Published : 17 Dec 2016 12:48 PM
Last Updated : 17 Dec 2016 12:48 PM

இனி எதிர்காலம் நாட்டுப் பருத்தியே!

மரபீனி மாற்றப்பட்ட பருத்தியின் பிடியில் நாடு சிக்கியிருந்தாலும், இந்தியப் பருத்தி உற்பத்தியின் எதிர்காலம் உள்நாட்டுப் பருத்தியையே சார்ந்திருக்கிறது என்கிற குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. இந்தக் குரல்களில் முதன்மை யானது மத்தியப் பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கேசவ்ராஜ் கிராந்தியினுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

நாக்பூர் பருத்தி ஆராய்ச்சி நிறுவனத் தில் தேசிய நாட்டுப் பருத்தி தொடர்பான பயிலரங்கம் சமீபத்தில் நடந்தது. இதில் நாட்டுப் பருத்தி பயிரிடும் முறை தொடங்கி, சந்தைப்படுத்துதல்வரை விரிவாக விவாதிக்கப்பட்டது. கடந்த காலத்தில் பருத்திச் சாகுபடியில் ஏற்பட்ட பல்வேறு கசப்பான அனுபவங்களும், நீடித்த எதிர்காலம் குறித்த தொலை நோக்குப் பார்வையும் இந்த முடிவை நோக்கி நகர்த்தியிருப்பதாகத் தெரிகிறது.

இந்தியாவில் பருத்தி விளைச்சலில் முதன்மையான பகுதியாகத் திகழ்ந்த மகாராஷ்டிரத்தின் ‘விதர்பா’ பகுதியில் தான், பெருமளவு பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். மத்தியப் பருத்தி ஆராய்ச்சி நிறுவனமும் அதே பகுதியில்தான் அமைந்துள்ளது.

இத்தனை ஆண்டுகளாக அமெரிக்க ஒட்டுரக பருத்தியையும், பின்னர் அமெரிக்க மரபீனி மாற்றப்பட்ட பருத்தியையும் ஆதரித்து வந்த ஆராய்ச்சி நிறுவனங்கள், தற்போது உள்நாட்டுப் பருத்தி வகைகள் குறித்துப் பேசத் தொடங்கியிருப்பது புது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

பண்பாடும் பயன்பாடும்

இந்தியத் துணைக்கண்டம் பருத்தி உற்பத்திக்கும் பருத்தி ஆடைகளுக்கும் உலகப் புகழ்பெற்றது. பல்லாயிரம் ஆண்டுகளாகவே பருத்தி நம் நிலத்தில் ஆழ வேர் பாய்ச்சியதாக இருந்துவந்துள்ளது. இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்குப் பருத்தி வணிகம் நடைபெற்றுள்ளது.

பருத்தியில் பல்வேறு வகைகள் இருந்தாலும் தற்போது உலகளவில் காசிபியம் ஆர்போரியம், கா.ஹெர்பேசியம், கா.ஹிர்சுட்டம், கா.பார்படேன்ஸ் வகையினங்களே பெருமளவு பயிரிடப்பட்டுவருகின்றன. இந்த நான்கு வகைகளையும் பயிரிடும் ஒரே நாடு இந்தியா என்ற தனிப்பெருமை நமக்குண்டு.

இந்தியத் துணைக்கண்டத்தில் ஆர்போரியம் வகைதான் முதலில் தோன்றியது. இந்த ஆர்போரியம் வகையும், ஹெர்பேசியம் வகையும் இந்திய அல்லது ஆசிய வகைப் பருத்தி என்று அழைக்கப்படுகின்றன. இவை இரண்டும் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும், நிலத்துக்கும் சூழலுக்கும் ஏற்பப் பல்வேறு துணைவகைகளாகப் பெருகிப் பல்வேறு பெயர்களில் பயிரிடப்பட்டு வருகின்றன.

மொகஞ்சதாரோவில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட பருத்தித் துணி கா.ஆர்போரியம் வகையைச் சேர்ந்தது என்பது இதை உறுதிப்படுத்துகிறது.

ஆங்கிலேயத் திரிபு

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பருத்தித் துணி, இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவந்தது. இங்கிலாந்து அரசு, இந்தியத் துணி இறக்குமதிக்கு 1721-ம் ஆண்டு தடை விதித்தது. பருத்தியைப் பிரித்தெடுத்தல், நூல் நூற்கும் தொழில்நுட்பம் நம்மிடம் மட்டுமே இருந்தது. பிறகு 18-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இங்கிலாந்தில் இயந்திர நூற்பாலைகள் உருவாக்கப்பட்டன. இந்த நூற்பாலைகளுக்கு, அமெரிக்கக் கா.ஹிர்சூட்டம் வகையை அமெரிக்காவிலிருந்து பெற்றுப் பயன்படுத்தி வரத்தொடங்கினர்.

