

கப்பல் மாதிரி வீடு கட்ட வேண்டும் என்கிற ஆசை இல்லாதவர்கள் இருக்க மாட்டார்கள். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், இதை நிஜமாகவே மெய்ப்பித்துவருகிறார். கப்பல் வடிவிலான வீட்டை 13 ஆண்டுகளாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்!
அந்த விவசாயியின் பெயர் மின்ட்டு ராய். 52 வயதான அவர் மேற்கு வங்கத்தின் சிலிகுரியைச் சேர்ந்தவர். தன்னுடைய வீடு கப்பல் போலவே இருக்க வேண்டும் என்பது இவருடைய கனவு, லட்சியம். கப்பல் வடிவில் கட்ட வேண்டும் என்பதற்காக ஏராளமான கட்டிடப் பொறியாளர்களைப் பார்த்திருக்கிறார்.
இப்படி ஒரு வீட்டைக் கட்டப் பலரும் தயங்க, கடைசியில் அவரே களமிறங்கிவிட்டார். இதற்காக நேபாளத்துக்குச் சென்று 3 ஆண்டுகள் கட்டிட வேலையைக் கற்றுக்கொண்டு ஊர் திரும்பியிருக்கிறார்.
கப்பல் வீடு கட்டுமான பணியைக் கடந்த 2010இல் தொடங்கினார். ஆனால், பொருளாதார நிலையால் அவரால் தொடர்ந்து வீடு கட்டும் பணியில் ஈடுபட முடியவில்லை. பணம் கிடைக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக வீட்டைக் கட்டத் தொடங்கினார்.
39 அடி நீளம், 13 அடி அகலம், 30 அடி உயரமும் கொண்டதாக இந்த வீட்டைக் கட்டிவருகிறார். இதுவரை கப்பல் போன்ற தளத்தில் அடுக்குகளுடன்கூடிய கட்டுமானப் பணிகளை முடித்திருக்கிறார்.
கப்பலின் நேர்த்தியான வடிவமைப்பை நினைவூட்டும் வகையில் மரத்தாலான பெரிய படிக்கட்டுகளையும் நிறுவத் திட்டமிட்டுள்ளார். இதுவரை இந்தக் கப்பல் வீட்டைக் கட்டுவதற்காக 15 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ள மின்ட்டு ராய், அடுத்த ஆண்டு இறுதிக்குள் வீட்டைக் கட்டி முடித்துவிடுவேன் என்று உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
இந்த வீட்டைப் பார்க்க வரும் பலரும் ‘டைட்டானிக் வீடு’ என்று பெயர்சூட்டியிருக்கிறார்கள். இதனால், மகிழ்ச்சியடைந்துள்ள அந்த விவசாயி, இதே பாணியில் ஹோட்டல் ஒன்றையும் கட்டத் திட்டமிட்டுள்ளாராம். இப்படியும் ஒரு ஆசை!
- மிது கார்த்தி