Last Updated : 19 Sep, 2017 10:37 AM

 

Published : 19 Sep 2017 10:37 AM
Last Updated : 19 Sep 2017 10:37 AM

ஆங்கிலம் அறிவோமே 178: எதைச் சொன்னாலும் நம்பிவிடுவார்!

கேட்டாரே ஒரு கேள்வி

இளிச்சவாய், ஏமாந்த சோணகிரி என்றெல்லாம் தமிழில் அழைக்கிறோம். இவற்றை ஆங்கிலத்தில் எப்படிக் கூறலாம்?

***********

Echolocation என்பது குறித்து ஒரு வாசகர் விளக்கம் கேட்டிருக்கிறார். Echo என்றால் எதிரொலி. ஒரு ஒலியை உருவாக்கி அது எவ்வளவு வேகமாக மற்றும் எவ்வளவு நேரத்தில் மீண்டும் நம் காதுகளை வந்தடைகிறது என்பதைக்கொண்டு எதிரில் எவ்வளவு தூரத்தில் பொருட்கள் உள்ளன என்பதை அறிய முடியும். கடலின் ஆழத்தை இப்படித்தான் அறிகிறார்கள். நள்ளிரவிலும் வெளவால் இந்த நுட்பத்தைக் கொண்டுதான் பறந்துசென்று இரை தேட முடிகிறது. ‘தாண்டவம்’ திரைப்படத்தில் இந்த டெக்னிக்கைப் பயன்படுத்திதான் பார்வையிழந்த விக்ரம் எதிரியைப் பந்தாடினார்!

***********

Hitchhiker என்பவர் யார்? 

நண்பரே சாலைகளில் ஏதாவது வாகனம் நெருங்கும்போது சிலர் தன் கட்டை விரலை உயர்த்திக் காட்டுவதைக் கவனித்திருப்பீர்கள். முன்பின் அறியாதவர்களின் வாகனங்களில் இப்படி ‘இலவசப் பயணம்’ கோருபவர்தான் Hitchhiker.

ஆனால் Hitch என்பதன் பொருள் வேறு. Hitch என்பது ஒரு தாற்காலிகச் சங்கடம் அல்லது இடையூறு. இதன் காரணமாக ஒரு சிறு தாமதம் ஏற்படக் கூடும். Due to a slight technical hitch, the concert will be starting twenty minutes late.

***********

கேட்டாரே ஒரு கேள்விக்கான பதில் - Patsy. ஒருவரைச் சுலபத்தில் ஏமாற்றலாம் அல்லது அவ​ர் மீது சுலபத்தில் பழி போடலாம் என்றால் அவரை patsy என்பார்கள். 

ஒருவரை credulous person என்றால் அவரிடம் யாராவது எதைச் சொன்னாலும் அப்படியே நம்பிவிடுவார் என்று பொருள். (காக்கை வெள்ளை நிறம் என்பது உட்பட). அந்த விதத்தில் credulous person என்றாலும் pasty போலத்தான்.

‘Cutting corners’ என்பதன் பொருள் என்ன எனக் கேட்கிறார் ஒரு வாசகர்.

பணத்தையோ நேரத்தையோ சேமிப்பதற்காக வேகமாக ஒரு விஷயத்தைச் செய்வதைத்தான் இப்படிக் குறிப்பிடுவார்கள். அதாவது எவ்வளவு திட்டமிட்டு அதைச் செய்ய வேண்டுமோ அப்படித் திட்டமிடாமல் அவசரமாகச் செயல்படுதல். 

சில நேரம் இதனால் வேண்டாத விளைவுகளும் நேரலாம். I was trying to cut corners by not renewing my insurance policy but this fire has ruined me. அதாவது பணத்தை மிச்சப்படுத்துவதற்காக இன்ஷூரன்ஸ் எடுக்காமல் இருந்துவிட, தீ விபத்தின் காரணமாகப் பெரும் நஷ்டம் ஏற்பட்டதை இது குறிக்கிறது. 

எனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்றில் I gave Pranav, a jute bag, a bar of chocolate and a birthday card என்று ஒருவர் குறிப்பிட்டிருந்தார். தேவையான இடத்தில் நிறுத்தக் குறிகளை (punctuations) போடாதது தவறு என்றால், தேவையற்ற இடத்தில் அவற்றைப் பயன்படுத்துவதும், வேண்டாத அர்தத்தைக் கொடுக்கக் கூடும். மேற்படி வாக்கியத்தில் தான் ஒரு சணல் பையோடு ஒப்பிடப்படுவதைப் பிரணவ் ஏற்றுக்கொள்வாரா என்பது தெரியவில்லை (அதாவது பிரணவ் என்ற வார்த்தைக்குப் பிறகு comma இடம் பெற்றிருக்கக் கூடாது).

இது தொடர்பாக நான் முன்பு படித்த ஒரு சுவாரசியமான நிகழ்வு நினைவுக்கு வருகிறது.

“Woman without her man is nothing” என்ற வாக்கியத்தைக் கரும்பலகையில் எழுதினார் ஆசிரியர். அந்த வாக்கியத்தைச் சரியான நிறுத்தக் குறிகளுடன் எழுதச் சொன்னார். 

வகுப்பில் உள்ள மாணவர்கள் இப்படி எழுதினார்கள். “Woman, without her man, is nothing”.

அதே வகுப்பில் இருந்த மாணவிகள் இப்படி எழுதினார்கள். “Woman - without her, man is nothing”.

“Bad grammar is like having bad breath - even your best friends won’t tell you”. வாசகர் ஒருவர் அனுப்பியுள்ள இந்த வாக்கியத்தை நான் மீண்டும் ஒருமுறை படித்ததற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அது தெரிவிக்கும் செய்தி. இன்னொன்று? 

Bad grammar is like bad breath என்று அந்த வாக்கியம் இருந்திருக்க வேண்டும். அல்லது using bad grammer is like having bad breath என்று இருந்திருக்க வேண்டும். இந்த இரண்டில் ஒன்றுதான் Good grammar. 

தொடக்கம் இதுதான்

Draconian என்ற வார்த்தைக்கு மிகவும் கடுமையான என்று பொருள். இந்த வார்த்தை தோன்றிய விதம் சுவையானது.

அன்றைய கிரேக்க நாட்டின் தலைநகர் ஏதென்ஸில் ட்ராக்கோ (Draco) என்ற நீதிபதி இருந்தார். கி.மு. 621-ல் இவர் அந்த நகருக்கான சட்டங்களை எழுத்துபூர்வமாக உருவாக்கினார். அதற்கு முன்னால் அந்த நாட்டின் நீதிபதிகள் தங்கள் மனதுக்கேற்றபடி அங்கு நிலவிய சட்டங்களை மாற்றியமைத்துத் தீர்ப்பு வழங்கினர். ஆனால், இவை எழுத்து வடிவில் உருவான பிறகு ஒவ்வொரு குற்றத்துக்கும் அதற்குரிய தண்டனை இதுதான் என்று வரையறுக்கப்பட்டது. ஆனால், தண்டனைகள் மிகவும் கடுமையானவையாக இருந்தன. சின்னச் சின்னக் குற்றங்களுக்குக்கூட மரண தண்டனை! 

கி.மு. 594-ல் சோலோன் என்ற ஆட்சியாளர் கொலை போன்ற மிகக் கடுமையான குற்றங்களுக்கான தண்டனைகளை மட்டும் வி​ட்டுவிட்டு பிற சட்டங்களை நீக்கினார். 

நாளடைவில் அளவுக்கு அதிகமான கடுமை கொண்ட எதையும் குறிக்க draconian என்ற வார்த்தை உருவாக்கப்பட்டது. Hitler destroyed the independence of the Jews by a series of draconian laws. The draconian measures taken by the police were strongly condemned. 

சிப்ஸ்

Both accused each other of bribery. இது சரியான வாக்கியமா?

இல்லை. Each accused the other of bribery. 

Roundup என்றால்?

வளைத்துப் பிடிப்பது - Capture.

et al என்றால்?

லத்தீன் வார்த்தைகளான et alia என்பவற்றிலிருந்து வந்தது இது. இதன் பொருள் மற்றும் பிற (‘and others’).

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x