Published : 12 Sep 2017 10:30 AM
Last Updated : 12 Sep 2017 10:30 AM

வெளிநாட்டு உயர்கல்வி: கனவு தேசத்தில் படிக்கப் புறப்படுங்கள்!

யல்நாடுகளில் உயர்கல்வி படிக்கும் கனவு பலருக்கு இருக்கும். தரமான கல்வி, படித்து முடித்தபின் நல்ல வேலைவாய்ப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம், மேலை நாடுகளுக்குச் செல்லும் அனுபவம், அதனால் கிடைக்கும் அங்கீகாரம் இப்படி அதற்குப் பின்னால் பல காரணங்கள் பின்னப்பட்டுள்ளன. ஆனால், நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இது நிறைவேறாத கனவாகவே கலைந்துபோகிறது. காரணம், சரியான வழிகாட்டுதல் இன்மையே.

வாய்ப்பளிக்கும் டாலர் தேசம்

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கிழக்காசிய நாடுகள் உட்படப் பல்வேறு உலக நாடுகளில் உங்களுக்கு விருப்பமான படிப்பைப் படித்துப் பிரகாசிக்கலாம்.

கல்வி, மருத்துவம், விண்வெளி ஆராய்ச்சி, பொருளாதார பலம், தொழில் வளம், விவசாய மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி போன்ற பல துறைகளிலும் முன்னணி வகிக்கிறது அமெரிக்கா. நோபல் பரிசுகளையும் வட அமெரிக்க விஞ்ஞானிகள்தான் அதிக அளவில் பெற்றிருக்கிறார்கள்.

ஏனென்றால், வட அமெரிக்காவில் மட்டும் தரமான கல்வி அளிக்கும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இவை தவிர ஆயிரக்கணக்கில் தரச்சான்றிதழ்கள் பெற்ற சமுதாயக் கல்லூரிகளும் (Community Colleges) இருக்கின்றன. வட அமெரிக்கா முழுவதும் ஆங்கில வழிக் கல்விதான். மக்கள் பேசும் மொழியும் ஆங்கிலம்தான். இங்கு தொழில்நுட்பம், பொறியியல், அறிவியல், நிர்வாகவியல், வரலாறு, புவியியல், பொருளாதாரம், மனோதத்துவம், மருத்துவம், சட்டம் போன்ற எல்லாப் படிப்புகளுக்கும் மதிப்பும் அதற்குரிய வேலைவாய்ப்பும் உள்ளன.

இங்குக் கல்விக்கான செலவு ஆண்டுக்கு 35 ஆயிரம் டாலர் முதல் 75 ஆயிரம் டாலர்வரை. இந்தத் தொகை கல்விக் கட்டணம், தங்கும் வசதி, சாப்பாடு, காப்பீட்டுத்தொகை, புத்தகம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

சம்பாதித்துப் படிக்கலாம்!

இங்கு படிக்கும்போதே பல்கலைக்கழக வளாகத்தில் பலவிதப் பகுதிநேர வேலைகளைச் செய்து பணம் ஈட்ட வாய்ப்புள்ளது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக நான்கு மணி நேரம் வேலை செய்யலாம். வேலைக்கேற்ப ஒரு மணி நேரத்துக்கு ஆறு டாலர் முதல் பதினைந்து அல்லது இருபது டாலர்வரை சம்பாதிக்கலாம். இதைத்தவிர முதல் செமஸ்டர் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால், உதவித்தொகையும் கிடைக்க வாய்ப்புள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில், இளநிலை மாணவர்களுக்குக் கற்பித்தல், ஆராய்ச்சி சம்பந்தமான வேலை, அலுவலக வேலை, கணினி வேலை, உணவு விடுதியில் வேலை போன்ற 15 வகையான வேலைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

இவை தவிர ஒரு வருடம் முதுநிலைப் படிப்பு (MS) முடிந்தவுடன் பயிற்சி வேலையும் கிடைக்கும். இந்தப் பயிற்சியைப் பல்கலைக்கழகமே ஏற்பாடு செய்துதரும். இதன்படி 36 மாதங்கள்வரை ஒரு மாணவர் பல்கலைக்கழகத்துக்கு வெளியே உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து சம்பாதிக்கலாம். இது சில சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது. அதன்பிறகோ முன்போ அந்த மாணவர் அதே பல்கலைக்கழகத்துக்குத் திரும்பி வந்து தன்னுடைய மேல்படிப்பைத் தொடரலாம். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை மீதமுள்ள படிப்புக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் சிறப்பாகப் பயிற்றுவிக்கும் முறைகள் கையாளப்படுகின்றன. தாங்கள் கற்றவற்றைத் தாங்களாகவே நூலகத்திலும் சோதனைக் கூடத்திலும் ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தப்படுகிறது. மாணவர்களே சிறப்பு வகுப்பு எடுக்கும் திட்டமும் கடைப்பிடிக்கப்படுவதால் மனப்பாடத்துக்கு இடமில்லை.

தேவையான தகுதி

வட அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தகுதி:

பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற மாணவர்கள் முதலில் ஆங்கில அறிவுக்கான சோதனைத் தேர்வுகளான TOEFL, SAT ஆகிய இரண்டு தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும்.

கனடா, வட அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்பானது (BS) நான்கு வருடங்கள். இதன் பிறகு இரண்டாண்டு முதுநிலைப் படிப்பை (MS) மேற்கொள்ளலாம். நேரடியாக முதுநிலைப் பட்டப் படிப்புக்குச் செல்லும் மாணவர்கள் இந்தியாவில் 16 வருடங்கள் கால அவகாசம் கொண்ட பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை பெற்றிருக்க வேண்டும்.

