

கோடைக்காலம் வந்துவிட்டதால் கள்ளிக்காட்டில் கடுமையான வெப்பம் நிலவிக்கொண்டிருந்தது. ஏரி, குளம், குட்டைகள் நீர் வற்றிப் போய்விட்டன. சற்றுத் தூரத்திலிருந்த புன்னைக் காட்டிலுள்ள ஏரி, குளங்களில் தண்ணீர் இருப்பதாக அறிந்த குரங்கு ஒன்று, அதை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.
வெகுதூரம் பயணித்ததால் குரங்கிற்குத் தாகம் எடுத்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தண்ணீர் கிடைப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
அப்போது எதிரில் முயல் ஒன்று வந்தது. அதைப் பார்த்த குரங்கு, “அன்பரே, நான் புன்னைக் காட்டை நோக்கிப் போகிறேன். நீண்ட தூரம் பயணம் செய்ததால் தாகமாக இருக்கிறது. அருகில் எங்காவது தண்ணீர் கிடைக்குமா?” என்று கேட்டது.
“இன்னும் சற்றுத் தூரத்தில் பனைமரங்கள் இருக்கின்றன. மரத்தில் ஏறி நுங்குகளைப் பறித்துச் சாப்பிடுங்கள். தாகமும் தீரும், பசியும் தீரும்” என்று அக்கறையுடன் சொன்னது முயல்.
முயலுக்கு நன்றி சொல்லிவிட்டுச் சென்றது குரங்கு.
சற்றுத் தூரத்தில் பனைமரங்கள் தெரிந்தன. குலைகுலையாக நுங்குகளும் காய்த்துத் தொங்கின.
மகிழ்ச்சியோடு ஒரு மரத்தில் ஏறியது குரங்கு. பனைமரத்தின் பாதி உயரம்வரை ஏறிய பிறகு, அண்ணாந்து பார்த்தது. இன்னும் அதிக உயரம் ஏற வேண்டும். அருகில் வேறு ஏதேனும் உயரம் குறைவான பனைமரம் இருக்கிறதா என்று பார்த்தது குரங்கு. சற்றுத் தூரத்தில் உயரம் குறைவான ஒரு மரம் தெரிந்தது.
உடனே வேகமாகக் கீழே இறங்கி, அந்த மரத்தில் ஏற ஆரம்பித்தது குரங்கு. பாதி உயரம் சென்றதும் அண்ணாந்து பார்த்தது. இன்னும் ஏற வேண்டிய உயரம் அதிகம் இருந்தது. மீண்டும் மற்ற மரங்களை நோட்டம் விட்டது. சற்றுத் தூரத்தில் ஒரு மரம் உயரம் குறைவாகத் தெரிந்தது.
அவ்வளவுதான்! உடனே குரங்கு தான் ஏறியிருந்த மரத்திலிருந்து கீழே இறங்கியது. ஓடிச் சென்று, குட்டையாகத் தெரிந்த அந்தப் பனைமரத்தில் ஏறத் தொடங்கியது. அந்த மரத்தில் பாதி ஏறிய குரங்கு, அதைவிட குட்டையாகத் தோன்றிய வேறொரு மரத்தைப் பார்த்து, கீழே இறங்கி அந்த மரத்தை நோக்கி ஓடியது.
இப்படியே ஒவ்வொரு பனைமரத்திலும் பாதி ஏறுவதும், பிறகு அங்கிருந்து வேறொரு குட்டையான பனைமரத்தைப் பார்த்து, ஏறிய மரத்திலிருந்து இறங்கி அந்த மரத்தில் ஏறுவதுமாக இருந்தது.
சூரியன் உச்சிக்கு வந்துவிட்டதால், குரங்கு மிகவும் களைத்துவிட்டது. ஒரு கட்டத்தில் குரங்கால் எந்த மரத்திலும் ஏறவே முடியவில்லை. தலைசுற்றுவதுபோல இருந்தது. பசியாலும் தாகத்தாலும் மயக்கம் வருவதுபோல இருந்தது.
களைப்போடு இனி பனைமரத்தில் ஏறினால், கைநழுவி விழுந்துவிடுவோமோ என்று குரங்கிற்குப் பயம் வந்தது. எனவே, அது ஒரு பனைமரத்தின் அடியில் அமர்ந்துவிட்டது.
’இப்போது நுங்கு எதுவும் வேண்டாம், குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கிடைத்தால் போதும்’ என்று குரங்கிற்குத் தோன்றியது.
அந்த நேரத்தில் காலடியோசை கேட்க, குரங்கு திரும்பிப் பார்த்தது. சில மணி நேரத்திற்கு முன்பு பார்த்த அதே முயல்.
“என்ன, நுங்குகளைப் பறித்துச் சாப்பிட்டீரா? இப்போது பசியும் தாகமும் தணிந்திருக்குமே” என்று அன்பாக விசாரித்தது முயல்.
“அன்பரே, நான் மிகவும் களைத்துப் போயிருக்கிறேன். என் தாகமும் பசியும் இன்னும் அதிகமாகியிருக்கிறது. என்னால் நடக்கக்கூட முடியவில்லை. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கிடைத்தால் போதும்.”
“ஐயோ, என்னதான் நடந்தது? உங்களுக்குத்தான் நன்றாக மரம் ஏறத் தெரியுமே! ஏன் நுங்குகளைப் பறித்துச் சாப்பிடவில்லை?”
“நான் ஒவ்வொரு பனைமரத்திலும் பாதி தூரம் ஏறிய பிறகு, இன்னொரு மரம் குட்டையான மரம்போலத் தோன்றியது. நான் ஏறிய மரத்திலிருந்து இறங்கி வேறு மரத்தில் ஏற நினைத்தேன். இப்படியே பத்துப் பதினைந்து மரங்கள் ஏறி இறங்கினேன். நுங்குகளைப் பறிக்கவே இல்லை. இனி எந்த மரத்திலும் ஏற முடியாதபடி களைத்துப் போய்விட்டேன்” என்று நடந்ததைச் சொன்னது குரங்கு.
“நீங்கள் முதலில் ஏறிய பனைமரத்திலேயே இன்னும் கொஞ்சம் ஏறியிருந்தால் நுங்குகளைப் பறித்துச் சாப்பிட்டிருக்கலாம். உங்கள் தாகமும் பசியும் எப்போதோ தணிந்திருக்குமே... இப்படிப் பல மரங்களில் ஏறி இறங்கி, உடலில் இருந்த ஆற்றலையும் இழந்துவிட்டீரே...
இனியாவது இப்படி மனதை அலைபாய விடாமல், ஒரு செயலைச் செய்து முடியுங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும். கவலைப்படாதீர், தர்பூசணிப் பழம் என்னிடம் இருக்கிறது. உங்கள் பசியும் தாகமும் தணியும்” என்று முயல் சொன்னவுடன் குரங்குக்கு நிம்மதியாக இருந்தது.
தன் தவறை உணர்ந்த குரங்கு, முயல் கொடுத்த தர்பூசணிப் பழத்தைச் சாப்பிட்டுவிட்டு, தன் பயணத்தைத் தொடர்ந்தது.