

இப்போதெல்லாம் காதல் திருமணங்கள் அதிகரித்துவருகின்றன. காதலித்தபின் பெற்றோரால் ஏற்பாடு செய்யப்படுபவையும் உண்டு. பெற்றோர் மனமார ‘ஓ.கே.’ சொல்லியிருந்தால் புகுந்த வீட்டு உறவுக்கு ஆரோக்கியமான அடித்தளம் போடப்பட்டுவிட்டது என்று கொள்ளலாம். முதலில் எதிர்ப்பை அழுத்தமாகக் காட்டி, பிறகு தங்களது குழந்தையை இழந்துவிடக் கூடாது என்பதற்காகப் பச்சைக்கொடி காட்டும் பெற்றோர், ஆரம்பத்திலேயே உறவைக் கெடுத்துக்கொள்கிறார்கள்.
இந்தியக் கலாச்சாரத்தில் திருமணம் என்பது இரு நபர்களின் சேர்க்கை மட்டுமல்ல; இரு குடும்பங்கள் சங்கமிக்கும் ஒரு உறவு. ஒரு இடத்தில் சேதம் ஏற்படும்போது அதனுடைய தொடர் விளைவுகள் பெரிய விரிசலைப் புதுமணத் தம்பதியரிடம் ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது.
காதலித்தவர் மாறிவிட்டாரா?
காதல் திருமணங்களில், சில மாதங்கள்/வருடங்கள் பழகி, பின் திருமண பந்தத்தில் அடியெடுத்து வைப்பதால், இனிய கனவில் மிதக்கிறார்கள். திருமணத்தில் தன் பெற்றோரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற மற்றவரை மூளைச்சலவை செய்து, தேவையானால் அவருடைய பெற்றோருக்கு ரகசியமாகப் பணம் கொடுத்து, நடத்திக் கொள்வதும் உண்டு. காதலித்தவர்கள் மணமானபின் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்றால், பெற்றோர் பரிந்துரைக்கும் திருமணங்களைப் போலவேதான் இதிலும். ஆம், இல்லை என்கிற இரண்டும் உண்டு. திருமணத்திற்கு முன் இருவரும் காதலிக்கும் காலகட்டமே வேறு. சில மணி நேர சந்திப்பு, காதல் சிணுங்கல்கள், கனவுகள்… ஒரு மணி நேரம்கூட ஒரு நிமிடமாக மாறும் மாயம். மணமான பின்பு? ஒன்றாகவே இருப்பதால் சில பழக்கங்கள், சில கண்ணோட்டங்கள் உடனிருக்கும் துணைக்குப் புதிதாகத் தெரியும்.
கதிர் - மல்லி இணையைப் பற்றிப் பார்ப்போம். தூங்கிக்கொண்டிருக்கும் கதிரை எழுப்புவது மல்லிக்குச் சுலபமாக இல்லை. அரும்பாடுபட்டு கதிரை அவள் எழுப்ப, அவன் மல்லிமீது கோபமாகப் பாய்ந்ததில் அவள் மிரண்டுவிட்டாள். மல்லி சுறுசுறுப்புதான். ஆனால், வேலைக்குக் கிளம்ப அவள் ஏன் இவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறாள் என்று கதிருக்குப் புரியவேயில்லை. எரிச்சல் வருகிறது. வெகு விரைவில் இருவரும் ‘இது நான் உருகி உருகிக் காதலித்த நபரா?’ என்கிற அதிர்ச்சியில் உறைந்துபோகிறார்கள்.
பாஸா, ஃபெயிலா?
பெற்றோரால் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்களில் நிச்சயம் முடிந்தபின் பேசிக் கொள்வதோ, தனிமையில் சந்திப்பதோ நிகழ அவற்றின் இனிய நினைவுகளோடு இருவரும் காத்திருப்பார்கள். திருமணத்திற்கு முன்பே இவர்கள் எதிர்பார்க்காத சில பிரச்சினைகள் (சீர், வரதட்சிணை, ‘எங்கள் குடும்ப வழக்கம்’ போன்றவை) தலைதூக்கலாம். வெளிப் படையாக ஒருவருக்கொருவர் ஆதரவைக் காட்டிக்கொள்ள இயலாதிருப்பது மற்றவரை ஏமாற்றமடையச் செய்யும். மருமகள் புகுந்த வீட்டில் அடியெடுத்து வைத்ததிலிருந்து அனைவரது கவனமும் அவளைச் சுற்றித்தான் இருக்கும். அவளுடைய செயல்கள் எல்லாம் விமர்சிக்கப்படும். அவளும் புகுந்தவீட்டினர் தரும் ‘பாஸ்’ எனும் சான்றிதழுக்காகப் பாடுபடுகிறாள்.
புகுந்தவீட்டுக்கு வந்தவுடன், தன் வீடாக அவள் அதைக் கருதவேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். ஆனால், தனது மகன் மாமனார் வீட்டைச் சீராட்டுவதைப் பல அம்மாக்கள் ரசிக்க மாட்டார்கள். தாய்க்கும் மனைவிக்கும் இடையே மகன் மாட்டிக்கொள்ள, தன் பக்கம் கணவன் சாயவேண்டும் என்று மனைவி எதிர்பார்ப்பாள். தம்பதியருக்கிடையே பிரச்சினைகள் இப்படிப் பல உருக்களில் வரலாம். முக்கியமான உறவின் ஆரம்பம் தங்களால் கெட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோர்களது பொறுப்பு.
இரண்டு வகைத் திருமணங்களிலும் உறவில் விரிசல்கள் வருவதைப் பார்க்கிறோம். சில விரிசல்கள் பெரிதாகி விவாகரத்தில் போய் முடிகின்றன. பிரிந்து வாழும் பெற்றோருடைய குழந்தைகள் ஏக்கத்துக்கும் வேதனைக்கும் உள்ளாகி, யாரிடமும் சொல்ல முடியாமல் மனப்பளுவோடு வாழ்கிறார்கள். இன்னும் நிறைய பேசவேண்டியிருக்கிறது, அடுத்த அத்தியாயத்தில் பேசுவோம்.
(மனம் திறப்போம்)
கட்டுரையாளர் உளவியல் ஆற்றாளர்.