Published : 14 Apr 2014 01:35 PM
Last Updated : 14 Apr 2014 01:35 PM

கல்வி ஆலோசனை: சர்வதேசச் சூழலில் சிறப்பு முதுகலைப் பட்டங்கள்

இந்தியாவின் மக்கள்தொகை 120 கோடியைத் தாண்டிவிட்டாலும் இங்குள்ள மிகப்பெரும் சொத்து இளைஞர்கள். இந்த இளம் மனிதவளத்தை ஆக்கபூர்வமாக மாற்றவும், சர்வதேசப் போட்டிச்சூழலை எதிர்கொள்ளக்கூடிய திறமை வாய்ந்த இளம் நிபுணர்களை உருவாக்கவும் கடந்த 2012-ல் நிறுவப்பட்டதுதான் சென்னை அருகே உள்ள ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் (Rajiv Gandhi National Institute of Youth Development). காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 42 ஏக்கர் பரப்பளவில் பசுமை மிகுந்த சூழலில் விரிந்து பரந்து அமைந்துள்ளது இந்த உயர்கல்வி நிறுவனம். மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்நிறுவனம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. இளைஞர்களின் முன்னேற்றத்துக்கான பாடப் பிரிவுகளை வழங்குவதால் இந்தச் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியது. இங்கு,

1. இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் (M.A. Youth Empowerment),

2. வேலைவழிகாட்டி ஆலோசனை (M.A. Career Counselling),

3. உள்ளாட்சி நிர்வாகம் (M.A. Local Governance),

4. பாலினப் படிப்புகள் (M.A. Gender Studies),

5. வாழ்வியல் திறன் கல்வி (M.A. Life skills Education),

6. வளர்ச்சி செயல்முறை (M.A. Development Practice)

என 6 விதமான முதுகலை பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. (உள்ளாட்சி நிர்வாகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் பணிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது). ஒவ்வொரு படிப்பிலும் தலா 20 இடங்கள். இந்தப் படிப்புகளில் சேர ஏதாவது ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருந்தால் போதுமானது. குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்கள் அவசியம். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பட்டப் படிப்பிலும், இந்த நிறுவனம் நடத்தும் நுழைவுத்தேர்விலும் பெறும் மதிப்பெண்கள், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நுழைவுத்தேர்வைப் பொறுத்தமட்டில், பொது அறிவு, இளைஞர் நலன் தொடர்பான கேள்விகள் கேட்கப்படுகின்றன. மத்திய அரசு நிறுவனம் என்பதால் எஸ்.சி, எஸ்.டி., ஓ.பி.சி. வகுப்பினருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் அரசு விதிமுறைகளின்படி இட ஒதுக்கீடு உண்டு. பல்வேறு விதமான கல்வி உதவித் தொகைகளும் வழங்கப்படுகின்றன. அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்குத் தகுதி உதவித்தொகை தனியாகத் தரப்படுகிறது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு உட்பட்ட எஸ்.சி - எஸ்.டி. மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.

“இந்திய மாணவ-மாணவிகள் மட்டுமின்றி சார்க் நாடுகள், காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் இங்கே படிப்பதால் சர்வதேசக் கல்விச் சூழலில் மாணவர்கள் படிக்க முடியும். ஏ.சி. வசதியுடன் கூடிய ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள், கணினி, வை-பை வசதி, அதிநவீன நூலகம், விருப்பசார் மதிப்பெண் முறை (choise-based credit system), புதுமையான பயிற்றுவிப்பு, சோதனை முறையில் படிக்க பயிலரங்குகள், இளைஞர் பரிமாற்றத் திட்டத்தின் (Youth Exchange Programme) கீழ்வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கக்கூடிய வாய்ப்பு எங்கள் கல்வி நிறுவனத்தின் முக்கிய அம்சங்கள்” என்கிறார் இயக்குநர் லதா பிள்ளை.

இங்கே படித்து முடிக்கும் மாணவர்களுக்குத் தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உடனடியாக வேலை கிடைத்துவிடுகிறது. 80 சதவீத மாணவர்கள் “கேம்பஸ் இண்டர்வியூ” மூலம் பணிவாய்ப்பு பெற்றுவிடுகின்றனர்.

இளங்கலை பட்டப் படிப்பை முடிக்கும் மாணவ-மாணவிகள் வழக்கமான பாடங்களில் மேற்படிப்பைத் தொடர்வதைக் காட்டிலும் உள்ளாட்சி நிர்வாகம், வேலை வழிகாட்டி ஆலோசனை, வாழ்வியல் திறன் கல்வி உள்பட மேற்கண்ட சிறப்பு முதுகலைப் படிப்புகளில் சேர்ந்தால் வேலைவாய்ப்பை வளப்படுத்திக்கொள்ள முடியும்.

தற்போது, 2014-2016 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை இக்கல்வி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. மேற்கண்ட படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங்கள் இப்போது வழங்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பக் கட்டணம் ரூ. 200 (எஸ்.சி, எஸ்.டி. மாணவர்கள், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ரூ.100). உரிய கட்டணத்தை ரொக்கமாக நேரில் செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். தபால் மூலம் பெற விரும்பினால், குறிப்பிட்ட கட்டணத்தை “The Director, Rajiv Gandhi National Institute of Youth Development” என்ற பெயரில் டிமாண்ட் டிராப்டாக எடுத்து ரூ. 25 ஸ்டாம்பு ஒட்டிய, சுயமுகவரி எழுதப்பட்ட தபால் கவருடன் இந்த நிறுவனத்துக்கு ஒரு கோரிக்கை கடிதம் அனுப்பியும் பெறலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஏப்ரல் 21-ம் தேதி. நுழைவுத்தேர்வு மே 4-ம் தேதி நடத்தப்பட உள்ளது. நேர்முகத்தேர்வு மே 23, 24-ம் தேதிகளில் நடைபெறும். வகுப்புகள் ஜூலை 1-ம் தேதி தொடங்குகின்றன. கூடுதல் விவரங்கள் அறிய பின்வரும் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

இயக்குநர், ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம், ஸ்ரீ பெரும்புதூர், காஞ்சிபுரம் மாவட்டம் 602105. தொலைபேசி எண் 044-27163127. செல்போன் 9445546759.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x