Published : 18 Sep 2017 10:59 AM
Last Updated : 18 Sep 2017 10:59 AM

பிராங்பர்ட் கண்காட்சியில் சீன நிறுவனங்கள்!

ண்டுதோறும் நடைபெறும் ஆட்டோமொபைல் கண்காட்சியில் ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் நடைபெறும் கண்காட்சி மிகவும் பிரசித்தம்.

ஏறக்குறைய 120-வது ஆண்டாக இக்கண்காட்சி தற்போது பிராங்பர்டில் நடைபெறுகிறது. 1897-ம் ஆண்டு முதல் நடைபெறும் இக்கண்காட்சியில் உலகெங்கிலும் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தும்.

இந்த ஆண்டு கண்காட்சியில் பேட்டரி வாகனங்களின் அணி வகுப்பு அதிகமாக இடம்பெற்றுள்ளது. அனைத்துக்கும் மேலாக சீன நிறுவனங்கள் இக்கண்காட்சியில் அதிகம் பங்கேற்றுள்ளதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

30 கால்பந்து மைதான அளவுக்கு பிரமாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கில் 1,000-த்துக்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. 11 நாள் நடைபெறும் இக்கண்காட்சியில் 228 புதிய தயாரிப்புகள் 363 புதிய கண்டுபிடிப்புகள் இடம்பெற்றுள்ளன.

புதிய வாகனங்களை பிராங்பர்ட் நகருக்குள் ஓட்டிப் பார்க்கும் வசதியும் இம்முறை செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஆட்டோமொபைல் துறையினர் பேட்டரி வாகன தயாரிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது பேட்டரி கார்களை இங்கு காட்சிப்படுத்தியிருந்தன. வோல்வோ, மாஸ்டா, மிட்சுபிஷி, ஹோண்டா, ஃபியட் ஆகிய நிறுவனங்கள் தங்களது பேட்டரி கார்களைக் காட்சிப்படுத்தி பார்வையாளர்களைக் கவர்ந்தன.

பென்ட்லி நிறுவனத்தின் புதிய கான்டினென்டல் ஜிடி காரைக் காண ஏராளமான மக்கள் குழுமியிருந்தனர். மெர்சிடஸ் நிறுவனத்தின் புராஜெக்ட் ஒன் திட்டத்தின் கீழ் அறிமுகமான ஹைபர் கார் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.

ஆடி ஐகான், பிஎம்டபிள்யூ i3 எஸ், ஜாகுவார் இ டிராபி உள்ளிட்ட வாகனங்களும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

சீனாவைச் சேர்ந்த கிரேட்வால் நிறுவனத்தின் மார்க் தற்போது ஐரோப்பிய சந்தையில் நுழையும் பொருட்டு இக்கண்காட்சியில் பங்கேற்றுள்ளது. விவி5எஸ் என்று பெயரிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்ட இந்த கார் பிஎம்டபிள்யூவின்எக்ஸ்3 காருக்கு போட்டியாக இருக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சீனாவின் மற்றொரு பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான செர்ரி இக்கண்காட்சியில் தனது எம்3எக்ஸ் மற்றும் எக்ஸீட் டிஎக்ஸ் ஆகிய கார்களை அறிமுகம் செய்துள்ளது.

சீன நிறுவனங்கள் ஐரோப்பிய சந்தையில் நுழைவதற்கு பிராங்பர்ட் கண்காட்சி ஒரு நுழை வாயிலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x