Last Updated : 02 Sep, 2017 10:42 AM

 

Published : 02 Sep 2017 10:42 AM
Last Updated : 02 Sep 2017 10:42 AM

உயிர் வளர்த்தேனே 51: உயிரின் நிறம் பச்சை!

தமிழகத்து மக்களின் அளப்பரிய கொடுப்பினை என்னவென்று கேட்டால், என் முதல் தேர்வு கீரை வகைகள்தான். நான் புதுச்சேரியை ஒட்டிய கிராமப்புறத்தில் வசிக்கிறவன். அவ்வப்போதைய உடல், மனநிலைக்கு ஏற்ப வல்லாரை தொடங்கி வெள்ளைக் கரிசலாங்கண்ணிவரை தேவைப்படும் கீரையை ஒரு கூறு பத்து ரூபாய்க்கு வாங்கி வந்துவிடுவேன். இதன் சத்து மதிப்பைக் கணக்கிட்டால் நிச்சயம் பலநூறு, ஆயிரம் பெறும்.

ஒரு கூறை வாங்கிக்கொண்டிருக்கும்போது, குழந்தைகள் போட்டியிட்டு ‘எனக்கு’ என்று கை நீட்டித் திணறடிக்குமே, அதுபோல் தளதளவென்ற இன்னொரு வகை நம்மை ஏக்கத்துடன் பார்க்கும். வேறென்ன செய்ய, அன்றைக்குச் சமைக்க வாய்க்கிறதோ இல்லையோ ‘நீயும் என் செல்லம்தான்’ என்று வாரியணைத்துக்கொண்டு வந்துவிடுவேன்.

அதிலும் எங்கள் பகுதியில் கலவைக் கீரை என்று தானாக வளர்ந்த காட்டுக் கீரையில் ஒரு பத்து வகையைக் கூட்டி தாராளமான கூறாக வைத்திருப்பார் கீரை விற்கும் பாட்டி. இனாமாகப் பறித்து வந்ததால், அந்தக் கூறில் அவரது மன விசாலம் தெரியும். சருமம் வற்றிக் கருத்து வாடிய அந்தக் கீரைக்கார அம்மையை அவரது தாராளத்துக்கு மரியாதை செய்யும் விதமாக ‘கீரைக்காரி’ என்பதைவிடக் ‘கீரைக்காரர்’ என்று விளிப்பதே பொருத்தமாகும்.

shutterstock_636962302பார்த்தால் வாங்க வைக்கும்

காய்கறி வாங்கப் போனால் தேவைக்கு வாங்குவதற்கு மாறாகப் பார்வைக்குக் கவர்ச்சியாக இருப்பவற்றையும் வாங்கிவிடுவது என்னுடைய பழக்கம். கூடுதலாக வாங்கிய கீரையைப் பார்த்து எனது இல்லாள் ‘எதுக்கு சும்மா வாங்கியாந்து குமிக்கிறிங்க’ என்று கீரையின் குளிர்ச்சிக்கு மாறாக, வெப்பக் கேள்வி எழுப்புவார். சட்டென்று அன்றைக்குக் காண வாய்க்கிற நண்பரின் பேரைச் சொல்லி, அவருக்கு என்று சமாளித்து இதற்காகவே ஒரு நடை சென்று சம்பந்தப்பட்டவர்களிடம் சேர்ப்பித்துவிடுவேன். சில நேரங்களில் கொத்துக்கீரையை 150 கிலோ மீட்டர் பயணித்து சென்னைவரையிலும் கொண்டுவருவதும் உண்டு!

சந்தைப் பக்கம் போகாத நேரத்தில் எனக்குக் கலவைக் கீரைதான் வேண்டும் என்று ஒட்டாரம் பிடித்தால், நினைத்த மாத்திரத்தில் மாடியை விட்டுக் கீழிறங்கிச் சென்று நான்குக்கு 60 அடி என்கிற அளவில் எங்கள் வீட்டு உரிமையாளர் படு கஞ்சத்தனமாக விட்டுவைத்த தோட்டப் பரப்பில் ஐந்தாறு வகையான கீரையை இல்லாள் பறித்துவந்து சமைத்துக் கொடுப்பார்.

வாடாத தழையும் உயிரே

நடைப் பயிற்சிக்குச் செல்லும் இடங்களிலும் முடக்கத்தான், மணத் தக்காளி, சாரநத்தி, கோவைக் கொடி, குப்பைமேனி இன்னும் பெயரறியாக் கீரைகள் ஐந்தாறு வகையைப் பறித்து வந்துவிடுவேன்.

