

கடந்த ஆண்டில் வெளியான சில முக்கியமான கல்வி நூல்களைப் பார்ப்போம்.
மூன்று முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கான கல்வி எப்படி இருக்க வேண்டும் என்பதை இத்தாலியைச் சேர்ந்த கல்வியாளர் மரியா மாண்டிசோரி ‘Absorbing Mind’ என்னும் நூலாக 1949இல் எழுதினார். இதன் தலைப்பை மாற்றி உள்ளடக்கத்தை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசன்.
மழலையர் கல்வி
மரியா மாண்டிசோரி
தமிழில் : ஆயிஷா இரா. நடராசன்
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன்/பாரதி புத்தகாலயம்
விலை - ரூ.345
பிரிட்டிஷ் காலனி ஆட்சியின்போது 1835இல் தாமஸ் பாபிங்டன் மெக்காலே இந்தியாவில் கல்வி குறித்த அறிக்கையை (Minute on Indian Education) வெளியிட்டார். மெக்காலே என்ன சொல்லி இருக்கிறார் என்பது குறித்து பெரும்பாலும் தவறான தகவல்களே பரப்பப்பட்டு வருகின்றன. இந்தப் பின்னணியில் மெக்காலேவின் அறிக்கையை ரோஜா முத்தையா நூலகத்தின் இயக்குநர் சுந்தர் கணேசன், ‘ஃப்ரண்ட்லைன்’ இதழின் முன்னாள் ஆசிரியர் ஆர்.விஜயசங்கர் ஆகியோர் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர்.
நவீன கல்விக்கொள்கையை நோக்கி: மெக்காலே கூறியது என்ன?
தமிழில் : சுந்தர் கணேசன், ஆர்.விஜயசங்கர்
வெளியீடு: ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
விலை .ரூ.50
12 விதமான பணிகளை எடுத்துக்கொண்டு அவற்றில் வெற்றிபெற உயர்கல்வியில் என்ன படிக்க வேண்டும், எப்படிப் படிக்க வேண்டும் என்பதை விவரிக்கிறது இந்நூல். தொடராக எழுதப்பட்டு இப்போது நூல்வடிவம் கண்டுள்ளது.
+2 வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்
என்.சொக்கன்
வெளியீடு - எழுத்து பிரசுரம், விலை - ரூ.70
ஐரோப்பியர் வருகைக்குப் பிறகு இந்தியாவில் நவீனக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்ட காலம் தொடங்கி இருநூறு ஆண்டுகளை நெருங்கும் தமிழ்வழிக் கல்வியின் வரலாற்றை இந்நூல் விரிவாக அலசுகிறது. பள்ளிக் கல்வி, உயர் கல்வியில் மட்டுமல்லாமல் தொழில் கல்வியிலும் தமிழ் வழிக் கற்றல் ஏன் அவசியம் என்பதை இந்த நூல் வலியுறுத்துகிறது.
தமிழ் பயிற்றுமொழி: கனவும் நனவும்
டாக்டர் சு.நரேந்திரன்
வெளியீடு - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை - ரூ. 289
அரசுப் பள்ளி ஆசிரியராக இருபது ஆண்டுகால அனுபவம் பெற்ற நூலாசிரியர் அரசுப் பள்ளிகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்த நூல்களை எழுதிவருகிறார். அந்த வகையில் தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் ஏற்ற கல்விக் கொள்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை விளக்கியிருக்கிறார்.
நம் கல்வி எது;
சு.உமா மகேசுவரி
வெளியீடு - பன்மை வெளி, விலை - ரூ.250
தொகுப்பு - நந்தன்