

சர்.சி.வி.ராமனும் அவரது ஆராய்ச்சி மாணவர் கிருஷ்ணனும் 1928, பிப்ரவரி 28 அன்று கண்ணுறு ஒளியைத் திரவத்தில் விழச் செய்தால், அது ஒளியை மூன்று விதங்களில் சிதறடிக்கிறது என்று கண்டறிந்தனர். இதுவே ‘ராமன் விளைவு’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்புக்காக ராமன் இயற்பியல் நோபல் பரிசு பெற்றார்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமனும் அவரது உதவியாளர் கிருஷ்ணனும் அறிவியலை மிகச்சிறந்த அளவில் மேம்படுத்தினர். உலக அளவில் புகழ்பெற்ற இந்திய அறிவியல் கழகத்தை (ஐ.ஐ.எஸ்சி) பெங்களூருவில் நிறுவியவர் ராமன்.
பின்னர் அவர் பெயரிலேயே ‘ராமன் ஆராய்ச்சி நிறுவனம்’ (ஆர்.ஆர்.ஐ.) என்ற அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்பட்டது. ராமனால் தொடங்கப்பட்ட ஐ.ஐ.எஸ்.சி, ஆர்.ஆர்.ஐ. அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களில் இன்று தமிழ்நாட்டு மாணவர் சேர்க்கை விகிதத்தைப் பார்க்கும்போது வருத்தமே ஏற்படுகிறது.
இந்தியாவில் மத்திய அரசால் அமைக்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட அறிவியல் உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் மிகச்சிறந்த வசதிகளோடு இருக்கின்றன. இங்கு முதுகலை அறிவியல் கல்வியோடு இணைந்த முனைவர் ஆராய்ச்சி படிப்பு, முது முனைவர் ஆராய்ச்சி படிப்புகள் உள்ளன.
இங்கு படிப்பவர்களுக்கு மத்திய அரசின் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இங்கு உலக அளவில் ஒவ்வொரு துறையிலும் புகழ்பெற்று விளங்கும் அறிவியல் அறிஞர்களோடு பழகும் வாய்ப்பும் இணைந்து ஆய்வு செய்யும் வாய்ப்பும் கிடைக்கிறது. ஆனால், கடந்த சில பத்தாண்டுகளாகவே இம்மாதிரியான ஆராய்ச்சி நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் சேர்வது மிகவும் குறைந்துவிட்டது.
சென்னை கணித அறிவியல் நிறுவனம், சென்னை கணிதவியல் நிறுவனம் போன்றவற்றில் மேற்கு வங்காளம், கேரளம், ஆந்திரத்தைச் சேர்ந்த மாணவர்களே அதிகம் படிக்கிறார்கள். தமிழ்நாட்டு மாணவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கிறார்கள்.
அதேபோல் இங்கு பணிபுரியும் பேராசிரியர்களில் தமிழர்களின் பங்களிப்பு மிகக் குறைவு. இந்தியாவிலேயே உயர்கல்வியில் அதிக சேர்க்கை விகிதம் உள்ள (46.9 %) தமிழ்நாட்டில், முதுகலைக்கோ முனைவர் படிப்புக்கோ இந்த அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களுக்குச் செல்லும் எண்ணிக்கை குறைவு என்பது முரணான நிலை.
‘NIRF’ அறிக்கையின்படி இந்தியாவில் உள்ள முதல் நூறு கலை அறிவியல் கல்லூரிகளில் தமிழ்நாட்டில் மட்டும் 37 கல்லூரிகள் இடம்பெற்று இருக்கின்றன. அப்படியெனில் இம்மாதிரியான ஆராய்ச்சி நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் அதிகம் சேர்ந்திருக்க வேண்டும்.
ஆனால், உண்மை நிலையோ தலைகீழ். இங்கே சேர்வதில் என்ன பிரச்சினை? இந்த நிறுவனங்களில் சேர இந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் கூட்டாக நடத்தும் JEST, JAM, GATE போன்ற நுழைவுத்தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால், நம் மாணவர்களால் பெரிதளவில் இத்தேர்வுகளில் வெற்றி பெற முடிவதில்லை. நுழைவுத் தேர்வுகளின் கடினத்தன்மையும் இதற்கு ஒரு காரணம்.
பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகள் மருத்துவராகவோ பொறியாளராகவோ வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், அறிவியல் அறிஞரை உருவாக்க ஆர்வம் குறைவாகவே இருக்கிறது. ஒரு சமூகம் முன்னேற வேண்டுமென்றால் அறிவியல் முன்னேற்றம் மிக முக்கியம்.
பல ஆண்டுகளாகத் தமிழ்நாடு அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களில் குறைவான பங்களிப்பை அளித்துவருவது பற்றிப் பொதுவெளியில் அதிக விவாதம் நடைபெறவில்லை.
தமிழ்நாட்டில் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எஸ்சி போன்ற ஆராய்ச்சி நிறுவனங்களில் இளங்கலைப் படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பதுபோல கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் முதுகலை, முனைவர், ஐ.ஐ.எஸ்சி. மாணவர்களையும் அரசு ஊக்குவிக்க வேண்டும்.
அறிவியல் உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களுக்குச் செல்ல நடக்கும் நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சி பெறும் வசதிகளை மாவட்ட நூலகங்களில் ஏற்படுத்த வேண்டும்.
உலகத் தரத்தில் அடிப்படை அறிவியல் ஆய்வு மையங்கள் மாவட்டந்தோறும் அமைக்கப்பட வேண்டும். அறிவியலுக்கு அதிக நிதி ஒதுக்கிய நாடுகள் மிகச்சிறப்பாக முன்னேறி உள்ளன என்பது வரலாறு.
எனவே, அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிக்குத் தனிப்பட்ட ஆணையம் அமைத்து, அதற்குத் தேவைப்படும் நிதி ஆதாரங்களை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்துவது காலத்தின் தேவை.
- சி. ஜோசப் பிரபாகர் | josephprabagar@gmail.com