வேலை அனுபவம் கட்டாயம்

இந்தியாவில் MA., M.Sc., B.E., B.Tech., போன்ற பட்டங்கள் பெறுபவர் நேரடியாக அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதுநிலைப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கும் கட்டாயமாக TOEFL, GRE போன்ற நுழைவுத் தேர்வுகளை எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும். உங்களுடைய ஆங்கிலம், கணித அறிவு இந்தத் தேர்வுகளில் சோதிக்கப்படும்.

நிர்வாகவியல் (MBA) படிக்க விரும்பினால் TOEFL, GMAT போன்ற தேர்வுகளை எழுத வேண்டும். MBA படிக்கக் குறைந்தது இரண்டு வருட வேலை அனுபவம் கட்டாயம்.

வசந்த காலம், இலையுதிர்காலத்தில்தான் பொதுவாக வட அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை நடைபெறுகிறது. வெளிநாட்டு மாணவர்களை ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அனுமதிப்பதில்லை. குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களுக்கு 40 அமெரிக்க டாலர் முதல் 150 டாலர்வரை வசூலிக்கப்படும்.

இரட்டை ஏற்பாடு உள்ளது!

குட்டி நாடான சிங்கப்பூரில் உலகத் தரம் வாய்ந்த நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், நேஷனல் யூனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூர், சிங்கப்பூர் நிர்வாகக் கல்வி பல்கலைக்கழகம் ஆகியவை உள்ளன. இங்கு இளநிலைப் படிப்புகளில் சேர ஆங்கிலத் திறனைச் சோதிக்கும் IELTS கட்டாயம் எழுத வேண்டும். நிர்வாகவியல் படிக்க விரும்புபவர்கள் GRE, GMAT தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இவற்றைத் தவிர சிங்கப்பூரில் உரிய அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிலையங்களும் உள்ளன. இவை ஆஸ்திரேலியா, கனடா, வட அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளிலுள்ள சில சிறந்த பல்கலைக்கழகங்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு இயங்கிவருகின்றன. சிங்கப்பூரில் ஒரு வருடமும் அவை ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள பல்கலைக்கழகத்தில் ஒரு வருடமும் என்கிற அடிப்படையில் அளிக்கப்படும் ‘இரட்டை ஏற்பாடு’ (Twinning Program) என்கிற சான்றிதழ் படிப்பைப் படிக்கலாம்.

கட்டணம் குறைவு

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் தரமான உயர் கல்வி அளிக்கும் பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆங்கில வழிக் கல்வி அளிக்கும் இப்பல்கலைக்கழகங்களில் இணைய IELTS எழுத வேண்டும். அதில் 9 மதிப்பெண்ணுக்கு 6.5 மதிப்பெண் பெறுவது நல்லது. இந்த நாடுகளில் இளநிலை மூன்று ஆண்டுகள் படிப்பாகவும், முதுநிலை ஒரு வருடப் படிப்பாகவும் வழங்கப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் படிக்க அவர்களுடைய பிராந்திய மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம். அங்கும் சமீப காலமாக ஆங்கில வழியில் கற்பிக்கப்படுகிறது. ஆனாலும் பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி உள்ளிட்ட அந்தந்த நாட்டு மொழிகளில் பேசும் திறமையையும் புரிந்துகொள்ளும் ஆற்றலும் அவசியம்.

ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் படிக்க ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையில் இந்திய மாணவர்கள் செல்கின்றனர். சில பல்கலைக்கழகங்களில் ஆங்கில வழியில் கற்பிக்கப்படுகிறது. ஆனால், முதலாமாண்டு முடிவுக்குள் அவர்களுடைய பிராந்திய மொழித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே படிப்பைத் தொடர முடியும். இந்தியாவின் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் கல்விக் கட்டணத்துடன் ஒப்பிடும்போது, ரஷ்யா, சீனாவில் மருத்துவப் படிப்புக்கான கல்விக் கட்டணம் மிகவும் குறைவு.

கடன் உதவி

அயல்நாடுகளில் உயர்கல்வி பெற அதிகம் செலவாகும் என்கிற கவலை பெற்றோர்களுக்கு வேண்டாம். வங்கிகள் கல்விக் கடன் வழங்குகின்றன. அசையாத சொத்து இருந்தால், மாணவரின் பெற்றோர் கணிசமான மாதச் சம்பளம் பெறுபவராக இருந்தால் ரூ.30-35 லட்சம்வரை கல்விக் கடன் பெறலாம். இந்தக் கல்விக்கடனை 84 மாதங்களில் மாணவர் மேற்படிப்பு முடித்து வேலை கிடைத்த பிறகு கடனை அடைக்கலாம். அதுவரை ஆண்டுக்கு 14% வட்டி.

மேல்நாடுகளில் உயர் கல்விக்காக விண்ணப்பிக்கும் முன்னர் அயல் நாட்டு பல்கலைக்கழகங்களின் தரம், அங்கு அளிக்கப்படும் பாடப் பிரிவுகள், உதவித்தொகை பெறக்கூடிய வாய்ப்பு, படித்து முடித்தபின் வேலைவாய்ப்பு, விசா சம்பந்தமான விவரங்கள் உள்ளிட்ட எல்லாச் சந்தேகங்களுக்கும் தேர்ந்த கல்வி ஆலோசகரை அணுகுவது நல்லது.

கட்டுரையாளர் அயல்நாட்டு கல்வி குறித்த ஆலோசகர்,
சென்னை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x