Published : 09 Dec 2016 10:42 am

Updated : 09 Dec 2016 10:42 am

 

Published : 09 Dec 2016 10:42 AM
Last Updated : 09 Dec 2016 10:42 AM

தமிழ் சினிமா 100 நூற்றாண்டு நிறைவு: பண்டமாற்றில் கேமரா வாங்கிய முதலியார்!

100

இந்தியாவின் முதல் மவுனப் படமான ‘ஹரிச்சந்திரா’ துண்டிராஜ் கோவிந்த பால்கே என்ற மராட்டியரால் 1913-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இதை வாங்கி பாம்பே காரனேஷன் தியேட்டரில் வெளியிட்டவர் இந்திய சினிமாவின் தந்தை எனப் புகழப்படும் தாதா சாகிப் பால்கே. பம்பாயில் திரையிடப்பட்ட அடுத்த ஆண்டே மதராஸுக்கு வந்த ‘ஹரிச்சந்திரா’, கெயிட்டி தியேட்டரில் 1914-ம் ஆண்டு திரையிடப்பட்டது. அதைக் காண வந்தார் 29 வயதே நிரம்பிய இளைஞரான ஆர். நடராஜ முதலியார். புரசைவாக்கம் மில்லர்ஸ் சாலையில் கார் கம்பெனி நடத்திவந்த அவரை அந்தப் படம் பெரிதும் பாதித்தது.

ஆவணப் படங்களே தூண்டுகோல்

ஆங்கிலேய வியாபாரிகள் நடத்திவந்த ‘அடிசன் & கம்பெனி’ என்ற கார் விற்பனை கடை மட்டுமே அன்று மதராஸில் இருந்த நிலையில் ஆங்கிலேயர் அல்லாத ஒருவரால் தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் கார் ஷோரூம் நடராஜ முதலியாருடையது. 1885-ம் ஆண்டு வேலூரில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர் ஆர். நடராஜ முதலியார். பள்ளிப் படிப்பை வேலூரில் முடித்த பின் மதராஸில் பிரபல மருத்துவராக இருந்த தனது தாய்மாமா எம்.ஆர். குருசாமி முதலியார் வீட்டில் தங்கிப் படிக்க மதராஸ் வந்தார்.

அப்போது அவரது மாமா மருத்துவத் தொழிலுடன் சைக்கிள் விற்பனைக் கடை ஒன்றையும் நடத்திவந்தார். படித்துக்கொண்டே மாமாவுக்கு வியாபாரத்தில் உதவிய அவர், சைக்கிள் கடையை கார் உதிரிப்பாகங்கள் விற்கும் கடையாக மாற்ற யோசனை தெரிவித்தார். கார் உதிரிப்பாகங்களை வாங்கிவர கல்கத்தாவுக்குத் துணிச்சலாகச் சென்று வந்தார். அப்போது ஸ்டில் கேமரா ஒன்றையும் அங்கிருந்து வாங்கிவந்த அவர், ஒளிப்படமெடுப்பதை விருப்பமான பொழுதுபோக்காக மாற்றிக்கொண்டார்.

மாமாவின் இறப்புக்குப் பின் கார்

விற்பனையைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தியவருக்கு மவுனப் படங்களைப் பார்ப்பதில் ஈடுபாடு அதிகரித்தது. வடநாட்டிலிருந்தும் பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட மவுனப் படங்களை அவர் பார்க்கத் தொடங்கினார். அப்போது டெல்லியில் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் ஆங்கில வைசிராய் கர்சன் பிரபு.

அவரது தர்பார் காட்சிகள், யானையில் அவர் நகர்வலம் வருதல், அவருக்கு ஆங்கில சிப்பாய்கள் செலுத்தும் ராணுவ வணக்கம், அவரது குதிரை பவனி, வேட்டைக்குச் சென்று திரும்புதல், அரச விருந்து, தேவாலய வழிபாட்டில் அவரது பங்கேற்பு ஆகியவை துண்டுதுண்டாக எடுக்கப்பட்டு பின் தொகுக்கப்பட்டு நியூஸ் ரீல்கள் வடிவில் பிரிட்டிஷ் இந்தியாவின் கல்கத்தா, பூனா, பம்பாய், மதராஸ் ஆகிய மாகாணங்களில் இருந்த திரையரங்குகளில் திரையிடப்பட்டன. கல்கத்தா சென்றிருந்தபோது கர்சன் பிரபுவை நேரில் கண்டிருந்த நடராஜ முதலியார் அவரைத் திரையில் கண்டது அவருக்கு பெரும் மாற்றத்தை உருவாக்கியது.

