

முன்பெல்லாம் போட்டித் தேர்வுக்குத் தயாராவோர் தங்களுடைய பெரும்பாலான நேரத்தை நூலகங்களில்தாம் செலவிடுவார்கள். செய்தித் தாள்கள் படிப்பது, தேர்வுக்கான நூல்களை எடுத்துப் படிப்பது எனத் தேர்வு முடியும் வரை நூலகமே தேர்வர்களின் உலகமாக இருக்கும்.
ஆனால், இந்த இணைய யுகத்தில் போட்டித் தேர்வுக்கு உதவும் இணையங்கள் மட்டுமல்லாமல், பிரத்யேக செயலிகளும் தேர்வர்களுக்கு உதவுகின்றன. இது போன்ற செயலிகள் சிலவற்றை மத்திய, மாநில அரசுகள்கூட அறிமுகப்படுத்தியுள்ளன. அது போன்ற சில செயலிகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்:
நல்ல ‘நோக்கம்’ - தமிழ்நாட்டில் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி அறிமுகப்படுத்தியிருக்கும் ’நோக்கம்’ (Nokkam) என்கிற செயலியில் அரசுப்பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், வங்கிப் பணியாளர் தேர்வு போன்ற தேர்வுகளுக்கு இலவசமாகப் பயிற்சிப் பெறலாம்.
ஏற்கெனவே ‘AIM TN’ என்ற யூடியூப் அலைவரிசையில் பயிற்சிக் காணொளிகள் பதிவேற்றப்பட்டுவரும் நிலையில், தற்போது ‘நோக்கம்’ செயலியில் பாடத்திட்டம், முக்கிய பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள் ஆகியவை தேர்வு வாரியாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
தமிழில் கிடைக்கப்பெறும் இக்குறிப்புகளால் மாணவர்கள் தங்கள் தயாரிப்பு முறையைச் சரியாகத் திட்டமிட்டு மாதிரித்தேர்வுகளில் பங்கேற்று பயன் பெற முடியும். ‘நோக்கம்’ செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அறிவுக் களஞ்சியம்: மத்திய அரசின் ’ஸ்வயம்’ (Swayam) என்கிற இணையதளத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை தனித்தனி பிரிவுகளில் பாடக்குறிப்புகள், பாடங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இத்தளத்தில் பாடங்களைப் படிக்க முடியும், காணொளிக் காட்சி வழியாகப் பார்க்கவும் முடியும்.
இந்தத் தளத்தில் வழங்கப்படும் குறிப்புகள் இலவசமாக இருந்தாலும், குறிப்பிட்ட பாடத்தில் சான்றிதழ் பெற கட்டணம் செலுத்தி தேர்வுக்குப் பதியலாம். இத்தளத்தில் வழங்கப்படும் பாடங்களின் தரத்தை உறுதிப்படுத்துவதற்காகக் கண்காணிப்பு குழுக்களும் உண்டு.
மேலும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி கழகம், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப கற்றல் தேசிய திட்டம், பல்கலைக்கழக மானியக் குழு, இளங்கலை கல்விக்காகக் கல்வி தொடர்புக்கான கூட்டமைப்பு, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தேசிய திறந்தநிலை கல்விக் கழகம், இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகம், இந்திய மேலாண்மை நிறுவனம், தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய குழுக்களும் இதில் இயங்கி வருகின்றன.
இவை தவிர்த்து பள்ளிக் கல்விக்கான அறிவுக் களஞ்சியமாக இ-பாடசாலை (e-pathshala) இணையதளமும் இயங்கி வருகிறது. 1 - 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் வெவ்வேறு மொழிகளில் இ-பாடசாலை இணையதளத்தில் பாடங்களைப் படிக்கலாம்.
மேலும் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பாக அமைக்கப்பட்ட தேசிய டிஜிட்டல் நூலகத்தில் (National Digital Library of India) விருப்பமுள்ளவர்கள் உறுப்பினராகப் பதிவுசெய்து பயன்படுத்திக் கொள்ளலாம். பள்ளிப்பாடங்கள், பொறியியல், அறிவியல், இலக்கியம், வாழ்வியல், சட்டம், மேலான்மை ஆகிய துறைச் சார்ந்த படிப்புகளும் இதில் கிடைக்கின்றன.
தற்போது டிஜிட்டல் வழி கல்வி ஊக்கப்படுத்தப்படும் நிலையில் படிப்புக்காகவும் போட்டித் தேர்வுக்காகவும் இலவசமாகக் கிடைக்கும் இப்பாடங்களைத் தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.