Published : 19 Jul 2014 10:21 AM
Last Updated : 19 Jul 2014 10:21 AM

தி இந்து - பட்ஜெட் வீடு கலந்துரையாடல்: மத்திய பட்ஜெட்: வீடு வாங்க சாதகமான அம்சங்கள் என்னென்ன?

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில் வீடு வாங்க நினைப்போருக்கு என்னென்ன சாதகமான அம்சங்கள் உள்ளன என்பது பற்றியும், நுகர்வோருக்குப் பாதுகாப்பான வீடுகள் கிடைப்பதை உறுதிசெய்யக் கருத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் பற்றியும் ‘தி இந்து’ ஏற்பாடு செய்த ஆலோசனைக் கூட்டத்தில் அத்துறை சார்ந்த பல்வேறு வல்லுநர்கள் தங்களது கருத்துகளை விரிவாக எடுத்துரைத்தனர்.

சென்னை அண்ணா சாலையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ரியல் எஸ்டேட், கட்டுமானப் பொறியியல், கட்டிடக் கட்டமைப்பு, கட்டிட வடி வமைப்பு, வங்கி, தீயணைப்பு, தொழிலாளர் துறை உள்ளிட்ட பல்துறை வல்லுநர்கள் பங்கேற்றுப் பேசினர். இந்நிகழ்ச்சியை எஸ்.ஜே.ஹெச். ஹோம்ஸ், ஆர்.ஆர்.பி.ஹவுசிங் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்தின.

நந்தகுமார், மாநில தலைவர், இந்திய ரியல் எஸ்டேட் கட்டுநர்கள் கூட்டமைப்பு (கிரெடாய்):

இந்த பட்ஜெட் கட்டுமானத் துறைக்கு சாதகமாக உள்ளது. அந்நிய முதலீட்டுக்கான விதிகள் தளர்த்தப்பட்டதும், குறைந்த விலை வீடுகளைக் கட்டுநர்கள் கட்டுவதற்கான செலவு வரம்பு உயர்த்தப்பட்டதும் இதற்குக் காரணம். பெருநகரங்களில் ரூ. 65 லட்சம் மதிப்பிலான வீடுகளுக்கும், பெருநகரங்கள் அல்லாத இடங்களில் ரூ.50 லட்சம் வரையிலும், குறைந்த விலைப் பிரிவு வீடுகளைக் கட்டலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர, உயர்நடுத்தர மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். மேலும், சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எங்களிடம் உள்ள ஸ்டாக் ஓராண்டு வரை வரும் என்பதால், இந்தாண்டுக்குள் வீடு வாங்கினால் 20 சதவீத செலவை வாடிக்கையாளர் சேமிக்கலாம்.

டி.சிட்டி பாபு, தலைவர், அக் ஷயா பிரைவேட் லிமிடெட்:

நாட்டில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது கட்டுமானத் துறை. காரணம் இத்துறையில் அதிகளவு வேலைவாய்ப்புகள் உள்ளன. 178 துறைகள் இத்தொழிலைச் சார்ந்துள்ளன. இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வளர்ச்சி திட்டங்களால் நில விற்பனை அதிகரிக்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பதாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகளை அடுத்த பட்ஜெட்டுக்குள் செயல்படுத்தி முடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால், அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டும் மிகச் சிறப்பான பட்ஜெட்டாக அமையும்.

எஸ்.பி.செந்தில்குமார், நிர்வாக இயக்குனர் ஜனனி ஹோம்ஸ்:

இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் மற்றும் அறிவிப்புகள் மக்களைச் சரியான அளவில் சென்றடையவில்லை. மேலும், இந்த பட்ஜெட்டில் உள்ள அம்சங்களால் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. தேர்தலுக்கு முன்புகூட நிறைய அடுக்குமாடி வீடுகள் விற்பனை ஆயின. ஆனால், பட்ஜெட்டிற்குப் பிறகு விற்பனை வெகுவாகக் குறைந்துள்ளது. மொத்தத்தில் இந்த பட்ஜெட்டில் எதிர்பார்த்த அளவிற்கு சலுகைகள் இடம்பெறவில்லை. எங்கள் நிறுவனத்தில் ஒவ்வொரு திட்டத்திலும், 10 சதவீதத்தை குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு ஒதுக்குகிறோம்.

கணேஷ் வாசுதேவன், தலைமை செயல் அதிகாரி, இந்தியா பிராபர்ட்டி டாட் காம்:

மாத ஊதியம் பெறுபவர்களுக்கு இந்த பட்ஜெட் சாதகமாக அமைந்துள்ளது. அவர்களுக்கு வருமான விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், அவர்களுடைய சேமிப்பு அதிகரிக்கும். மேலும், அவர்களுக்கு வீடுகள் வாங்குவதற்குச் சரியான தருணம் இது.