பண்டமாற்றில் கிட்டிய கேமரா

இப்படிப்பட்ட ஆவணப் படங்கள் எப்படி உருவாகின்றன என்பதைக் கற்றுக்கொள்ள விரும்பிய முதலியார் சினிமட்டோகிராஃப் கருவியை இயக்கத் தெரியாது என்ற நிலையிலும் அவற்றை வாங்கித் தனது கார் ஷோருமில் காட்சிக்கு வைத்தார். தஞ்சாவூரில் நிலச்சுவான்தாராக இருந்த மூப்பனார் என்பர் இங்கிலாந்திலிருந்து தான் வாங்கி வந்திருந்த 35 எம்.எம்.‘வில்லியம்சன்’ பிராண்ட் சைலண்ட் மூவி கேமராவையும் அதில் பதிவாகும் பிலிம் சுருள்களைப் பதனிடும் கருவியையும் 1914-ல் பண்டமாற்று முறையில் நடராஜ முதலியாருக்குக் கொடுத்து அவரிடமிருந்து இரண்டு கார்களை வாங்கிக்கொண்டார்.

கார்களை வாங்க வந்தவர்கள் அங்கிருந்த கேமரா முன் நின்று ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர். சினிமாவுக்கு மக்கள் தரப்போகும் வரவேற்பை நடராஜ முதலியார் புரிந்துகொண்டார். அவரது கட்டுக்கடங்காத சினிமா ஆர்வத்தைக் கண்ட ஒருவர் அவருக்கு வழிகாட்டினார். அவர் 'ஸ்டுட்பேக்கர்' என்ற கார் கம்பெனியில் மேனேஜராக பணியாற்றிவந்த ஆங்கிலேய நண்பர். அவரது சிபாரிசுக் கடித்ததுடன் லார்டு கர்சனின் அன்றாட வாழ்க்கையைப் படம்பிடித்துவந்த ஸ்டூவர்ட் ஸ்மித்தை பூனாவுக்குச் சென்று சந்தித்தார். கையில் மூவி கேமராவுடன் வந்துசேர்ந்த இளைஞன் ஒருவனைக் கண்டதும் ஸ்மித்துக்கு ஆச்சரியமாகிவிட்டது.

முதலியாரை ஆறுமாதகாலம் தன்னுடன் தங்கவைத்து சினிமட்டோகிராஃப் கருவியை இயக்கக் கற்றுத்தந்தார். பூனாவிலிருந்து புறப்படும்முன் தனது முதல் துண்டுப்படத்தை அங்கேயே படமாக்கிக் காட்டி, ஸ்மித்தின் பாராட்டுதலுடன் மதாராஸ் திரும்பினார்.

முதல் முயற்சியும் ஸ்டூடியோவும்

சென்னை வந்ததும் காட்சிகளை படமாக்கக் கையில் பிலிம் சுருள் இல்லாததால் அவற்றை லண்டனிலிருந்து இறக்குமதி செய்தவர் 1915-ன் இறுதியில் தனது முதல் படமுயற்சியைத் தொடங்கினார். இதற்காக, தனது நண்பராக இருந்த தமிழ் நாடக உலகின் தந்தைகளில் ஒருவர் என வழங்கப்படும் ‘பம்மல்’ கே. சம்பந்த முதலியாரைச் சந்தித்தார். அவர், மகாபாரத்தின் கிளைக் கதையான ‘திரௌபதி – கீசகன்’ கதையைப் படமாக்கலாம் என்று ஆலோசனை தர அதை ஏற்றுக்கொண்ட முதலியார் தமிழ் நடிகர்களை உடனடியாகத் தேர்வு செய்தார். அவர்களுக்குப் பயிற்சி அளிக்க, சுகுணவிலாச நாடக சபாவில் பெண் வேடமிட்டு நடித்துவந்த ரங்கவடிவேலு என்ற புகழ்பெற்ற நாடக நடிகரைப் பணியில்அமர்த்திக்கொண்டார்.

