Published : 05 May 2017 11:32 AM
Last Updated : 05 May 2017 11:32 AM

கிருஷ்ணதேவராயர் சாப்பிட்ட லாலிபாப்

ஃபேஸ்புக், ட்விட்டர், ப்ளாக் என்று ரகளையாய்ப் போய்க்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், தமிழ்ச்சமூகம் தனக்கென ஒரு எழுத்து பாணியை உருவாக்கிக்கொண்டுள்ளது என்பதுதான் உண்மை. ஒரு சில கோட்பாடுகளை கடைப்பிடித்தால் யார் வேண்டுமானாலும் எழுத்தாளர் ஆகலாம் என்ற நிலை. அதற்கு முதல் உதாரணமே இப்பொழுது நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் இந்த கட்டுரைதான். மன்னிக்கவும். கட்டுரை அல்ல. பதிவு என்று சொல்லவேண்டும். ஏனெனில், நாம்தான் எழுதுவதில்லையே. இப்பொழுதெல்லாம் நமது அனுபவங்களை, பார்த்த, படித்தவைகளை பதிவுதானே செய்கிறோம். அல்லது குறைந்தபட்சம் மீள்பதிவாவது.

சரித்திர ஓட்டத்தின் சுவடாக நாம் சுட்ட தோசைகளும், அவற்றோடு சேர்த்துக் குழைத்து அடித்த, வரலாறு காணா கார சட்னியும், அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு ஓலாவில் உலவிவந்த அந்த ஆழ்ந்த தருணங்களும், அவை நமக்கு உணர்த்திய இருத்தலியல் உண்மைகளும், பின் நவீனத்துவத்தின் வரம்பில் ஊடாடும் நமக்கும் நமது குடும்பத்துக்குமான உறவுச்சிக்கல்களினின்றும் அப்பாற்பட்டு விளங்கும் சின்ன சின்ன சந்தோஷங்களும் என ஆரம்பித்து… நாம் பார்த்து காறிதுப்பிய படம், பாட்டு, புத்தகம், நாடகம், நாம் பார்த்து காறிதுப்பிய அரசியல் ”breaking news”, அரசியல்வாதி, நாம் பார்த்து காறிதுப்பிய நடிகர் நடிகையர், பிரபலம், ஆளுமை என்று இணையதளம் முழுவதும் நமது மனதில் தேங்கிக்கிடந்த எச்சிலால் நிரம்பிவழிகிறது.

இப்படி பதிவிடுவோர் சில முறைகளைக் கையாண்டு ஒரு தனித்துவமிக்க பாணியைக் கொண்டுவந்துள்ளனர். இவர்களுக்கிடையே நம்மை மிகச்சிறந்த அறிவாளியாக, சொல்லாட்சி மிகுந்தவராக முன்னிறுத்திக் கொள்ளவேண்டுமாயின், அந்தக் கோட்பாடுகளை நாமும் பின்பற்றவேண்டும்.

முதலில், சில வார்த்தைகளையும் சொல்லாடல்களையும் நமது எழுத்தில் எப்படியாவது புகுத்திவிடுவது அவசியம். அந்த வார்த்தைப்பட்டியலில் மிக முக்கியமான ஒன்று – குறியீடு. இதை எங்கு வேண்டுமானாலும் தனியாகவும் பிற வார்த்தைகளுடனும் சேர்த்தும் பிரயோகிக்கலாம். எந்த ஒன்றிலும் அரசியல், மத, சாதி குறியீட்டையோ, ஆதிக்க கலாச்சாரத்தின் குறியீட்டையோ, உளவியல் ரீதியான குறியீட்டையோ கண்டடைந்து அதை வெளிச்சம் போட்டுக்காட்டுவதே பதிவரின் கடமை. அதாவது, அது அது, அது அதுவாக இல்லை, அதற்குள் வேறொன்று உள்ளடங்கிக்கிடக்கிறது என்ற நுண்ணிய கருத்தை நாம் உணர்ந்து மற்றவருக்கும் உணர்த்தவேண்டும்.

2008-இல் கூத்துப்பட்டறையில் திரு ந முத்துசாமி ஐயாவின் தெனாலிராமன் நாடகத்தை நாங்கள் கையாண்ட போது, அந்த நாடகம் அரசியல் பார்வை மற்றும் அபத்தத்தன்மை பொருந்திய பிரதியையும் தாண்டி, குழந்தைகள் ரசிக்கும்படியான கோமாளித்தனங்களுக்கான சாத்தியங்களையும் கொண்டிருந்தது. அதனால் நாடகத்தின் இயக்குனர் பாத்திரங்களை வடிவமைத்தபோது கிருஷ்ணதேவராயர் வாயில் லாலிபாப் சப்பிக்கொண்டு வருவதாக இயற்றினார்.

இந்த நாடகம் 10 நாட்கள் பட்டறையில் அரங்கேறிய போது, அதைப்பார்த்த ஒரு மாபெரும் நாடக ஆய்வாளர், ஆர்வலர், மேதை – கன்னட அரசனான கிருஷ்ணதேவராயரை லாலிபாப் சப்பிக்கொண்டு வரும் பாத்திரமாக சித்தரித்ததில் ஒரு தற்கால அரசியல் குறியீடு உள்ளது என்றும், மேலும் அந்த லாலிபாப்பானது ஒரு “phallic symbol” என்றும் கூறியிருந்தார். அப்பொழுது தான் எங்களுக்கே அந்த கோணம் புரிந்து, அடுத்து நடந்த காட்சிகளில் நிறைய லாலிபாப் வாங்கிக்கொடுத்தோம் அரசருக்கு.

