Published : 01 Sep 2017 11:23 AM
Last Updated : 01 Sep 2017 11:23 AM

கோலிவுட் கிச்சடி: விஜய், கார்த்தி, பிரபுதேவா போட்டி

ரும் தீபாவளிக்கு முன்னணிக் கதாநாயகர்கள் என்ற வரிசையில் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘மெர்சல்’, கார்த்தி நடிப்பில், ‘சதுரங்க வேட்டை’ படத்தின் இயக்குநர் வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’, பிரபுதேவா நடிப்பில் எஸ்.கல்யாண் இயக்கத்தில் ‘குலேபகாவலி’ ஆகிய மூன்று படங்கள் பாக்ஸ் ஆபீஸில் மோத இருக்கின்றன.

இயக்கத்திலும் ஒரு கை!

‘கபாலி’ படத்தில் இடம்பெற்ற ‘நெருப்புடா’ பாடலை எழுதிப் பாடியதன் மூலம் புகழ்பெற்றவர் அருண்ராஜா காமராஜ். நடிகர், பாடலாசிரியர், பாடகர் எனப் பலமுகம் காட்டிவரும் இவர், தற்போது இயக்குநராகவும் களமிறங்கியிருக்கிறார். பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்துத் திரைக்கதை எழுதி முடித்திருக்கும் அருண்ராஜா, அதைப் படமாக்க, கிரிக்கெட் வீராங்கனைகளைத் தேடி தென்மாநிலங்கள் முழுவதும் நட்சத்திரத் தேர்வை நடத்திவருகிறாராம்.

திடீர் இணைப்பு!

‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கார்த்திக் நரேன் தற்போது இயக்கிவரும் படம் ‘நரகாசுரன்’. கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிக்கும் இந்தப் படத்தில் அர்விந்த் சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரேயா உட்படப் பலர் நடித்துவருகிறார்கள். இதற்கிடையில் ‘மீசைய முறுக்கு’ படத்தில் நாயகியாக அறிமுகமான ஆத்மிகாவை இந்தப் படத்தில் திடீரென்று இணைத்திருக்கிறார் இயக்குநர்.‘மாயா’ படத்துக்கு இசையமைத்த ரான் எத்தன் யோஹான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

நான்கு தோற்றங்கள்

‘வாயை மூடி பேசவும்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான துல்கர் சல்மான், ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் ‘சோலோ’ படத்துக்காகக் காத்திருக்கிறார். விக்ரம் நடித்த ‘டேவிட்’ பட இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் துல்கருக்கு நான்கு மாறுபட்ட தோற்றங்கள். நேஹா சர்மா, ஸ்ருதிஹாசன், தன்ஷிகா, ஒரு புதுமுகம் என நான்கு கதாநாயகிகள்.

மீண்டும் கதையின் நாயகி

ன்ஷிகா நடிப்பில் வெளிவந்து சமீபத்தில் பாராட்டுகளைப் பெற்ற இரண்டு படங்கள் ‘எங்க அம்மா ராணி’,‘உரு’. தற்போது மீண்டும் கதாநாயகியை மையப்படுத்தும் ‘குழலி’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகிவருகிறது. ‘வாலு ஜடா’ என்று தெலுங்குப் பதிப்புக்குத் தலைப்பு வைத்திருக்கிறார்கள். கௌதம் மேனன், விக்ரம் கே. குமார், சேரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்த ரமணா மல்லம் இயக்கும் படம் இது.

நகைச்சுவைக் கூட்டணி

கைச்சுவை ‘ஸ்பெஷலிஸ்ட்’ என்று குறிப்பிடப்படும் எம்.ராஜேஷ் இயக்கத்தில் இதுவரை ஆறு படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் ஐந்து படங்களில் நடித்துள்ளார் சந்தானம். ‘சர்வர் சுந்தரம்’, ‘சக்கப்போடு போடு ராஜா’, ‘மன்னவன் வந்தானடி’ ஆகிய படங்கள் சந்தானம் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள நிலையில், எம்.ராஜேஷ் அடுத்து இயக்கவிருக்கும் படம் ஒன்றில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x