Last Updated : 02 Feb, 2023 03:33 PM

 

Published : 02 Feb 2023 03:33 PM
Last Updated : 02 Feb 2023 03:33 PM

தற்காப்புக் கலைகளைக் கற்கும் பாட்டிகள்!

அந்தத் தேவாலயத்தில் இருந்து பிரார்த்தனை சத்தமோ பாடல்களோ வெளிவரவில்லை. ‘ஹூம்... ஆ... ஹூம்... ஆ...’ என விநோதமான சத்தம் வந்துகொண்டிருக்கிறது. அந்தப் பகுதியைக் கடப்பவர்கள் மெதுவாகத் தேவாலயத்துக்குள் எட்டிப் பார்த்து, ஆச்சரியத்தில் உறைந்துவிடுகிறார்கள்!

காரணம், அங்கே வயதான பெண்கள் கராத்தே, குங்ஃபூ, குத்துச்சண்டை போன்ற தற்காப்புக் கலைகளில் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார்கள்! உடலை உறுதியாக வைத்துக்கொள்வதற்காக இந்தப் பயிற்சிகளை மேற்கொள்கிறார்களா என்று கேட்டால், அவர்கள் சொல்லும் காரணம் அதிர்ச்சியாக இருக்கிறது.

கென்ய தலைநகர் நைரோபியிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது கொரோகோச்சோ நகரம். மிக ஆபத்து நிறைந்த இடங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இங்கே வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கையும் அதிகம், வறுமையும் அதிகம். மது, போதைப் பொருள்களின் பயன்பாடும் அதிகம். அதனால், இங்கு வீடுகளிலும் வெளியிலும் வன்முறையும் குற்றச் செயல்களும் ஏராளமாக நடைபெறுகின்றன.

81 வயது பீட்ரிஸ் நையாரியாரா வயதான பெண்களுக்குப் பயிற்சியாளராக இருக்கிறார். “இந்தப் பகுதியில் உள்ள மோசமான சூழல்தான் என்னை, தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொள்ளத் தூண்டியது. வயதான பெண்களைத்தான் குற்றவாளிகள் எளிதாக அணுகுகிறார்கள். வன்முறையில் ஈடுபடுகிறார்கள். பலாத்காரம் செய்கிறார்கள். இருக்கும் சேமிப்பைத் திருடிச் சென்றுவிடுகிறார்கள். அதனால் 2007ஆம் ஆண்டு ‘பாட்டிகளின் பாதுகாப்பு’ என்கிற இந்தக் குழுவை ஆரம்பித்தேன். ஆறு மாதங்கள் மார்ஷியல் கலைகளைக் கற்றுக்கொண்டேன். 2014ஆம் ஆண்டிலிருந்து தற்காப்புப் பயிற்சி வகுப்புகளை எடுத்து வருகிறேன்” என்கிறார்.

கென்யாவில் வயதான பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளைப் பற்றிய அதிகாரபூர்வமான தகவல்கள் இல்லை. என்றாலும் இந்த மாதம் கென்ய மக்கள் தொகை மற்றும் சுகாதார அமைப்பின் கணக்கெடுப்பின்படி, 13% பெண்கள் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது பாலியல் வன்கொடுமையைச் சந்தித்திருக்கிறார்கள். 7% பெண்கள் கடந்த ஆண்டில் பாலியல் வன்முறையைச் சந்தித்திருக்கிறார்கள். 34% பெண்கள் 15 வயதிலிருந்து உடல்ரீதியான வன்முறையைச் சந்தித்து வருகிறார்கள். கடந்த ஆண்டில் மட்டும் 16% பெண்கள் உடல்ரீதியான வன்முறையைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

80 வயது க்ளாடிஸ், “வயதான பெண்கள் பெரும்பாலும் கணவரை இழந்தவர்கள். தனியாக வசித்து வருபவர்கள். எங்கள் வீடு மறுசுழற்சி முறையில் கட்டப்பட்ட எளிய உபகரணங்களால் ஆனது. அதனால், குற்றவாளிகள் எங்கள் வீடுகளுக்குள் சுலபமாகப் புகுந்துவிடுகிறார்கள். எங்கள் சேமிப்பில் இருக்கும் பொருள்களையும் பணத்தையும் திருடிச் சென்றுவிடுகிறார்கள். இந்தக் குழுவில் சேர்ந்து நான் தற்காப்புக்கலைகளைக் கற்றுக்கொண்டதால், இரவில் அச்சமற்று இருக்கிறேன். மீறி யாராவது என்னைத் துன்புறுத்த முயன்றால், என் திறமையைக் காட்டுவேன். என்னை விட்டுவிடுங்கள் பாட்டி என்று அலறிக்கொண்டு ஓடுவார்கள்” என்கிறார்!

55 வயது ரோஸ்மேரி, “எனக்கு இந்தக் குழுவைப் பற்றி நீண்ட காலமாகத் தெரியும் என்றாலும் நான் பயிற்சி எடுத்துக்கொள்ள நினைக்கவில்லை. 2019ஆம் ஆண்டு ஒரு நாள் மாலை என் தோழியைச் சந்தித்து, மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். மறுநாள் காலை என் வீட்டுக் கதவை அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் தட்டினார்கள். பதற்றத்துடன் வெளியே வந்தேன். ஆற்றங்கரையில் என் தோழி பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டுக் கிடந்தார். அந்த அதிர்ச்சிக்குப் பிறகு நானும் இந்தக் குழுவில் சேர்ந்துவிட்டேன்” என்கிறார்.

தற்போது 55 வயதிலிருந்து 90 வயது வரை உள்ள 20 பெண்கள் பீட்ரிஸ் கொடுக்கும் பயிற்சி வகுப்புகளில் தவறாமல் கலந்துகொள்கிறார்கள். வயதானவர்கள் என்பதால் ரத்தக் கொதிப்பு, மூட்டுவலி, கழுத்துவலி போன்று நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொள்வதன் மூலம் உடலும் ஆரோக்கியமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். அதுமட்டுமின்றி, குழுவினர் ஒருவருக்கு இன்னொருவர் ஆறுதலாக இருக்கிறார்கள். குழுவுக்காகச் சிறிது பணத்தையும் சேமிக்கிறார்கள். குழுவினரில் யாருக்காவது தேவைப்படும்போது, பணம் கொடுத்து உதவுகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x