Published : 23 Dec 2016 10:27 AM
Last Updated : 23 Dec 2016 10:27 AM

கலக்கல் ஹாலிவுட்: ஓர் அமைதியான தாதாவின் கதை

கத்தியை எடுத்தவனுக்குக் கத்தியால்தான் சாவு; துப்பாக்கியை எடுத்தவனுக்குத் துப்பாக்கியால்தான் சாவு. நிழலுலக தாதாக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ஹாலிவுட்டில் தயாராகும் எல்லாப் படங்களின் சாராம்சமும் இதுதான். கோலிவுட் திரையில் வரும் நாயக தாதாக்களோ கடவுளுக்கு இணையாகச் சித்தரிக்கப்படுபவர்கள். ஆனால், ஜனவரி 13 அன்று வெளியாகவிருக்கும் ‘லிவ் பை நைட்’ (Live By Night) என்ற ஹாலிவுட் படம் நிழலுலகத்துக்கு ஒரு பாடமாக வரவிருக்கிறது என்கிறார்கள் ட்ரைலரைப் பார்த்துவிட்டு, படத்துக்காகக் காத்திருக்கும் ரசிகர்கள். அவர்களின் காத்திருப்புக்கு முக்கியமான காரணங்கள் இரண்டு. ஒன்று இந்தப் படத்தின் கதை அதிகம் விற்பனையான ஒரு க்ரைம் நாவலிருந்து உருவாகியிருப்பது. இரண்டாவது இந்தப் படத்தின் கதாநாயகன் பென் அஃப்லெக்.

நாயகன் எழுதிய திரைக்கதை

ஹாலிவுட் உட்படக் கதாநாயகர்கள் ஒரு கட்டத்துக்குப் பிறகு நடிப்பதோடு நிறுத்திக்கொள்வதில்லை. திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு என்று தாவிச் செல்வார்கள். பென் அப்ஃலெக்கும் அப்படியொரு திறமையாளர்தான். அமெரிக்க நிழலுலகைப் பின்னணியாக வைத்து டென்னிஸ் லெகேன் (Dennis Lehane) எழுதிய லிவ் பை நைட் (Live By Night) நாவல் வெளியான வேகத்தில் வரவேற்பைப் பெற்று பிரபலமானது. 2013-ம் ஆண்டின் சிறந்த வெகுஜன நாவலுக்கான எட்கர் (Edgar) விருதையும் பெற்றது.

உடனே உஷாரான வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் அந்த நாவலின் திரைக்கதையாக்க உரிமையைக் கைப்பற்றி, ஹாலிவுட்டின் புகழ்பெற்ற மற்றொரு நடிகரான லியனார்டோ டிகாப்ரியோவுடன் இணைத்துத் தயாரிக்க முடிவெடுத்து அறிவித்ததும் ஹாலிவுட் பரபரப்பானது. படத்துக்கான திரைக்கதையை எழுதி, முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து, அதை இயக்கும் பொறுப்பை பென் அப்ஃலெக் ஏற்றுக்கொண்டதும் அடுத்த பரபரப்பு தொற்றிக்கொண்டது. பென் அஃப்லெக் பெயர் வாங்கிய நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் என ‘தி டவுன்’ (The Town), அர்கோ (Argo) படங்களின் மூலம் நிரூபித்தவர். இன்னொரு பக்கம் ஆக்‌ஷன் நாயகனாக ‘பேட் மேன் வெர்ஸஸ் சூப்பர் மேன்’ (Bat man vs Super man) படத்தில் பேட் மேனாக (Bat man) சண்டைக் காட்சிகளில் வெளுத்துக்கட்டியவர்.

அமைதியான தாதா

அப்படிப்பட்டவர் ஒரு அமைதியான தாதா கதாபாத்திரத்தில் நடித்தால் அது எப்படியிருக்கும் என்பதுதான் தற்போதைய ‘லைவ் பை நைட்’ படத்தில் அவருக்கான சவால். 1920-களில் பிளோரிடாவில் வாழும் ஜோ கோஹ்லின் என்ற இளைஞன்தான் கதையின் நாயகன். நேர்மையான காவல் துறை அதிகாரியின் மகனான இருந்த இவன், நல்ல மனிதனாக வாழ்கிறான். ஆனால், சூழ்நிலை இவனை தாதாவாக மாற்றுகிறது. தாதாவாக மாறியவன் மீண்டும் தன் பழைய வாழ்க்கைக்குத் திரும்ப நினைக்கும்போது அது அவனுக்குச் சாத்தியமானதா இல்லையா என்பதுதான் கதை. 129 நிமிடம் நகரும் காட்சிகள். ஹாலிவுட்டைப் பொறுத்தவரை கொஞ்சம் நீளமான படம்தான். ஆனால், அதுவே எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறது.

1920-கள் என்னும் காலகட்டத்தைக் கலையழகுடன் கண்முன்நிறுத்தும் ஆர்ட் டைரக்‌ஷனுக்காக மட்டுமே பணத்தை வாரி இறைத்திருக்கிறார்களாம். 2017-ன் இறுதியில் வெளியிடலாம் என எண்ணியிருந்த வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் ரசிகர்கள் அதுவரை பொறுத்திருக்கமாட்டார்கள் என்பதைப் புரிந்துகொண்டு கிறிஸ்துமஸ் விருந்தாக அமெரிக்காவில் வெளியிடுகிறது. அதன்பிறகு ஜனவரி, 13-ல்தான் மற்ற நாடுகளின் ரசிகர்களைச் சந்திக்க வருகிறார் ஜோ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x