நடிப்புப் பயிற்சிக்காகத் தனது கார் கம்பெனியை ஒட்டியே மில்லர்ஸ் சாலையில் இருந்த 'டவர் ஹவுஸ்' என்ற பங்களா விட்டையே சினிமா ஸ்டூடியோவாக மாற்றினார். அதற்கு 'இந்தியா பிலிம் கம்பெனி லிமிட்டெட்' என்று பெயர் வைத்தார். இதுதான் தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் சினிமா ஸ்டூடியோ. நடிப்புப் பயிற்சி முடிந்ததும் உடனடியாக படப்பிடிப்பைத் தொடங்கிய அவர் 35 நாட்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்தி மராட்டியர்களுக்கு அடுத்து தமிழரான நடராஜமுதலியார் ‘ கீசக வதம்’ என்ற முழுநீளத் தமிழ் மவுனப் படத்தை 35 ரூபாய் செலவில் தயாரித்து ஆறாயிரம் அடி நீளம் கொண்ட படமாக 1916-ல் அதை வெளியிட்டு தமிழ் சினிமா வரலாற்றில் முதல் திரைப்பட இயக்குநராகத் தன்னைப் பதிவு செய்துகொண்டார்.

ஆறு படங்களோடு விலகிய முன்னோடி

அடுத்தடுத்துத் தனது தயாரிப்பில் ‘திரௌபதி வஸ்திராபரணம்’, ‘லவகுசா’, ‘ருக்மணி சத்யமாமா’, ‘மார்க்கண்டேயா’, ‘காளிங்கமர்த்தனம்’ என மேலும் ஐந்து படங்களைத் தயாரித்தார் நடராஜ முதலியார் தனது ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீவிபத்து, விபத்தொன்றில் மகனை இழந்தது, கார் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம், தனது திரைப்படங்களுக்குக் கிடைக்காத வரவேற்பு ஆகிய காரணங்களால் படத்தொழிலிலிருந்து விலகினார். தமிழ்ப் பெண்கள் யாரும் சினிமாவில் நடிக்க முன்வராத நிலையில் முதலியார் தனது இரண்டாவது படமான ‘திரௌபதி வஸ்திராபரணம்’ படத்தில் மரின் ஹில் என்ற ஆங்கிலோ இந்தியப் பெண்ணை திரௌபதியாக நடிக்க வைத்தார். இவருக்கு லியோச்சனா என்ற பெயரையும் சூட்டினார்.

“விலைமாதர்கள் கூட சினிமாவில் நடிப்பதை அவமானமாகக் கருதினார்கள். அதனால் ஆங்கிலேயேப் பெண்மணியைத்தான் நான் தேர்ந்தெடுக்க வேண்டிவந்தது. அவருக்குப் படக் காட்சிகளை ஆங்கிலத்தில் விளக்கிக் கூற ரங்கசாமிப் பிள்ளை என்ற ரயில்வே ஊழியரை அமர்த்தினேன். அவரையே துச்சாதனனாகவும் அந்தப் படத்தில் நடிக்க வைத்தேன்” என்று பின்னாளில் பேட்டியளித்த நடராஜ முதலியாரைத் தமிழ்த் திரையும் தமிழ் மக்களும் மறந்தே போனார்கள். அயனாவரத்தில் வசித்துவந்த அவரது மகள் ராதாபாயின் வீட்டில் 87 வயது வரை அமைதியாக வாழ்ந்த முதலியார் 1971-ம் ஆண்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் காலமானார். அவரது இறுதிச் சடங்கில் திரையுலகைச் சேர்ந்த யாரும் கலந்துகொள்ளவில்லை.


தமிழ் சினிமா நூற்றாண்டுநடராஜ முதலியார்தமிழ் சினிமா நினைவுகள்ஹரிச்சந்திராதுண்டிராஜ் கோவிந்த பால்கேஅடிசன் & கம்பெனிபண்டமாற்றுசுகுணவிலாச நாடக சபாரங்கவடிவேலுகீசக வதம்சம்பந்த முதலியார்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author