பின்னர் 179௦-ம் ஆண்டில் அமெரிக்க வகையை இந்தியாவில் பயிரிடும் முயற்சியில் ஆங்கிலேயர்கள் இறங்கினர். ஆனால் இந்தியர்களுக்கு ஏற்புடையதாக அமெரிக்க வகை அமையவில்லை. நாடு முழுக்க நாட்டு வகைகளே பயிரிடப்பட்டுவந்தன. 1947 விடுதலைக்குப் பின்னர், அமெரிக்க வகை பருத்தியிலேயே இந்தியர்களும் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு அமெரிக்க ஒட்டுரகங்களை உருவாக்கி,16௦ ஆண்டுகளுக்கு ஆங்கிலயேர்களால் செய்ய முடியாததை ஐம்பது ஆண்டுக்குள் இந்தியர்களே நாடு முழுக்கப் பரப்பினர்.

அமெரிக்காவில் தோன்றிய பருத்தி வகை கா.ஹிர்சூட்டம். தற்போது இந்தியாவில் பயிரிடப்படும் 99.9 விழுக்காடு ஒட்டுரகப் பருத்திகள் இந்த வகையைச் சார்ந்தவை. மரபீனி மாற்றப்பட்ட பருத்தியும் இதே வகையைச் சார்ந்தது அல்லது இதனுடன் கலந்த ஒன்றாக இருக்கிறது. இவ்வகை பருத்தி இழை நீண்டும் மெல்லியதாகவும் அமைந்திருக்கும். எனவே, இவ்வகை பருத்தி ரகங்களே பரவலாகப் பயிரிடப்படுகின்றன.

1947-ம் ஆண்டில் மூன்று விழுக்காடு மட்டுமே அமெரிக்கப் பருத்தி வகை இந்தியாவில் இருந்தது. அதே 2௦௦1-ம் ஆண்டில், 4௦ விழுக்காடாக விரிந்தது. 2௦15-ம் ஆண்டில் 98 விழுக்காடாக அமெரிக்க வகை விரிந்து நிற்கிறது. 2௦௦2-ம் ஆண்டுக்குப் பின்னர் மரபீனி மாற்றுப் பருத்தி விதைகள் முழுவதும் தனியார் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டன. அது மட்டுமல்லாமல் இரண்டரை லட்சம் உழவர்கள் உயிரைத் துறந்த பின்னர், இப்போதுதான் புதிய பாடம் கற்க முன்வந்திருக்கிறோம்.

ஏன் வேண்டும் நாட்டுப் பருத்தி?

நாட்டுப் பருத்தி எனப்படும் தாயகப் பருத்தி வகைகள் ஆண்டாண்டு காலமாக, அந்த நிலத்தின் இயற்கைச் சூழலால் தகவமைப்பைப் பெற்றவை. அந்த நிலத்தின் ஆக்கபூர்வத் தன்மையைத் தனது மரபுவளத்தில் கொண்டிருப்பவை. நிலையான வளர்ச்சி நோக்கில் திட்டங்கள் வகுக்கப்பட்டால், நாட்டுப் பருத்தியே சரியான தீர்வாக அமையும். வறட்சி, உப்புத்தன்மை, பூச்சி தாக்குதல், காய்ப்புழு தாக்குதல் ஆகியவற்றை நாட்டுப் பருத்தி வகைகள் சிறப்பாக எதிர்கொள்ளக் கூடியவை.

நாட்டுப் பருத்தியை இரண்டு வகைகளில் நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். இவற்றில் ஒரு வகை பருத்தியானது குட்டை இழையாகவும், நீரை உறிஞ்சும் தன்மை கொண்டதாக வும் இருக்கிறது. இதை மருத்துவத் துறை, படுக்கை விரிப்புகள், அன்றாட பயன்பாடுகள், தொழிற் பயன்பாடுகள் போன்றவற்றுக்குப் பயன்படுத்தலாம்.

அடுத்ததாக, அமெரிக்க நீண்ட இழைகளுக்கு இணையாகச் சில வகை நாட்டுப் பருத்திகள் துணி நெய்வதற்குப் பயன்படக்கூடிய வகையில் உள்ளன. அவற்றை ஆய்வுகள் மூலம் மேம்படுத்த முடியும்.

நம்ம பருத்தி, நாட்டுப் பருத்தி

மானாவாரி விளைச்சலில் ஆசியப் பருத்தி வகைகள், மரபீனி மாற்று அமெரிக்கப் பருத்திக்கு இணையான பொருளாதாரப் பலன்களை அளிக்கக்கூடியவை என ஆய்வாளர்கள் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர். அது மட்டுமல்லாமல், நாட்டு வகைப் பருத்திகள் அமெரிக்கக் காய்ப்புழுத் தாக்குதலுக்கு எதிர்ப்புத்தன்மை கொண்டவை.

