

காவல்துறையில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்கதையாக நீண்டுகொண்டிருக்கிற நிலையில், பிஹாரைச் சேர்ந்த இரண்டு பெண் காவலர்கள் பேசுபொருளாகியுள்ளனர். ஜூஹி குமாரி, சாந்தி குமாரி ஆகிய இருவரும் பிஹாரின் ஹாஜிபூர் பகுதியில் உள்ள உத்தர் பிஹார் கிராம வங்கியின் வாயிலில் காவல் பணியில் இருந்தனர். அப்போது மூன்று ஆண்கள், சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வங்கிக்குள் நுழைந்தனர். அவர்களை விசாரித்தபோது, மூவரில் ஒருவர், தன்னிடமிருந்த துப்பாக்கியைக் காட்டி, பெண் காவலர்களை மிரட்டினார். துப்பாக்கியைக் கண்டு பயந்து பின்வாங்காத இருவரும் கொள்ளையர்களைத் தாக்க, அவர்கள் தப்பியோடினர். ஜூஹி, சாந்தி இருவரும் கொள்ளையர்களிடம் சண்டையிட்ட காணொலி கடந்த வாரம் வைரலானது.
மல்யுத்த சர்ச்சை
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் உள்படத் தேசிய பயிற்சியாளர்கள் சிலர் இளம் வீராங்கனைகளிடம் பாலியல் ரீதியில் தவறாக நடந்துகொள்வதாகவும் இது குறித்து புகார் அளிக்கக் கூடாது என்று மிரட்டப்படுவதாகவும் ஜனவரி 18 அன்று டெல்லியில் நடத்திய போராட்டத்தில் தெரிவித்தார். கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ்பூஷண் சரண் சிங் பதவி விலக வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பாலியல் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளித்த சரண் சிங், இவ்வளவு ஆண்டுகளாகப் பாலியல் சுரண்டல் நடைபெறுகிறது என்றால் வீராங்கனைகள் எப்படிப் பயிற்சி பெற்றிருப்பார்கள் எனவும் இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனவும் தெரிவித்தார். வினேஷ் போகத்துடன் சாக்ஷி மாலிக், சரிதா மோர், சங்கீதா போகத், சத்யவர்த் மாலிக், ஜிதேந்தர் கின்ஹா, சுமித் மாலிக் உள்ளிட்ட பல மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.