Last Updated : 24 Sep, 2017 11:47 AM

 

Published : 24 Sep 2017 11:47 AM
Last Updated : 24 Sep 2017 11:47 AM

அழகிய கண்ணே 2: கீர்த்தி ஏன் திருடினாள்?

ன்றைய பெற்றோரின் மிகப் பெரிய கவலை குழந்தைகளின் ஸ்மார்ட் போன் பயன்பாடு. “என் மகன் எப்போதும் போனும் கையுமாகவே இருக்கிறான். ஸ்மார்ட் போன் வாங்கித் தரச் சொல்லி என் மகள் அடம்பிடிக்கிறாள். அதுல அப்படி என்னதான் இருக்கோ” என்று அலுத்துக்கொள்ளாத பெற்றோர் இன்று குறைவு. ஸ்மார்ட் போன்கள், கால மாற்றத்தின் தவிர்க்க முடியாத அம்சம். நண்பர்களோடு பேசவும், வீட்டுப் பாடம் குறித்து விவாதிக்கவும் குழந்தைகள் சிறு வயதிலேயே ஸ்மார்ட் போனைப் பயன்படுத்துகிறார்கள். அந்தக் காலத்தில் லேண்ட் லைன் போன் இருக்கும். குழந்தைகள் தங்கள் நண்பர்களுடன் பேசும்போது நாமும் உடனிருப்போம். அதனால் அவர்கள் நண்பர்கள் குறித்தும் அவர்களின் உரையாடல் குறித்தும் நம்மால் ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் ஸ்மார்ட் போன்கள் அப்படியல்ல. அவர்கள் யாருடன் பேசுகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடிவதில்லை. அப்படியே கேட்டாலும் தங்கள் அந்தரங்கத்தில் குறுக்கிடுவதாக குழந்தைகள் நினைக்கிறார்கள்.

சில அடிப்படை விஷயங்களைப் பெற்றோர் புரிந்துகொண்டால் தேவையிலாத பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். பொதுவாக ஐந்து, ஆறு, ஏழு ஆகிய வகுப்புகளில் படிக்கும் குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் பாலினத்தைச் சேர்ந்தவர்களிடம்தான் அதிகம் பேசுவார்கள். எட்டாம் வகுப்பின் இடையிலோ அல்லது ஒன்பதாம் வகுப்பின் ஆரம்பத்திலோதான் எதிர்ப்பாலினரோடு பேசத் தொடங்குவார்கள். குழந்தைகள் பள்ளியில் இருக்கிற எட்டு மணி நேரம் யாருடன் பேசுகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று நமக்குத் தெரியாது. அதைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதும் இல்லை. ஆனால், பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் அவர்களின் செயல்பாட்டைக் கண்காணிக்க விரும்புகிறோம். இது தவறு. பள்ளிச் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்வதைப்போல் நாம் இதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், அவர்களுக்கென்று தனியாக ஒரு போன் வாங்கித் தராமல் வீட்டில் அனைவருக்கும் பொதுவாக இருக்கும் போனில் இருந்தே பேசச் சொல்லலாம்.

தேவை கூட்டு முயற்சி

தன் வகுப்பில் மற்ற குழந்தைகள் போன் வைத்திருப்பதைப் பார்த்துதான் பலரும் தங்கள் பெற்றோரிடம் போன் கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். சில குழந்தைகள் எடுத்துச் சொன்னாலே அமைதியாகிவிடுவார்கள். ஆனால், பல குழந்தைகள் அழுது, ஆர்ப்பாட்டம் செய்வார்கள். இந்த இடத்தில் கூட்டு முயற்சி மூலம் அவர்களைச் சமாளிக்க வேண்டும். நம் குழந்தைகளின் நண்பர்கள் வட்டத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். செல்போன் பயன்பாடு குறித்து அவர்களின் பெற்றோரிடம் பேசலாம். இனி நம் குழந்தைகளுக்கு தனி செல்போன் தருவதில்லை என்று அனைவரும் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றி அதைச் செயல்படுத்தலாம். இப்படிச் செய்தால் நண்பர்களிடம் போன் இருப்பதைக் காரணம்காட்டி தனக்கும் போன் வேண்டும் என்று கேட்பது குறையும்.

வீட்டு உறுப்பினர்களின் ஒத்துழைப்பும் இதில் அவசியம். தனிக் குடும்பமோ, கூட்டுக் குடும்பமோ அதில் இருக்கிற பெரியவர்கள் தங்களின் செல்போன் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் யாருமே செல்போனை சீந்தவில்லை என்றால் குழந்தைகளுக்கும் அதன் மீது மோகம் ஏற்படாது. உனக்காக என்னால் நேரம் செலவிட முடியும், போன் தவிர நீ கேட்பதைச் செய்கிறேன் என்று சொல்ல முடியும். வீட்டுப் பாடங்களை பெற்றோரின் செல்போன் மூலமாகவே பகிர்ந்துகொள்ளலாம்.