பருத்தி தொடர்பான ஆய்வுகளில் ஈடுபடுபவர்களில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவானவர்களே உள்நாட்டு வகையில் ஆராய்ச்சி செய்கின்றனர். பெருமளவு ஆய்வுகள் நாட்டுப் பருத்தி வகையில் மேற்கொள்ளப்பட்டால், அமெரிக்க வகையான கா.ஹிர்சூட்டம் பருத்தியின் பாதிப்புகளில் இருந்து விடுபட்டு, நாட்டு வகையான கா.ஆர்போரியம்/ஹெர்பேசியம் வகைகள் மீண்டெழ வாய்ப்பு அதிகரிக்கும்.

தேவை விதை இறையாண்மை

தற்போது நாட்டுப் பருத்தியின் தேவை உணரப்பட்டாலும், பருத்தி விதைகள் உழவர்களுக்கு எளிதில் கிடைக்க வழியில்லாத நிலையே உள்ளது. பெருமளவு வகைகள் பாதுகாக்கப்படவில்லை. முதலில் நாடு முழுக்க உள்ள நாட்டுப் பருத்தி வகை கள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

வேளாண் பல்கலைக்கழகங்கள், விதைப் பண்ணைகள், மத்திய, மாநில விதை ஆய்வு நிலையங்களில் விதை ஆய்வுகளும் விதை உற்பத்தியும் அதிகரிக்கப்பட வேண்டும். நாட்டுப் பருத்தி விதைகள் பகிர்ந்தளிக்கப்பட்டால் உழவர்கள் விதை உரிமையைப் பெற்றவர்களாக மாறுவார்கள். அதேபோல, அவர்களே விதைகளைப் பாதுகாத்து மீண்டும் பயிரிடவும் முடியும்.

அந்த நிலையில் நலிவடைந்த பருத்திப் பொருளாதாரத்தை மீட்க, நாட்டுப்பருத்தி நம் கையில் உள்ள மிகப் பெரிய ஆயுதமாகத் திகழும்.



இதுதான் நம்ம பருத்தி


கருங்கண்ணி பருத்தி

குஜராத் கட்ச் வளைகுடா பகுதியில் ‘காலா’ பருத்தி, ஆந்திராவில் ‘புந்துரு’ பருத்தி, மகாராஷ்டிரா மாநிலத்தில் ‘புலே தன்வந்தரி’, மேகாலயா மாநிலத்தில் ‘கோமிலா’ பருத்தி, கர்நாடக மாநிலத்தில் ‘ஜெயதர்’, ராஜஸ்தானில் ‘வங்கப் பருத்தி’, தமிழ்நாட்டில் கருமண்ணில் விளையக்கூடிய கருங்கண்ணி, கடலோர நிலப்பகுதியில் வளரக்கூடிய ‘உப்பம்’ பருத்தி எனப் பல உள்நாட்டு பருத்தி துணை வகைகள் நிறைய இருக்கின்றன.

தமிழ்நாட்டுக்குரிய வெள்ளைக்கண்ணி, நாடன் பருத்தி குறித்த செய்திகள் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் கோவில்பட்டியைச் சேர்ந்த கருங்கண்ணி பருத்தி குறித்த ஆய்வுகள் வேளாண் ஆய்வு மையங்களில் நடைபெற்றுவருகின்றன.

தற்போது தமிழ்நாட்டில் பெரம்பலூர், திண்டுக்கல் பகுதிகளில் உள்நாட்டு பருத்தி வகையான கருங்கண்ணியை உயிர்ப்பிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. உப்பம் பருத்தி வகை தூத்துக்குடி பகுதியில், சில இடங்களில் இருப்பதாகத் தெரிகிறது.

இந்தியாவின் புகழைப் பரப்பிய மிகவும் மெலிதான ‘மஸ்லின்’ பருத்தித் துணிகள் எடை குறைந்தவை, மேற்கு வங்கத்தில் உருவாக்கப்படுபவை. தமிழகத்தின் ஆரணியிலும் மஸ்லின் பருத்தித் துணிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மஸ்லின் துணி நமது நாட்டுப் பருத்தி வகைகளிலிருந்து உருவானது.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் தேசியப் பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற நாட்டுப் பருத்தி பயிலரங்கில் சகஜ சம்ருதா, யுவா ரூரல் மற்றும் பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டிலிருந்து கருங்கண்ணி ஆய்வாளர் அரிராமகிருஷ்ணன், துலா அனந்து, நாட்டுப் பருத்தி தமிழக ஒருங்கிணைப்பாளர்கள் சுவாமிநாதன், கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.

கட்டுரையாளர்,
சூழலியல் ஆராய்ச்சி மாணவர்
தொடர்புக்கு: mazhai5678@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x