Published : 10 Dec 2016 10:12 am

Updated : 10 Dec 2016 10:12 am

 

Published : 10 Dec 2016 10:12 AM
Last Updated : 10 Dec 2016 10:12 AM

சஞ்சீவி மூலிகை முருங்கை

> (கடந்த வாரத் தொடர்ச்சி)

ஆசியக் காய்கறிகள் ஆராய்ச்சி, மேம்பாட்டு மையம் (Asian vegetable research and development center-AVRDC) முருங்கை இலை தரும் பலன்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளது. அது வெளியிட்ட முடிவுகள்:


முருங்கை இலை

> கொதிக்க வைத்த அல்லது காய வைத்த முருங்கை இலையில் மூன்று மடங்கு அதிகமாக உள்ள இரும்பு சத்தைக் கிரகிக்கும் தன்மையை நமது உடல் கொண்டுள்ளது.

> முற்றிய முருங்கை இலையிலேயே மருத்துவக் குணம் பெருமளவு இருக்கிறது.

> முருங்கை இலையை நேரடியாக வெயிலில் உலர்த்தினால் வைட்டமின் ஏ சத்து குறைந்துவிடும். நிழலில் உலர்த்தினால் 70% வைட்டமின் ஏ சத்து தங்கியிருக்கும்.

> கோடைக் காலம், மழைக் காலத்தில் கிடைக்கும் முருங்கை இலையில் வைட்டமின் ஏ சத்து அதிகம்.

> வறண்ட காலம், குளிர் காலத்தில் கிடைக்கும் முருங்கை இலையில் இரும்பு சத்து, வைட்டமின் சி சத்து அதிகமாக இருக்கும். தமிழகத்தில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் கிடைக்கும் முருங்கை இலையின் சுவை அதிகம் என்பது கிராமப்புற நம்பிக்கை. இதற்கான அறிவியல் காரணம், மேலே குறிப்பிட்டதுதான்.

> பரோடா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் முருங்கை இலையுடன் தக்காளியைச் சேர்த்துச் சமைத்தால் வைட்டமின் ஏ சத்து நீங்கிவிடுவதற்கான சாத்தியம் இருப்பது தெரியவந்துள்ளது.

முருங்கை - மருத்துவப் பயன்கள்

1. நீரிழிவு நோய்க்கு

முருங்கை இலையில் உள்ள isothiocyanate என்ற வேதிப் பொருள் நீரிழிவு நோய்க்குப் பயன்தரும் உணவுப் பொருளாக அமைகிறது. அத்துடன், உடல் எடையைக் குறைக்கவும் இது உதவும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன (ஆதாரம்: Molecular nutrition food reserch 2015.Jun.59-1013-1024).

சாப்பிடும் முறை: நிழலில் உலர்த்திய முருங்கை இலைப்பொடியை ஒரு நாளைக்கு ஏழு கிராம் வீதம் மூன்று மாதங்களுக்குச் சாப்பிட்டுவந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு 13.5% குறைவது பதிவு செய்யப்பட்டுள்ளது. முருங்கை இலையில் உள்ள chlorogenic acid என்ற வேதிப்பொருள், சாப்பிட்ட பின் ரத்தத்தில் உயரும் சர்க்கரையின் அளவை குறைத்துவிடும்.

2. உயர் ரத்த அழுத்த நோய்க்கு

ரத்த அழுத்த விகிதத்தைச் சரியாகப் பராமரிக்க உதவும் Quercetin என்ற வேதி பொருள், முருங்கை இலையில் இருப்பது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடைமுறைப் பயன்கள்

அந்தக் காலத்தில் செய்ததுபோல், வெண்ணெயை உருக்கி நெய்யாக்கும்போது கொஞ்சம் முருங்கை இலையையும் இட்டுக் காய்ச்சி எடுப்பதால் நெய்யின் ஆயுட்காலம் நீடிக்கும்.

அதேபோல உணவைக் கெட்டுப் போகாமல் வைத்திருக்க முருங்கை இலைப்பொடி சேர்க்கப்படுகிறது. மாட்டு இறைச்சியுடன் முருங்கை இலைப்பொடியைச் சேர்த்துக் குளிரூட்டப்பட்ட இடத்தில் வைத்தால் 12 நாட்கள்வரை இறைச்சி கெட்டுப் போகாது. முருங்கை இலையில் உள்ள எதிர் ஆக்ஸிகரணிகளே, இப்படிக் கெட்டுப் போகாமல் வைத்திருக்க உதவுகின்றன. (ஆதாரம்: Food packing and shelf life vol.3, March.2015 page 31-38).

ரத்தசோகையை நீக்க

கர்ப்பிணிப் பெண்களின் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தால், மதுரை மாவட்ட மக்கள் பயன்படுத்தும் மருத்துவ முறை ஒன்று உண்டு. கறிவேப்பிலை, முருங்கை இலை தலா ஒரு கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீரைச் சேர்த்து, அது அரை டம்ளராகக் குறையும்வரை அடுப்பில் சூடுபடுத்தி, வடிகட்டி குடிநீராகக் கொடுப்பது வழக்கம். இது மிகவும் பயனுள்ள முறை. கர்ப்பிணிப் பெண்கள் இதைத் தொடர்ந்து செய்துவந்தால், கால் வீக்கம் நன்கு குறைவதை உணரலாம்.