கட்டுப்பாடு அவசியம்

சில பெற்றோர், தங்கள் குழந்தை விளையாட வேண்டும் என்பதற்காக சிம் கார்டு இல்லாமல் செல்போனைக் கொடுத்திருப்பார்கள். ஆனால் ஒரு முறை சிம் கார்டை போட்டு எடுத்தாலே அதில் வாட்ஸ் அப் டவுன்லோடு ஆகிவிடும் என்று ஆறாம் வகுப்பு குழந்தைக்குக்கூட தெரியும். இந்த இடத்தில்தான் பெரும்பாலான பெற்றோர் கோட்டைவிடுகிறார்கள். வாட்ஸ் அப், யூடியூப் மூலம் குழந்தைகள் என்ன மாதிரியான வீடியோக்களைப் பார்க்கிறார்கள் என்று நமக்குத் தெரியாது. மொபைல் கேம்ஸும் இன்று ஆபத்து நிறைந்தவையாகவே இருக்கின்றன. முன்பெல்லாம் நல்லது வாழும், கெட்டது வீழும் என்ற அடிப்படையில்தான் மொபைல் கேம்ஸ் உருவாக்கப்பட்டன. ஆனால், இன்று பெரும்பாலான விளையாட்டுகள் வன்முறையை அடிப்படியாகக் கொண்டுதான் உருவாக்கப்படுகின்றன. அடுத்தவரைக் கொல்வது, அழித்தொழிப்பது போன்றவைதான் வெற்றிக்கான இலக்காக இருக்கின்றன. நேர்மை, உண்மை, நியாயம் போன்ற ஒழுக்க நியதிகளுக்கு இவற்றில் வேலையே இல்லை. மொபைல் விளையாட்டுக்கும் நிஜத்துக்கும் வேறுபாடு தெரியாமல் அதிலேயே மூழ்கிப் போகிற குழந்தைகளும் உண்டு.

சிந்தனையில் ஏற்படும் மாற்றம்

அடுத்தவரைக் கொன்றுதான் வெல்ல முடியும் என்பது போன்ற விளையாட்டுகளைத் தொடர்ந்து விளையாடுகிற குழந்தைகள் தங்களையும் அறியாமல் அந்தச் சிந்தனைகளுக்கு ஆட்பட்டுப் போகிறார்கள். அடுத்தவருக்கும் உணர்வு உண்டு, அவருக்கும் வலிக்கும் என்பதே அவர்களுக்கு மறந்துபோகிறது. அதனால் தன்னைச் சுற்றி இருக்கிறவர்களை அணுகுவதும் மாறிவிடும். தவிர இன்று ஒவ்வொரு விளையாட்டிலும் பல்வேறு படிநிலைகள் இருக்கின்றன. ஒரு நிலையை முடித்துவிட்டால் இன்னொன்று. அதை முடித்தால் அடுத்த நிலை. இப்படியே பல்வேறு நிலைகளுக்குச் செல்ல வேண்டும். முதல் நிலையில் பத்து பட்டாம்பூச்சிகளைப் பிடிக்க வேண்டும் என்றால் ஐந்தாவது நிலையில் ஐந்து சிறுமிகளைப் பிடிக்க வேண்டும் என்று இருக்கும். அதை விளையாடுகிற குழந்தை என்ன நினைக்கும்? உண்மையிலே அப்படிக் குழந்தைகளை யாருக்கும் தெரியாமல் தூக்கிக்கொண்டு வருவது நல்லது என்றுதானே அந்தக் குழந்தைக்குத் தோன்றும். கீர்த்திக்கு நேர்ந்ததும் அதுதான்.

விளையாட்டும் வினையாகும்

கீர்த்தி, அறிவும் அன்பும் நிறைந்த சிறுமி. படிப்பிலும் சிறு பிசகில்லை. ஒரு நாள் அவளுடைய அலமாரியைத் திறந்து பார்த்த அவளுடைய அம்மாவுக்கு அதிர்ச்சி. அலமாரி முழுக்க கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பேனாக்கள். அத்தனையும் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் பேனாக்கள். அதிர்ச்சியில் வாயடைத்துப் போன அம்மா, கீர்த்தியிடமே கேட்டிருக்கிறார். அத்தனை பேனாக்களையும் தன்னுடன் படிக்கும் மாணவர்களுக்குத் தெரியாமல் திருடிக்கொண்டு வந்திருக்கிறாள் கீர்த்தி. எதைக் கேட்டாலும் வாங்கித் தரக்கூடிய குடும்பத்தில் பிறந்த தங்கள் மகள் ஏன் திருட வேண்டும் என்று கேள்வியோடு என்னிடம் கீர்த்தியை அழைத்துவந்தனர். கீர்த்தியிடம் பேசியபோது அவள் செய்தது தவறு என்பதுகூட அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. அடுத்தவர் பொருளைத் திருட வேண்டும் என்ற எண்ணமும் அவளுக்கு இல்லை. பின் ஏன் திருட வேண்டும்? மொபைலில் அவள் தொடர்ந்து விளையாடிய விளையாட்டின் தாக்கம் அது என்பது பிறகுதான் புரிந்தது. அந்த விளையாட்டில் ஒரு சிறுமி தன்னுடன் படிக்கும் மாணவர்களின் பென்சிலைச் சேகரிப்பாளாம். அதையே நிஜத்திலும் செய்திருக்கிறாள் கீர்த்தி. இப்படித்தான் பெரும்பாலான் விளையாட்டுகள் குழந்தைகளின் நேர்மறைச் சிந்தனையை அழித்துவிடுகின்றன.

சிறு குழந்தைகளோ, வளர்ந்தவர்களோ யாராக இருந்தாலும் அவர்களின் சுதந்திரத்தில் நாம் தலையிடக் கூடாது. ஆனால், அவர்களைத் தள்ளி நின்று கண்காணிக்க வேண்டும். “உனக்கு ஏதாவது பிரச்சினை என்றால் பிடித்துக்கொள்ள என் கை உன்னுடனே இருக்கிறது” என்ற நம்பிக்கையை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதுதான் அவர்கள் பாதை மாறிச்செல்லாமல் பாதுகாக்கும்.

வளர்ந்த குழந்தைகளைக் கொஞ்சலமா? அதைப் பற்றி அடுத்த வாரம் தெரிந்துகொள்வோம்.

(வளர்ப்போம் வளர்வோம்)

கட்டுரையாளர், குழந்தைகள் நல மற்றும் வளரிளம் பருவ சிறப்பு மருத்துவர்.

தொடர்புக்கு: dryamunapaed@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x