அசித் மேத்தா, இயக்குநர், பிரின்ஸ் பவுண்டேஷன்:

ரியல் எஸ்டேட்டை நம்பியிருக்கும் ஸ்டீல் போன்ற தொழில்களை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. ஆனால், ரியல் எஸ்டேட் துறை அரசால் உதாசீனப்படுத்தப்படுகிறது. 100 ஸ்மார்ட் சிட்டி அறிவிப்பால் அனைத்துத் துறைகளிலும் அப்பகுதிகளில் வளர்ச்சி ஏற்படும். சென்னை தொழிற்பேட்டையில் 90 சதவீத நிறுவனங்கள் மூடப்படும் நிலையில் உள்ளன. அதுபோன்ற இடங்களை வீடு கட்டும் பகுதியாக அரசு மாற்ற வேண்டும்.

கர்னல் நல்லதம்பி, கட்டிடக் கட்டமைப்பு ஆலோசகர்:

ரூ.60 லட்சம் கொடுத்து வீடு வாங்குபவர்கள் வாஸ்து சாஸ்திரப்படி அக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளதா எனப் பார்க்கின்றனரே தவிர, அந்த வீட்டின் கட்டுமான உறுதித்தன்மை குறித்துப் பார்ப்பது இல்லை. உடலுக்கு நோய் வந்தால் மருத்துவரைச் சென்று பார்ப்பதைப் போல, வீட்டை வாங்கும்போது அதன் உறுதி தன்மையைப் பரிசோதித்து, தரமான பில்டரால் கட்டப்பட்டதா என்று பார்த்து வாங்க வேண்டும். கட்டிடத்தின் வரைபடத்தையும் பாதுகாக்க வேண்டும்.

ஸ்வேதா மதுசூதனன், கட்டிடக் கலை துறைத் தலைவர், எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்:

வீடுகள் கட்டும்போது போதிய வெளிச்சமும், காற்றோட்டமும் கொண்டதாக வடிவமைத்து கட்ட வேண்டும். நாங்கள் வகுத்துக் கொடுக்கும் திட்டத்தின்படியே கட்டிடங்களைக் கட்டுநர்கள் கட்டவேண்டும். ஒரு முறை திட்ட அனுமதி அளித்துவிட்டால், அதனை மீண்டும் மாற்ற, அரசு அமைப்புகள் அனுமதியைத் தளர்த்தக்கூடாது.

கோவிந்தராஜ், சார்டர்டு அக்கவுன்டன்ட்:

கடந்த ஆண்டு ரியல்எஸ்டேட் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அது காலாவதியாகிவிட்டது. அதனை அமல்படுத்தினால் குற்றம் நிரூபிக்கப்படும்பட்சத்தில், கட்டுநருக்கு 3 ஆண்டுகள் சிறை, கட்டுமான திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் அபராதம் ஆகியவை விதிக்கப்படும். அதை உடனே அமல்படுத்தவேண்டும். தண்டனை அதிகரிக்கப்பட வேண்டும்.

இளங்கோ, இந்தியன் வங்கி உதவிப் பொதுமேலாளர்:

தற்போது வீட்டுக் கடன் வழங்குவதில் வங்கிகளுக்கிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குறிப்பிட்ட சதவீத வட்டிக்குக் கீழ் வீட்டுக் கடனை வழங்கக் கூடாது என்று விதி உள்ளது. அதனால் அனைத்து வங்கிகளும் 10 முதல் 10.25 சதவீத வட்டியில் கடன் வழங்கி வருகிறோம். வங்கி டெபாசிட்களுக்கு நாங்கள் 9.25 சதவீதம் வட்டி வழங்குகிறோம். ஆனால் நாங்கள் வழங்கும் வீட்டுக் கடன்களுக்கு அதிகபட்சமாக 10.25 சதவீதம் மட்டுமே வட்டி வசூலிக்கிறோம்.

செந்தில்நாதன், மூத்த வழக்கறிஞர்:

கட்டுமானத் துறையின் முதுகெலும்பு தொழிலாளர்கள். இத்தொழிலில் அதிக அளவில் வெளி மாநிலத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மொழிப் பிரச்சினை காரணமாக கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கங்களில் சேர முடிவதில்லை. விபத்தில் காயமடைந்தாலோ, உயிரிழந்தாலோ அவர்கள் தமிழகம் வந்து வழக்கு நடத்த முடிவதில்லை. அதனால் புலம் பெயர்ந்து வரும் தொழிலாளர் நலச்சட்டம் பயன்பாட்டுக்கு வர வேண்டும். வீடு கட்ட வேண்டுமென்றால் பல்வேறு துறைகளுக்குச் செல்ல வேண்டி யுள்ளது. அங்கெல்லாம் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதற்கு கட்டுமான நிறுவனங்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது.

தாயுமானவன், தமிழகத் தலைவர், அகில இந்திய கட்டுமானப் பொறியாளர் சங்கம்:

கட்டுமானத் தொழிலுக்கான மணல் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. சிமெண்ட் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பொருள்களின் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. இதைக் கட்டுக்குள் வைக்க ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும்.

வெங்கடாசலம், சென்னைக் கட்டுமானப் பொறியாளர் சங்கம்:

மருத்துவ கவுன்சில் போல பொறியாளர் கவுன்சிலை அமைக்க வேண்டும். எந்த பொறியாளர் வேண்டுமானாலும் கட்டிடம் கட்டலாம் என்றுள்ளது. அதை மாற்றி, அடுக்கு மாடி கட்டிடங்களைக் கட்ட அனுபவம் வாய்ந்தவர்களை மட்டுமே அனுமதிக்கும் விதிகளை ஏற்படுத்த வேண்டும்.