தண்ணீரைத் தூய்மைப்படுத்த

தண்ணீரில் உள்ள கசடை நீக்குவதற்குப் பொதுவாகக் கனிம உப்புகளான படிகாரம் என்ற alum, அன்னபேதி என்ற ferrous ஆகியவற்றைப் பயன்படுத்திவருகிறோம். இவற்றை அதிக அளவில் சேர்க்க வேண்டிவந்தால் தண்ணீரின் சுவை மாறுபடும்; தண்ணீரின் அமில - காரச் சமநிலையும் மாறுபடும். தூய்மைப்படுத்தும் பொருளை அதிக அளவில் சேர்க்க வேண்டிவந்தால் அதிகப் பொருட்செலவும் ஆகும். இதற்கு நல்ல மாற்று முருங்கை விதை.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள செனகல், கானா நாடுகளில் தண்ணீர் கசடை நீக்குவதற்கு முருங்கை விதை இன்றைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சுத்தம் செய்யும் அறிவியல்

முருங்கை விதையில் உள்ள dimeric cationic proteins என்ற நேர்மின்னூட்டம் பெற்ற புரதம், தண்ணீரில் உள்ள எதிர்மின்னூட்டம் பெற்ற கிருமிகள், களிமண், நச்சுப் பொருட்களுடன் கலந்து வீழ்படிவாகப் பாத்திரத்தின் அடியில் தங்க வைக்கிறது.

தண்ணீரில் உள்ள கலங்கிய நிலையை அளவிடுவதற்குச் சர்வதேச அலகு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் நிபெலோமெட்ரிக் டர்பிடிட்டி அலகு (Nephelometric turbidity unit-NTU). தண்ணீரின் கலங்கிய நிலையைக் கணக்கிடும் கருவிக்கு Turbid meter என்று பெயர். குடிநீரில் அதிகபட்சமாக 0.3 NTU என்ற அளவில்தான் கசடுப் பொருட்கள் இருக்க வேண்டும்.

குறைந்த அளவு (50 NTU) கலங்கிய நிலையைக் கொண்ட நான்கு லிட்டர் தண்ணீருக்கு ஒரு முருங்கை விதை போதும்.

அதிக அளவு (250 NTU) கலங்கிய நிலையைக் கொண்ட ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு முருங்கை விதைகள் தேவைப்படும்.

செய்முறை

வெயில் காலத்தில் சேகரிக்கப்பட்ட முருங்கை விதையைப் பொடியாக்கி 250 மி.லி. தண்ணீரில் கலந்து நன்றாகக் கொழகொழப்பாக வைத்துக்கொண்டு, தண்ணீரைச் சுத்தப்படுத்த வேண்டிய கலனில் கலந்து ஒரு நிமிடத்துக்கு 15 முதல் 20 தடவை சுத்தமான கரண்டியால் கலக்கிவிடவும். இதுபோல் 10 நிமிடங்கள்வரை செய்துவிட்டு, பிறகு இரண்டு மணி நேரத்துக்கு எதுவும் செய்யாமல் இருந்தால் தண்ணீரில் உள்ள கசடுகள், கிருமித் தொற்றுகள் நீங்கித் தெளிவான தண்ணீர் கிடைக்கும்.

குறைந்த செலவில், குறைந்த நேரத்தில், எளிதில் கிடைக்கக்கூடிய, உணவுப் பொருளாகப் பயன்படுத்தக் கூடிய முருங்கை விதை தண்ணீரில் உள்ள கசடுகளை நீக்கவும் பயன்படுவது சிறப்பானது.

பரவலாக வேண்டும்

இப்படியாக ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகள், கர்ப்பிணிகள், பெண்களுக்கு என வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த மக்களுக்குத் தினசரி உணவாக முருங்கை இலை உதவிவருகிறது. மற்றொருபுறம் தண்ணீரைத் தூய்மைப்படுத்தும் சிறப்பான குணத்தை முருங்கை விதை கொண்டுள்ளது. இப்படி ஏழை, எளிய மக்களைக் காப்பாற்றிவரும் குணத்தைக் கொண்டிருக்கும் முருங்கை, கியூப முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் ஆதரவையும் பெற்றது பொருத்தமானதுதான். முருங்கை தரும் பலன்களை உலகுக்கு எடுத்துச்சொன்ன தமிழகம், முருங்கையை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கும் மீண்டும் பரவலாகப் பயன்படுத்துவதற்கும் தயாராக வேண்டும்.


கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: sriramsiddha@gmail.com


முருங்கை நன்மைகள்முருங்கை சிறப்புமுருங்கை இலைஆசியக் காய்கறிகள் ஆராய்ச்சிமுருங்கை இலை பலன்கள்சித்த மருத்துவம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x