வாங்கச் சந்தர்ப்பம் இல்லாத நேரங்களிலும் கடை பரப்பியிருக்கும் அரிய வகைக் கீரைகளைக் கண்டால் கடந்து செல்ல முடிவதில்லை. விலை கேட்பதுபோல நின்று நான்கைந்து இலைகளைப் பறித்து வாயில் போட்டு மென்று, அதன் சாற்றை நிதானமாக உள் இறக்குகிற பழக்கம் உண்டு.

இருசக்கர வாகனத்தில் நகரத்தைவிட்டு வெளியில் செல்ல நேர்கிறபோது சாலை நெரிசலில் பிதுங்கி மண் தரைக்கு வண்டி போனதும் கீரைகளின் தலைமீது ஓடும்படி நேர்ந்துவிடும். அந்த நேரத்தில் மனது கிடந்து ‘அய்யோ அய்யோ’என்று அரற்றிக்கொண்டே போகும். வாடாத தழையும் ஒரு உயிர்தானே.

ரத்தம், நிறத்தில் சிவப்பாக இருந்தாலும் வழக்கில் ‘பச்சை ரத்தம்’ என்றே சொல்கிறோம். உயிர்த் துடிப்பு மிகுந்த குழந்தையைப் ‘பச்சைக் குழந்தை’ என்கிறோம். உயிரின், உதிரத்தின் பச்சை வடிவம் கீரை. பசலைக் கீரைக் கொடிபோல என் மனமெங்கும் படர்ந்து செல்லும் கீரைக்கும் எனக்குமான பந்தத்தை மட்டுமே ஒரு புதினம் அளவுக்குக் கனமான பக்கங்களில் எழுதிக்கொண்டு போகலாம்.

காரச் சுவை தேவை

இங்கு ஒரு உடலியல் ரகசியம் சொல்கிறேன். நாம் எத்தகைய நகர நெருக்கடிகளில் வாழ்ந்தாலும் சரி. சூரிய ஒளி படுகிற இடத்தில் நான்கைந்து தொட்டிகளை வைத்து துளசி, ஓம(கற்பூர)வல்லி, புதினா, வெற்றிலை, குப்பைமேனி ஆகியவற்றை எப்போதும் வளர்த்து வாருங்கள்.

உடல்ரீதியாக எவ்விதமான நெருக்கடிக்கும் பதறிப் போய் மருத்துவமனைக்கு ஓட வேண்டியதில்லை. மேற்படி இலைகளில் வகைக்கு நான்கைந்தாகப் பறித்து ஐந்தாறு மிளகுடன் சேர்த்து ஒன்றிரண்டாக இடித்து ஒரு குவளை நீரில் ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு வடிகட்டிக் குடித்தால் போதும். உடனடியாக ஆபத்துக் கட்டத்தைத் தாண்டிவிடலாம். என்னைப் பொறுத்தவரை அதற்குப் பின்னர் மருத்துவமே தேவையில்லை. மற்றபடி அவரவர் விருப்பம்.

மேற்குறிப்பிட்ட தழைகள் அனைத்தும் காரத்தன்மையுள்ளவை. நாம் அறுசுவை என்று கூறினாலும் நம் உடல் ஆக இறுதியாகப் புளிப்பு, காரம் என்ற இரண்டு கூறுகளால் சதை மற்றும் உயிரின் வடிவங்களாகக் கட்டப்பட்டுள்ளது. காரம் என்பது உயிரின் சுவை வடிவம். உயிருக்கு நெருக்கடி வருகிறபோது கார ஆற்றல் கொடுத்தால், உடல் உடனடியாக நெருக்கடியில் இருந்து மீண்டு விடும். என் உணவறிவுக்கு எட்டியவரை நம் அளவுக்குக் கீ்ரையைப் பாவிக்கிறவர்கள் சீனர்கள் தாம். கீரையைத் துவட்டலாகவும் பயன்படுத்துவார்கள் என்றாலும் பெருமளவு சூப்பாகவே ஏற்பதுதான் அவர்கள் வழக்கம்.

காஸ்ட்ரோ சாப்பிட்ட கீரை

கீரையை இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு, வெங்காயம், தக்காளி, சிறிதளவு உப்பு சேர்த்துக் காய்ச்சிச் சாறு வடித்துக் குடித்துவந்தால் வாழ்நாள் முழுமைக்கும் நமக்கு மருந்து என்ற ஒன்று தேவையே இல்லை.

கீரைச் சாறு (சூப்) மலக்கட்டை இளக்குகிறது. அதன் உயிர்ச்சத்து சிறுநீரகங்களுக்கு ஆற்றலை வழங்கி சிறுநீரைப் பிரிப்பதன் மூலம் உடலில் தேங்கியுள்ள தீய நீரை வடித்தெடுத்து விடுகிறது.