அகஸ்டின், பேராசிரியர், கட்டுமானத்துறை, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்:

குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் தனியார் நிறுவனங்கள் கட்டிய கட்டிடங்கள் முற்றிலுமாக இடிந்துவிட்டன. ஆனால், அரசு நிறுவனக் கட்டிடங்களில் சேதம் குறைவாக இருந்தது. அரசு கட்டிடங்கள் விதிகளுக்கு உள்பட்டு கட்டப்பட்டதுதான் இதற்குக் காரணம். கட்டிடம் தரமாக இருக்க வேண்டுமென்றால் கட்டிடக் கட்டமைப்பு வல்லுநர், கட்டிட அஸ்திவார வல்லுநர் ஆகியோரின் பணி முக்கியம். இவர்களுக்கான அங்கீகாரம் வழங்கும் அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அவ்வமைப்புகள் மூலம் தேர்வுகள் நடத்தி அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். அவர்களை மட்டுமே கட்டுமான நிறுவனங்கள் அணுக வேண்டும்.

விஜயசேகர், தீயணைப்புத்துறை இணை இயக்குநர் :

மவுலிவாக்கம் விபத்தின்போது, எத்தனை தொழி லாளர்கள் பணியில் இருந்தார்கள் என்று கட்டுமான நிறுவனத்திற்குத் தெரியவில்லை. இதற்குக் காரணம் துணை ஒப்பந்தம் மூலமாகத் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் அரசு அனுமதிக்கும் முறைப்படி கட்டிடங்களைக் கட்ட வேண்டும். அதை மீறினால் விளைவு உடனே தெரியாது. விபத்து நேரங்களில்தான் தெரியவரும். கட்டுமான நிறுவனங்கள் ஒழுங்குமுறை கடைப்பிடிக்க வேண்டும். கட்டிட அனுமதி பெறுவது குறித்த விதிகளை வெளிப்படையாக்கலாம்.

மதன்மோகன், தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர் (ஓய்வு):

வெளிமாநில தொழிலாளர் நலச்சட்டம் அமலில் உள்ளது. அதன்படி 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யு மிடத்தில் அவர்கள் தங்குவதற்கு தனி இடம், உணவு, சுகாதார வசதி ஆகியவை கட்டுமான நிறுவனத்தால் வழங்கப்பட வேண்டும். மேலும் கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தின் கீழ் ரூ..414 கோடி சேர்ந்துள்ளது. இதன் கீழ் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறோம். முதலில் வெளி மாநிலத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்களைக் கட்டுமான நிறுவனங்கள் செய்து தர வேண்டும்.

கட்டுமானத் தொழிலை அங்கீகரிக்க வேண்டும்

கட்டுமாந்த் தொழிலை அங்கீகரிக்க வேண்டும் என்று ஆர்.ஆர்.பி. ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பத்மநாபன் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட் துறை தொடர்பான அறிவிப்புகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பொன்னேரியில் துணை நகரம் அமைக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஏற்கனவே அங்கு தனியார் நிறுவனம் துணை நகரத்தை அமைத்துவருகிறது. இதை எப்படி செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ரியல் எஸ்டேட் துறைக்கான நிதி ஒதுக்கீடுகள் திருப்தி அளிக்கின்றனவா?

ரூ.100 கோடி என்ற அளவில் நிதி ஒதுக்குகிறார்கள். இது போதுமானதா? உண்மையில் ரியல் எஸ்டேட் துறைக்கு நிதி ஒதுக்கீடு என்பதெல்லாம் ஒன்றுமில்லை. ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்பவர்கள் தங்கள் சொந்த பணத்தில் இருந்துதான் எல்லாச் செலவுகளையும் செய்கிறார்கள். ரியல் எஸ்டேட், கட்டுமானத் துறைகளை அரசு ஒரு தொழிலாகவே அங்கீகரிக்கவில்லை. வங்கியில் கடன் கிடைப்பதில்லை. எப்போது இதை ஒரு தொழிலாக அங்கீகரிக்கிறார்களோ அப்போதுதான் இந்தத் துறை 100 சதவீதம் வளர்ச்சியடையும்.

சேவை வரியை ரத்துசெய்ய வேண்டும் என கட்டுமான நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றனவே?

ஏன் ரத்து செய்ய வேண்டும்? வருமான வரி, விற்பனை வரி என எந்த வரியாக இருந்தாலும் யாரும் ஒழுங்காகக் கட்டுவதில்லை. 10 சதவீதம் பேர் கட்டினாலே பெரிசுதான். வரி வசூல் மூலமாகத்தானே ஓர் அரசு செயல்பட முடியும். மக்களுக்கு நல்லது செய்ய முடியும். எனவே சேவை வரியை ரத்து செய்யவே கூடாது என்பது என் தனிப்பட்ட கருத்து.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x