தித்திக்கும் திருப்புகழ் நாயகன் - 08: திருவீழிமிழலை | வினை அறுக்கும் வீரவேல் முருகன்

தித்திக்கும் திருப்புகழ் நாயகன் - 08: திருவீழிமிழலை | வினை அறுக்கும் வீரவேல் முருகன்
Updated on
2 min read

முருகாவென ஒர்தரமோ தடியார் முடிமேலிணை

தாள் அருள்வோனே. - திருப்புகழ்

பிறப்பு இறப்பு சுழற்சியில்தான் மனித உயிர்கள் சிக்கித் தவிக்கின்றன. செய்த வினைகளுக்கு ஏற்ப நன்மையோ, தீமையோ விளைந்தாலும் அலுப்பும் சலிப்பும் நிறைந்து நிற்கின்றன மனத்தில்..

நம்முடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய வேண்டும் என்பதுதான் நம் அனைவரின் பிரார்த்தனையும் எதிர்பார்ப்பும். என்ன செய்வது என்று திகைத்து நிற்கும்போது, ‘முருகாவென அழை’ என்கிறார் அருணகிரிநாதர்.

“நிலையற்ற உலகில், நிலையற்ற பொருளை நாடி ஓடிச் சலிக்கும் மனமே, முதலிலேயே நீ முருகா என்று ஒரு தரம் கூவி அழைத்திருந்தால் அவன் தன் தாள் தந்து உன்னைக் காப்பாற்றி இருப்பானே” என்கிறார் அருணகிரியார்.

சலிப்பைப் போக்கும் சந்நிதி: முருகனால் ஆட்கொள்ளப்பட்டு அவனின் தலங்களைத் தரிசித்துவந்த அருணகிரியார் இங்கே ஒரு பாடல்தான் பாடியிருக்கிறார். அவர் தரிசித்த 52ஆவது தலமான திருவீழிமிழலை பல சிறப்புகள் உடைய தலம். திருமணத் தடை நீக்கி, பாவங்களைப் போக்கி, நம்மைக் காக்கும் தலம்.

அப்பர், சம்பந்தர் இங்குள்ள ஈசனைப் பாடி படிக்காசு பெற்றுப் பஞ்சம் வந்த காலத்தில் மக்களுக்கு உதவி செய்தனர். இத்தலத்தில் அருளும் முருகனிடம் தன் பிறவித் துன்பத்தைக் கூறி சலித்துக்கொள்கிறார் அருணகிரிநாதர்.

எத்தனை பிறவிகள்? மாதா வயிற்றில் கருவாய் உருவாகி, பிறக்கிறோம். மறுபடியும் பிறந்து இவர் என்று ஆகி இவர் போய் அவர் என்றாகி, பல பிறவிகள் எடுத்துச் சலிக்கிறோம். எத்தனை, எத்தனை பிறவிகள்? ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொரு தாய்.

“ஒருதாய் இருதாய் பலகோடியதா யுடனே யவமா யழியாதே” என்பவர் “ஒருகால் முருகா பரம குமாரா உயிர்கா வெனவோ தருள் தாராய்” என்று இறைஞ்சுகிறார்.

வினை தீர்க்கும் வேல்: “ஒரு தரமாவது முருகா, பரமா, குமரா என்று உன்னைக் கூவி அழைக்க நீதான் அருள் செய்ய வேண்டும்” என்று கூறும் அருணகிரிநாதர், “அப்படி உன்னை ஓதும் அடியவர்களுக்கு நீ உன் திருவடி தீக்ஷை தந்து அருள்கிறாய்” என்று புகழ்கிறார்.

‘முனிவோர் அமரோர் முறையோ வெனவே முதுசூரர்

மேல் விடும் வேலா’

- என்று முருகன், சூரனை வதைத்த நிகழ்வை இங்கே கூறுகிறார் அருணகிரியார். சூரனின் கொடுமை தாங்காமல் தேவர்களும் முனிவர்களும் கந்தனிடம் முறையிட அவன் வேலால் சூரனை வதைத்தான் என்கிற புராண நிகழ்ச்சி இங்கே கூறப்படுகிறது.

எவரும் அறியாப் பெருமை: உருகி, உணர்ந்து நீயே பரம்பொருள் என்னைக் காக்க வா முருகா என்று கதறி அழைக்கிறார் அருணகிரிநாதர். திருமால், பிரம்மா அறியாதவர் முருகன். யாராலும் அறிந்துகொள்ள முடியாத பெருமை வாய்ந்தவன் கார்த்திகேயன். பிறவிகள்தோறும் நம்முடன் வருபவன் அவன் மட்டுமே.

‘எருவாய் கருவாய் தனிலே யுருவா யிதுவே பயிராய் விளைவாகி

இவர்போயவரா யவர்போயிவரா யிதுவே தொடர்பாய் வெறிபோல

ஒருதாயிருதாய் பலகோடிய தாயுடனே யாவமாய் அழியாதே.

ஒருகால் முருகா பரமா குமரா உயிர்காவெனவோ தருள்தாராய்

செழுமா மதில் சேரழகார் பொழில் சூழ் திருவீழியில் வாழ் பெருமாளே’

- என்று பாடுகிறார். நாம் என்ன காரியம் செய்தாலும் ஏதோ ஒரு தடை வருகிறது. செய்ய முடியாமல் மனச் சோர்வு. எடுத்த காரியத்தை எப்படி முடிப்பது என்று திகைப்பு. முருகனால் மட்டுமே நம் சலிப்பை, ஏற்படும் தடையை நீக்கி வெற்றி அருள முடியும். ஒருமுறை கூப்பிட்டாலே ஓடி வந்து தன் திருவடி அருளும் கந்தன், ‘அவனே கதி..’ என்று இறுகப் பற்றிக்கொண்டால் வராமல் இருப்பானா?

பிறப்பு இறப்புச் சூழலை நீக்குபவன் குமரன். இவ்வுலகில் நம் துன்பங்களை நீக்கி, மேலுலகத்தில் தன் பாத நிழலில் அடைக்கலம் தருபவன் முருகவேல். கந்தா என்று கதறிடக் கைதூக்கி விடுபவன் அவன்.

இந்தத் திருப்புகழைப் பாராயணம் செய்வதன் மூலம் நம் பிறவிப் பிணிகளை நீக்கி, காரியத் தடைகளை அகற்றி வெற்றியைத் தருவான் வீரவேல் முருகன்.

(புகழ் ஓங்கும்)

- ஜி.ஏ.பிரபா | gaprabha1963@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in