முப்பது வயதைக் கடந்த இருபாலரும் மாதம் ஒருமுறை கீரைச் சாறு மட்டுமே குடிக்கும் விரதம் இருந்தால்போதும், நோய்கள் மலிந்த நம் காலத்தில் எந்த நோய் குறித்தும் அஞ்ச வேண்டியதில்லை. தற்கால டெங்கு அச்சத்துக்கும் ஆளாக வேண்டியதில்லை.

shutterstock_399705868right

தனது விரல் நகக் கண் அளவிலான நாட்டின் அதிபர் இறந்துவிட்டார் என்று முன்பொரு காலத்தில் வதந்தி பரப்பி அகமகிழ்ந்துகொண்டிருந்தது அமெரிக்கா. அந்த அளவுக்கு மரணத்தின் விளிம்புவரை சென்று திரும்பிய கியூப மக்கள் தலைவர் காலஞ்சென்ற பிடல் காஸ்ட்ரோ தன் வாழ்நாளின் இறுதி மூன்று ஆண்டுகளாக நாள் தவறாமல் செய்தது என்ன தெரியுமா?

இந்தியாவிலிருந்து தருவித்து வளர்த்த முருங்கை மரத்தின் தழையை சூப்பாக வடித்துக் குடித்துவந்ததுதான். தான் குடித்ததோடு தன் நாட்டினரின் ஒவ்வொரு வீட்டுத் தோட்டத்திலும் முருங்கை வளர்க்கச் செய்தார்.

‘முருங்கை மரம் வீக்கு. ஆனால், இலை ரொம்ப ஸ்ட்ராங்கு”. விலையில் மலிந்த, இலகுவில் கிடைக்கிற முருங்கைக் கீரைச் சாறைக் காலையில் காபி, டீக்குப் பதிலாக அன்றாடம் குடித்தால்போதும். பலரும் விக்கிரமாதித்தனின் வேதாளம்போல முருங்கை மரத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு விடுவார்கள்.

இறைச்சியின் தளர்ந்த வடிவம்

கீரை எதுவானாலும் அதை இறைச்சியின் தளர்ந்த வடிவம் என்றும், இறைச்சியைக் கீரையின் அடர் வடிவம் என்றும் கூறுவேன். மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு, சுண்ணம் போன்ற நுண் தாதுச் சத்துகள் அனைத்தையும் ஒருசேரப் பெற்ற எளிய உணவான, உயிர்ப் பண்பு மிகுந்த கீரையை வாரத்தில் ஓரிரு முறையேனும் உண்பதைப் பழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

கீரை, சத்துக்களை அடர்த்தியாகக் கொண்டிருப்பதால் பொறியல் என்ற துவட்டலாகச் சமைப்பதற்குப் பதிலாகப் பருப்பு அல்லது தேங்காயுடன் கடைந்து உண்பதே சிறந்தது. நிறையப் புளி, மிளகாய் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பதின்மம் கடந்து முப்பது வயதுக்கு உட்பட்ட இளம் வயதினர் மட்டுமே உண்ணத் தகுந்தது புளிச்ச கீரை என்று நாம் வழங்கும் ஆந்திரத்து கோங்குரா. சிலர் சமைத்த கீரையையும் சோற்றையும் மிக்ஸியில் இட்டு அரைத்துக் குழந்தைகளுக்கு வம்படியாக ஊட்டுகின்றனர். இது மிகப் பெரிய வன்முறை. பத்து வயதுக்கு உட்பட்ட வயிற்றால் கீரையை எளிதாகச் செரிக்க இயலாது. அதேபோல் வயதில் முதிர்ந்தவர்களுக்கும் சாறு வடித்து தேக்கரண்டியால் அருந்தச் செய்வதே சரி. நோயில் தளர்ந்து செரிமானத் திறன் இழந்தவர்கள் கீரையைத் தவிர்க்க வேண்டும்.

எந்தக் கீரையானாலும் ஐந்தாறு இலைகளை அரைமூடித் தேங்காயுடன் சேர்த்து அரைத்து வடிகட்டிக் குடித்தால், கீரையின் சத்துகள் முழுமையாகக் கிடைப்பதுடன் ஒருநேர உணவையே முடித்துக்கொள்ளலாம். நம் மண்ணில் வளரும் ஒவ்வொரு கீரையின் மகாத்மியத்தையும் சொல்ல தனியே ஒரு தொடர் வேண்டும்.

கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x