

தமிழ்நாடு தொல்லியல் துறை 2018 முதல் கீழடியில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டுவருகிறது. இந்த அகழாய்வுகளின் அறிவியல் அடிப்படையிலான பகுப்பாய்வு முடிவுகள், தமிழ்நாட்டின் தொன்மையான வரலாற்றின் மீது புதிய வெளிச்சத்தைத் தொடர்ந்து பாய்ச்சிவருகின்றன.
கீழடி அகழாய்வுகள் மூலம் கண்டறியப்பட்ட தொல்பொருள் களைப் பொதுமக்கள் காணும் வகையில் ‘கீழடி அருங்காட்சியகம்’ அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஏக்கர் பரப்பில் 31 ஆயிரம் சதுர அடியில் சுமார் ரூ.18.43 கோடி செலவில் பாரம்பரிய செட்டிநாடு கட்டிட வடிவில் உருவாக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகம் அது.
அந்த அருங்காட்சியகத்தில் கீழடி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தொல் பொருள்கள் ‘கலம் செய்கோ’, ‘ஆடையும் அணிகலன்களும்’, ‘கடல் வழி வணிகம்’, ‘வாழ்வியல்’,‘வேளாண்மையும் நீர் மேலாண்மை’யும், ‘மதுரையும் கீழடியும்’ எனும் ஆறு பிரிவுகளின் கீழ் தனித்தனிக் கட்டிடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் நீட்சியாக, தமிழ்நாட்டின் தொன்மையான வரலாற்றை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் நோக்கில் கீழடி அருங்காட்சியகத்துக்காகப் பிரத்தியேகமாக ‘கீழடி புனை மெய்யாக்க’ச் (Keeladi museum) செயலி’யைத் தமிழ்நாடு தொல்லியல் துறை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
கீழடி அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட 200 தொல்பொருள்களையும் இந்தச் செயலியின் மூலம் முப்பரிமாணத்தில் காணலாம். இத்துடன் அந்தக் கலைப் பொருள்கள் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ளும் வசதியையும் அது நமக்கு அளிக்கிறது. பயன்பாட்டுக்கு எளிதாக இருக்கும் இந்தச் செயலி, அனைவரையும் ஈர்க்கக்கூடியதாகவும் கல்வியறிவு பெறும் வகையிலும் இருக்கிறது. இனி கீழடி அருங்காட்சியகத்தில் இருக்கும் அனைத்துப் பொருள்களையும் உலகில் எந்த மூலையிலிருந்தும் நம்மால் காண முடியும்.