தமிழ்ப் பாட்டுக்கு ரஷ்ய நடனம்

தமிழ்ப் பாட்டுக்கு ரஷ்ய நடனம்

Published on

இசை என்னும் மொழியால் இந்தியா - ரஷ்யா இடையேயான கலாச்சார உறவையும் புரிந்துணர்வையும் வலுப்படுத்தும் வகையில் ரஷ்யாவைச் சேர்ந்த ‘ஆர்கிட்’ நடனக் குழுவினர் பொங்கல் பண்டிகையையொட்டி இந்தியாவுக்கு வருகை தந்தனர். கடந்த பத்து ஆண்டுகளாகப் பல்வேறு நடன நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துவரும் இந்தக் குழுவினர் இந்த முறை 13 இளம் நடனக் கலைஞர்களுடன் வந்திருந்தனர்.

தமிழ்நாட்டில் பாரம்பரியத் திருவிழாவான பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட வேளையில் ரஷ்ய நடனக் கலைஞர்கள் தங்கள் நாட்டுப் பாரம்பரிய நாட்டுப்புற நடனத்தை அரங்கேற்றினர். தமிழ்ப் பாடல்களுக்கும் பொருந்திப்போகிற அளவுக்கு ரஷ்ய நடன அசைவுகளைக் கச்சிதமாக வடிவமைத்திருந்தார் நடனக் குழுவின் தலைவர் எலீனா.

குறிப்பாக, ‘தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்’ பாடலுக்கு ‘பாலே’ நடனப் பாணியை இணைத்து ஆடியது புதுமையாக இருந்தது. சென்னையில் ரஷ்ய கலாச்சார மையம், பெரியார் திடல் போன்ற இடங்களில் இவர்களது நடன நிகழ்ச்சிகள் அரங்கேறின. ரஷ்யாவின் பாரம்பரிய நடனமான ‘அன்னப்பறவை இளவரசி’ நடனம் பார்வையாளர்களைக் கவர்ந்தது.

ரஷ்ய ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பைப் பறைசாற்றும் வகையில் அமைந்த நடனத்துக்கும் நல்ல வரவேற்பு. நிஞ்சா, கொசாக், பென்குயின்ஸ் ஃப்ரம் மடகாஸ்கர், குக்கூ, ஸ்பெஷல் ஏஜென்ட்ஸ் போன்ற நடன வகைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருத்தை மையப்படுத்தியிருந்தன.

1900களின் மத்தியில் நடன உலகை ஆட்சிசெய்தது பெல்லி டான்ஸ். அந்தப் பொற்காலத்தை நினைவுகூரும் வகையிலும் ஒரு நடனத்தை வடிவமைத்திருந்தனர். இந்த நடனக் கலைஞர்கள் உக்ரேனுக்குச் சில கிலோ மீட்டர் தொலைவில் இருந்து புறப்பட்டு வந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டது நெகிழ்ச்சியாக இருந்தது.

- ராக்கி

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in