இது எதைக்குறிக்கிறது என்றால் – உங்கள் பதிவிலோ மூளையிலோ குறியீடே இருக்க அவசியமில்லை. பொதுப்புத்தியிலுள்ள பிரச்சினைகளை சுட்டுவதுபோல் சில கடினமான வார்த்தைகளைக்கொண்டு எழுதினாலே போதும். நுண்ணறிவுவாதிகள் அதைத் தங்களுக்கேற்றவாறு பொருள் படுத்திக்கொண்டு அதற்கு விளக்கவுரையே தந்துவிடுவர். (அது நடக்கும் போது உங்கள் உண்மை முகம் தோலுரிக்கப்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. ஏனெனில் நான் என் முகத்தோலுரிப்பை கவனித்துக்கொண்டிருப்பேன்).

நமது பின்நவீனத்துவ அறிவுசார் எழுத்தாளர்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் மற்றொரு வார்த்தை – புரிதல். எதற்கெடுத்தாலும் ஒருவரின் புரிதலை மையப்படுத்திப்பேசுவது ட்ரெண்ட் ஆகிவிட்டது. காபி சரியில்லை – உனது புரிதலில் சிக்கல் இருக்கிறது. ஒரு கவிதை உனக்கு வெறுப்பைத் தருகிறது – புரிதலில் பிரச்சனை இருக்கிறது. இப்படி, நாம் அன்றாடம் ஏதோ ஒரு தேடலில் இருப்பதாகவும், இயல்பு வாழ்வின் ஒவ்வொரு விடியலும் நமக்கு ஒரு புதிய புரிதலைக் எடுத்துக்காட்டுவதாகவும் பாவிக்கவேண்டும்.

அந்தப் புரிதல் குவியல்களைப் பற்றி அவ்வப்போது நேராகவும் மறைமுகமாகவும் எழுதலாம். பழைய புரிதலைக் கட்டுடைத்து புதிய திசைவழிகளைக் கொண்டுவரலாம். இது முரணாக உள்ளது என்று யாரேனும் சொன்னால், முரண்களாலானதுதான் வாழ்க்கை என்று தத்துவார்த்தமாக மறுமொழியிடலாம். இப்படி இலக்கை மாற்றி அமைத்துக்கொண்டே போனால்தான் அடுத்தவரைவிட நாம் ஒரு படி முன்னால் இருப்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்க முடியும். (இப்படிச் செய்வதால் யாருக்கு என்ன பயன் என்றெல்லாம் கேட்கக்கூடாது. அது உங்கள் புரிதலில் உள்ள பிரச்சனையையே குறிக்கும்).

மேற்கூறியவற்றின் வரிசையில் வன்மம், காழ்ப்புணர்ச்சி, பரிணாம வளர்ச்சி, முரண், தனிமனித சம்திங் சம்திங், படைப்பாளி, துடைப்பாளி, தமிழ் சமூகம், தமிழ் சூழல், பொதுப்புத்தி, அகமனம், பார்ப்பனீயம், முதலாளித்துவம், மானே தேனே பொன்மானே என்று ஆங்காங்கே தூவி விட வேண்டும். நாம் சொல்லும் கருத்தில் நமக்கே ஆழமான புரிதல், சொன்ன விதத்தில் ஒரு அழுத்தம் என எந்த தெர்மாகோலும் தேவையில்லை. இந்த வார்த்தைகளை அஸ்திவாரமாக வைத்துக்கொண்டு குறியீடு கொண்ட பின் நவீனத்துவ வீடே கட்டிவிடலாம். நமது படைப்பும் காத்திரமானதாகவும் ஆழமானதாகவும் ஏற்றுக்கொள்ளப்படும்.

இது மட்டுமல்ல. நாம் சொல்ல வந்த விஷயத்தை சாதாரணமாக சொல்லிவிடாமல், கருத்துருவாகவோ, உருவகப்படுத்தியோ சொல்லுதல் சிறப்பு. சொல்லல் என்பதைக்கூட தவிர்த்து, முன்வைத்தல் என்பதே நன்று. ஏனெனில் நாம் ஒரு கருத்தை மற்றொருவரிடம் முன்வைக்கிறோமேயானால் அதை அவர்கள் மேல் திணிக்காமல், அதை எடுத்துக்கொள்வதையும் நம்மிடம் திருப்பிக் கொடுத்துவிடுவதையும் அவரது உரிமைக்கு விட்டு விடுகிறோம். இப்படி ஒரு சின்ன வார்த்தைப் பிரயோக மாற்றத்தால் நமது தமிழ் பண்பாட்டையும் தூக்கி நிறுத்துவதாக நாம் எண்ணிக்கொள்ளலாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்… (மாங்காய் என்பதில் எந்த குறியீடும் இல்லை).

ஆக, நாம் எழுதுவதைப் படிப்பவர்கள், இவர் என்னதான் சொல்ல முற்படுகிறார் என்று குழம்பினாலோ, திட்டவட்டமான அர்த்தங்களைப் புரிந்து கொள்ள முடியாமல் திணறினாலோ, ஒரு செம்மையான அறிவுஜீவித்தனமும் மொழி ஆளுமையும் நமது பிரக்ஞையையும் அதன் பொருட்டு நமது எழுத்தையும் எட்டிவிட்டதென்றே அர்த்தம். இனி என்ன…. பதிவிடுவோம். மெட்டஃபிஸிக்கல் மையச்சரடோடு நனவிலி மனதிலிருந்து பொங்கட்டும் நமது படைப்புகள்.

- கட்டுரையாளர் நாடகக் கலைஞர்,
திரைப்பட நடிகை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x