உயிரியல் துறை: படிப்பும் வாய்ப்பும்

உயிரியல் துறை: படிப்பும் வாய்ப்பும்
Updated on
2 min read

உயிரியல் துறையில் ஏராளமான படிப்புகளும் அவை சார்ந்த வேலைவாய்ப்புகளும் கொட்டிக்கிடக்கின்றன. அரசு வேலை முதல் பன்னாட்டு நிறுவனங்கள் வரை பலதரப்பட்ட வேலைகள் காத்திருக்கின்றன. கல்லூரியில் உயிரியல் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்க 12ஆம் வகுப்பில் உயிரியலை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும்.

இளங்கலைப் பாடங்கள்: உயிரியல் துறையில் ஆர்வம் இருப்பின், கல்லூரியில் இளங்கலை (B.Sc) விலங்கியல், தாவரவியல், உயிரியல் போன்ற பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுக்கலாம். இவை தவிர நுண்ணுயிரியல், உயிரித் தொழில்நுட்பவியல் போன்ற படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

உயிரியல் துறையில் எந்தப் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தனிப்பட்ட ஆர்வத்தைப் பொறுத்தது. இதில் தெரிந்துகொள்ள வேண்டியது, இளங்கலையில் எந்த ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவைப் படித்திருந்தாலும் முதுகலையில் உயிரியலில் விரும்பும் வேறொரு பாடப்பிரிவையும் படிக்க முடியும்! அதாவது, இளங்கலையில் விலங்கியல் படித்திருந்தால், முதுகலையில் உயிரித் தொழில்நுட்பவியலைப் படிக்க முடியும்.

முதுகலைப் பாடங்கள்: இளங்கலையைவிட முதுகலையில் அதிகமான நிபுணத்துவப் படிப்புகள் உள்ளன. உயிரியல் துறையில் விஞ்ஞானியாக விரும்பினால் ஆராய்ச்சி சார்ந்த நிபுணத்துவப் படிப்புகள் கைகொடுக்கும். முதுகலையில் மரபியல் (Genetics), நோயியல் (Immunology), மூலக்கூறு உயிரியல் (Molecular Biology), உயிரிப் பொறியியல் (Bio-engineering), நொதியியல் (Enzymology), மரபுப் பொறியியல் (Genetic Engineering) உயிரித் தகவலியல் (Bio-informatics) போன்ற படிப்புகள் பல பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகின்றன.

இளங்கலையில் உயிரியலில் எந்தப் பாடத்தைப் படித்திருந்தாலும், முதுகலையில் இதுபோன்ற நிபுணத்துவப் படிப்புகளை இந்தியா முழுவதும் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் படிக்க முடியும்.

அகில இந்திய நுழைவுத்தேர்வு மூலமோ ‘GATE’ அல்லது ‘JEE’ தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் மூலமோ இப்படிப்புகளில் சேர முடியும். சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும்போது மாத உதவித்தொகை (ரூ.3000 முதல் ரூ.12,000 வரை) கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. இப்படிப்புகளை முடித்தவர்களுக்கு வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் ஆராய்ச்சித் துறையில் அரசு, தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

ஆசிரியர் பணி: பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் பணி விருப்பம் இருப்பின், இளங்கலையில் என்ன பிரிவைத் தேர்ந்தெடுக்கிறோமோ அதே பிரிவை முதுகலையிலும் படிப்பது அவசியம். இது அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் வேலை பெற முக்கிய நிபந்தனை. முதுகலைத் தகுதியுடன், NET, SLET தகுதித் தேர்வில் வெற்றிபெற்றால் ஆராய்ச்சிப் பட்டம் (PhD) பெறாமலேயே கல்லூரிகளில் விரிவுரையாளர் / உதவி பேராசிரியராகப் பணியாற்றுவதற்குத் தகுதி பெற்றுவிடலாம்.

ஆராய்ச்சியாளர் பணி: NET தேர்வில் குறிப்பிட்ட மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால், மத்திய அரசின் இளங்கலை ஆராய்ச்சியாளருக்கான உதவித்தொகையை ஐந்தாண்டுகளுக்குப் பெறலாம். இந்த உதவித்தொகையின் மூலம் இந்தியாவில் உள்ள சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் முனைவர் பட்ட ஆராய்ச்சியைத் தொடரலாம்.

உயிரியல் துறையில் படித்தவர்களுக்கென்றே மத்திய அரசின் உயிரித் தொழில்நுட்பத்துறை, இந்திய மருத்துவ கவுன்சில் ஆண்டுதோறும் இளங்கலை ஆராய்ச்சியாளர்களுக்கான தகுதித் தேர்வுகளை தனித்தனியே நடத்துகின்றன. இதில் வெற்றி பெறுவதன் மூலம் உதவித்தொகையுடன் உயிரியலில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சியில் ஈடுபடலாம்.

மேலும், BCIL நிறுவனம், முதுகலை உயிரித் தொழில்நுட்பம் படித்தவர்களுக்கென்று உதவித்தொகையுடன் கூடிய தொழிற்பயிற்சி வாய்ப்பை அளிக்கிறது. இதில் தேர்வாகும் மாணவர்கள் உயிரியல் சார்ந்த தனியார் தொழில் நிறுவனங்களில் மூன்று ஆண்டுகளுக்குப் பயிற்சியும், பின்னர் அந்த நிறுவனத்திலேயே தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பும் உண்டு.

அரசுப்பணி: இந்தியாவில் பாபா அணு ஆராய்ச்சி மையத்திலும் (BARC), பிரசித்திபெற்ற ஆராய்ச்சி நிலையங்களிலும் பணிபுரிய அறிவியல் அலுவலர்களுக்கான போட்டித்தேர்வு ஆண்டுதோறும் நடக்கிறது. இப்போட்டித் தேர்வில் வெற்றிபெறுவோர் ‘BARC’ மையங்களில் அறிவியல் அலுவலர்களாகலாம்.

முதுகலையில் விலங்கியல், தாவரவியல், உயிரித் தொழில்நுட்பவியல், உயிரியல், உயிர் வேதியியல், மரபியல், நோயியல் போன்ற பாடப்பிரிவுகளில் படித்திருந்தால் ‘BARC’ நடத்தும் அறிவியல் அலுவலர்களுக்கான தேர்வில் பங்கேற்கலாம். துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் மட்டுமல்ல, அரசுத் துறைகளில் பணிபுரிய நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கும், உயிரியல் படிப்பில் பெற்ற பட்டங்கள் உதவும். குடிமைப் பணித் தேர்வையும் எதிர்கொள்ளலாம்.

சுயதொழில் வாய்ப்புகள்: இளங்கலை, முதுகலையில் விலங்கியல், தாவரவியல் படித்து பிறகு உயிரியல் சார்ந்த சுயதொழிலிலும் ஈடுபடலாம். பட்டுப்புழு, மீன், இறால், கோழி வளர்ப்புப் பண்ணைகள், மண்புழு உரம் தாயாரித்தல் போன்ற ஏதேனும் ஒன்றில் கூடுதல் பயிற்சிபெற்று, சுயதொழிலில் வருமானம் ஈட்டலாம்.

- கண்ணன் கோவிந்தராஜ் | merchikannan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in