தவறுகளுக்கும் இடம்கொடுத்த நாடக மேடை!

தவறுகளுக்கும் இடம்கொடுத்த நாடக மேடை!
Updated on
2 min read

லண்டனில் மேற்கத்திய இசையை டிரினிடியில் படித்த எஸ்.ஜி.காயத்ரி, மூன்று ஆண்டுகள் ஏ.ஆர்.ரஹ்மானின் கே.எம். மியூசிக் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். 2017ஆம் ஆண்டு சென்னையில் உள்ள கொட்டிவாக்கத்தில் ‘ஜி3 ஸ்டுடியோஸ்’ எனும் இசைப் பள்ளியைத் தொடங்கினார். அதில் 6 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் இசையை முறையாகப் படிக்கிறார்கள். இந்தப் பள்ளியில் படிக்கும் அனைவரும் பங்களிக்கும் வகையில் ஆண்டுக்கு நான்கு இசை நாடகங்களை நடத்துகிறார் காயத்ரி. இதில் அவரிடம் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் பாடுவதற்கும் பேசுவதற்கும் வாய்ப்புள்ள வகையில் இசை நாடகத்தை நடத்துகிறார். அண்மையில் சென்னை, அடையாறில் உள்ள பிளாக் பாக்ஸ் ஸ்டுடியோவில் நடந்த `தி பெஸ்ட் லிட்டில் தியேட்டர் இன் டவுன்' நாடகம் பல புதிய சிந்தனைகளுக்கு இடமளிக்கும் வகையில் இருந்தது.


"ஒரு நாடகக் குழுவின் பொருளாளர் அந்தக் குழுவின் உரிமையாளரிடம் நாடகக் குழுவுக்கான கணக்கில் சுத்தமாகப் பணம் இல்லை. அதனால் நாடகக் குழுவைக் கலைத்துவிடுங்கள்" என்று சொல்கிறார். குழுவின் உறுப்பினர்கள் நாடகக் குழுவைக் காப்பாற்ற என்ன செய்கிறார்கள் என்பதுதான் நாடகத்தின் கதை.

பொதுவாகவே மேடையில் ஒரு நிகழ்ச்சியை நடத்துவதற்குப் பயிற்சி அதிகம் தேவை என்று பலரும் வலியுறுத்துவதைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்த நாடகத்தில் நடித்த குழந்தைகள் சிறிய தவறுகளைச் செய்தனர். அந்தத் தவறுகளுக்கும் இடம் கொடுத்த மேடையாக அந்த நாடக மேடை இருந்தது. வசனங்கள் குழந்தைகளின் சவுகர்யத்துக்கு ஏற்ப, தமிழிலும் ஆங்கிலத்திலும் இரண்டும் கலந்த `தங்கிலீஷி'லும்கூட இருந்தன. நாடகத்தின் ஊடாகப் பேசப்படும் வசனங்களையும் காட்சிகளையும்கூட அவர்களாகவே இணைத்துக்கொள்வதற்கும் தவிர்த்துவிடுவதற்குமான சுதந்திரத்தை அந்த நாடக மேடை குழந்தைகளுக்கு அளித்தது.

இந்த நாடகத்தில் மிசஸ் குட்மேன் ஆக முதன்மைப் பாத்திரத்தில் நடித்த குழந்தையும் முதியவராக நடித்த குழந்தையும் நம் கவனம் ஈர்த்தனர். நாடகத்தில் குழந்தைகளின் நடிப்பு தவிர, குழந்தைகளின் பாடும் திறமையும் பளிச்சென்று வெளிப்பட்டது. `தி பெஸ்ட் லிட்டில் தியேட்டர் இன் டவுன்' இசை நாடகத்தை இயக்கிய காயத்ரியிடம் பேசினோம்.

"எந்தவொரு கலையையும் முழுதாகக் கற்றுக்கொண்டுதான் மேடையில் நிகழ்த்த வேண்டும் என்பதில்லை. மேடையில் தோன்றி தனக்குத் தெரிந்ததை ரசிகர்களின் முன்பாக ஒரு குழந்தை செய்து காண்பிக்கத் தொடங்கும் போதுதான் அந்தக் குழந்தையிடம் கலை வளரும். அதனால்தான் பல்வேறு நிலைகளில் என்னிடம் இசை படிப்பவர்களுக்கும் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அவர்களின் நம்பிக்கையை வளர்க்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் இசை என்பதே அறிவியலைப் போன்று பரிசோதனை செய்து பாரக்க வேண்டிய விஷயம். யார், எப்படி வேண்டுமானாலும் இசையின் இலக்கணத்துக்கு உட்பட்டும் அதிலிருந்து விலகியும்கூட அணுகலாம். ஆனால், இசையின் இலக்கணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். அப்படி அணுகக்கூடியது மக்களின் ரசனைக்கு உரியதாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in