டுவந்தவர் மேதா பட்கர்தான்.

இப்படியான ‘ராட்சதத்தன்மை நோய்’ மீது அன்றைய குஜராத் அரசுக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. எனவே குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மூன்று மாநிலங்களில் பாயும் நர்மதை நதியில் பல அணைகளைக் கட்ட குஜராத் அரசு விரும்பியது. அதற்கு மற்ற இரண்டு மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர 1969-ம் ஆண்டு ‘நர்மதை நீர் சச்சரவுத் தீர்ப்பாயம்’ ஏற்படுத்தப்பட்டது. பத்து ஆண்டுகள் கழித்து 1979-ம் ஆண்டு, 30 பெரிய அணைகள், 135 நடுத்தர அணைகள், 3 ஆயிரம் சிறிய அணைகள் கொண்ட நர்மதைப் பள்ளத்தாக்கு மேம்பாட்டுத் திட்டத்துக்கு அந்தத் தீர்ப்பாயம் அனுமதி அளித்தது.

1985-ம் ஆண்டு இந்தத் திட்டம் செயல்படத் தொடங்கியதும் மேதாவும் அவருடைய நண்பர்களும் அந்தப் பகுதிகளுக்குச் சென்றனர். அங்கு சர்தார் சரோவர் அணை கட்டும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை அறிந்தார் அவர். மிகவும் அடிப்படையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளைக்கூட, அந்தத் திட்டம் கருத்தில் கொள்ளவில்லை என்பதால் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமே அதை நிறுத்திவைத்திருந்ததை அவர் அறிந்துகொண்டார். பிறகு அங்குள்ள மக்களிடம் பேசினார். அவர்களின் கருத்துகள், பிரச்சினைகளை அறிந்துகொண்டார். அதுமுதல் அவர்களின் நலனுக்காகப் பாடுபடத் தொடங்கினார் மேதா.

நீண்ட போராட்டத்தின் முதல் அடி

1986-ம் ஆண்டு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக உலக வங்கி முன்வந்தது. அதை எதிர்த்து மேற்சொன்ன மூன்று மாநிலங்களில் 36 நாள் நடைப்பயணத்தை மேற்கொண்டார் மேதா. அதைத் தொடர்ந்து உலக வங்கி பின்வாங்கியது. இந்த நடைப்பயணத்தை ‘மிக நீண்ட போராட்டத்துக்கான முதல் அடி’ என்றார் மேதா பட்கர். வன்முறையற்ற சத்தியாகிரகம் போன்ற அந்த நடைப்பயணத்தைக் காவல்துறையின் துணைகொண்டு குஜராத் அரசு அடக்கியது. எனினும் வெற்றிகரமாக முடிந்தது அந்த நடைப்பயணம்.

தொடர்ந்து 1989-ம் ஆண்டு ‘நர்மதா பச்சோ அந்தோலன்’ அமைப்பைத் தொடங்கினார் மேதா. அணைகள் கட்டினால் மக்கள் தங்கள் நிலங்களை விட்டு இடம்பெயரும் நிலை ஏற்படும். அப்படியான ஒரு நிலை வந்தால் அவர்கள் வாழ்வதற்கான மாற்று ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என்ற இந்த இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து அந்த அமைப்பு சுமார் 28 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிவருகிறது.

தன் போராட்டத்துக்கு ‘கோல்டுமேன் என்விரான்மெண்ட் பிரைஸ்’ உள்ளிட்ட பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றிருக்கிறார். சர்தார் சரோவர் அணைத் திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீதி கேட்டு மேதா பட்கர் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், பிரதமர் மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17அன்று அந்த அணை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது!Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x