ஆங்கிலம் அறிவோமே 4.0 - 18: AK என்பது என்ன?

ஆங்கிலம் அறிவோமே 4.0 - 18: AK என்பது என்ன?
Updated on
1 min read

‘மடம் என்பதை math என்று எழுத வேண்டுமா? அல்லது mutt என்பதுதான் சரியா?’ என்று கேட்கிறார் ஒரு வாசகர். துறவிகள் தங்கவும் மதம் தொடர்பான விவாதங்களை மேற்கொள்ளவும் அமைந்த இடமான மடம் என்பதை ஆங்கிலத்தில் பொதுவாக ‘mutt’ என்றே எழுதுகிறார்கள். வேறொரு சொல்லுடன் இணைந்து வரும்போது ‘math’ என்று பயன்படுத்துகிறார்கள். சமீபத்தில் நிலச்சரிவைச் சந்தித்த ‘Joshimath’ ஓர் எடுத்துக்காட்டு.

சம்ஸ்கிருதத்தில் ‘math’ என்பது கல்வி நிறுவனம், கல்லூரி ஆகியவற்றை குறிக்கும் சொல். ஆங்கிலத்தில் ‘math’ என்பது கணிதத்தையும் குறிக்கும். மடம் என்கிற பொருளில் பயன்படுத்தப்படும்போது ‘மத்’ என்றும் கணிதம் என்கிற பொருளில் பயன்படும்போது ‘மேத்’ என்றும் உச்சரிக்க வேண்டும். அதாவது ‘mathematics’ என்பதன் சுருக்கம். சிலர் ‘maths’ என்றும் இதை சுருக்குவதுண்டு. ஆனால், பலரும் இதை ‘மேக்ஸ்’ என்று அழுத்தம் திருத்தமாகத் தவறாகக் கூறுவார்கள்.

‘Mental intelligence’ தெரியும். ஆனால், ‘Physical intelligence’ என்கிற ஒரு பயன்பாட்டைப் படித்தேன். ​‘Physical intelligence’ என்றால் கட்டுமஸ்தான உடலை வைத்திருப்பதா?’ என்று கேட்டார் நண்பர். ‘intelligence’ என்பது மனம் (​மூளை) தொடர்பானது. எனவே, ‘mental’ என்கிற சொல்லை அதற்கு முன் சேர்க்கத் தேவையில்லை.

இப்போது ‘Physical intelligence’க்கு வருவோம். குறைந்தபட்ச டென்ஷனுடன், அதிகபட்ச மகிழ்ச்சியுடனும் வாழ, நம் உடலை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு அப்படி வாழ்வதுதான் ‘physical Intelligence’. அதாவது உடலுக்குப் பாதிப்பு வராமல் தடுக்க நாம் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள்தாம் ‘physical intelligence’.

‘Physical’ என்பதை உடல் தொடர்பான, உடலுக்குரிய எனலாம். பள்ளியில் விளையாட்டு வகுப்பை ‘physical education’ என்பது இதனால்தான். நோஞ்சானாக இருப்பவரை ‘physical strength’ இல்லாதவர் என்பதற்கும் இதே காரணம். ‘Corporeal’ என்பதும் ‘physical’ என்பதும் ஒரே பொருளை அளிக்கக்கூடியவை.

‘corporal punishment’. அதாவது, உடலை வேதனைப்படுத்தும் தண்டனை. உச்சகட்ட ‘corporal punishment’ என்பது capital punishment (தூக்குத் தண்டனை)

அமேதியில் இயங்கும் ராணுவத் தளவாடங்களைத் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை AK 203 ரக துப்பாக்கிகளை உருவாக்கியிருப்பதாகவும் அவற்றை இந்திய ராணுவத்திற்கு அளிக்கப் போவதாகவும் ஒரு செய்தி.

‘AK 47’ தெரியும், அது என்ன ‘AK 203?’ முதலில் AK என்பது ‘Avtomat Kalashnikova’ என்பதன் சுருக்கம். ‘Automotic’ என்பதுதான் ரஷ்ய மொழியில் avtomat என்று ஆகியிருக்கிறது. 1947இல் இந்த வகைத் துப்பாக்கிகளை வடிவமைத்த ரஷ்ய ராணுவ அதிகாரியின் பெயர் Mikhail Timofeyevich Kalashnikov. இவர் பெயரின் இறுதி வார்த்தையை அவர் வடிவமைத்த துப்பாக்கியின் பெயருக்கும் ​சூட்டியிருக்கிறார்கள்.

(தொடரும் - தொடரின் முழு வடிவத்தை ‘இந்து தமிழ்’ இணையதளத்தில் வாசிக்கலாம்.)

- ஜி.எஸ்.எஸ்; aruncharanya@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in