Last Updated : 20 Dec, 2016 10:25 AM

 

Published : 20 Dec 2016 10:25 AM
Last Updated : 20 Dec 2016 10:25 AM

ஆங்கிலம் அறிவோமே - 139: உண்மையாவே பொய் சொல்லிட்டேன்!

கேட்டாரே ஒரு கேள்வி

எனக்கு piece of mind இல்லை. சமாதானப்படுத்தும் விதத்தில் ஓர் ஆங்கிலப் பழமொழியைக் கூற முடியுமா?

*******

​Pinocchio paradox என்பது என்ன?

முதலில் paradox என்பதை அறிந்து கொள்வோம். ‘மேலோட்டமாகப் படித்தால் அபத்தமாக இருக்கும். ஆராய்ந்து பார்த்தால் அதிலும் ஓர் உண்மை இருக்கும்’. இப்படி இருப்பதை paradox என்பார்கள்.

You can have money by spending it.

A rich man is no richer than a poor man.

“I can resist anything but temptation” என்று ஆஸ்கர் வைல்ட் கூறியதுகூட ஒரு paradoxதான்.

இப்போது Pinocchio paradoxக்கு வருவோம். Pinocchio என்கிற கேலி சித்திர கதாபாத்திரச் சிறுவனுக்குப் பொய் சொல்லும்போதெல்லாம் மூக்கு கொஞ்சம் வளருமாம்.

“என் மூக்கு இப்போது வளர்கிறது” என்று அவன் கூறினால் அதற்கு என்ன அர்த்தம்?

அவன் கூறுவது உண்மையா? பொய்யா?

அவன் சொல்வதை​ உண்மை என்று வைத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் அவன் உண்மை பேசினால் அவன் ​மூக்கு வளராது.

அதே சமயம் அதைப் பொய் என்றும் கூற முடியாது. ஏனென்றால் அப்படிப் பொய் பேசும்போது அவன் ​மூக்கு வளர்ந்துவிடும். அப்படியானால் அவன் கூறுவது உண்மை என்றாகிவிடுகிறது.

இதைத்தான் Pinocchio paradox என்பார்கள். Liar’s paradox என்றும் இதைக் கூறுவதுண்டு.

********************

இந்த வார ‘கேட்டாரே ஒரு கேள்வி’யில் இடம் பெற்ற கேள்வியை எழுப்பியவரிடம் “ஒரு சின்ன pieceதானே இல்லை, விடுங்கள்’’ என்று கூறுவது நியாயமல்ல. Peace of mind அதாவது மன நிம்மதி இல்லாத நிலையில் அவர் ஒரு வார்த்தைக்கான எழுத்துகளை மாற்றிப் போட்டிருக்க வேண்டும். .

No one will manufacture a lock without a key. Similarly God won’t give problems without solutions.

இந்தப் பொன்மொழி சமாதானப்படுத்துகிறதா நண்பரே?

********************

Puzzle, riddle ஆகிய இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கும்படி ஒரு வாசகர் கேட்டிருக்கிறார்.

Riddle என்பதை brain teaser எனலாம். பெரும்பாலும் இது வாய்மொழியாகக் கேட்கப்படுவது. விடை நீங்கள் அறிந்ததுதான். ஆனால் கேள்வியோடு அந்தக் கோணத்தில் பொருத்திப் பார்த்திருக்க மாட்டீர்கள்.

இதோ இரண்டு எடுத்துக்காட்டுகள். At what sports do waiters excel? என்ற riddleக்கு விடை Tennis. ஏன்? They know how to serve என்ற விளக்கத்தைக் கேட்டால் ஒரு புன்னகை பிறக்கிறது அல்லவா?

Which was the largest island before Australia was discovered? இந்த riddleக்கான விடை Australia என்பதுதான். இந்த riddleல் ஒரு முழுமையான logic இருக்கிறது அல்லவா?

கீழே உள்ள riddles-க்குப் பதில​ளியுங்கள். உங்கள் கற்பனைக் கொடி நன்றாகவே பறக்கட்டும். உங்கள் விடை ​மூன்று நாட்களுக்குள் வந்து சேர வேண்டும்.

1) What does not exist but has a name?

2) Where can you always find diamonds?

3) What baby is born with whisker?

Puzzle என்றால் அதைப் புரிந்து கொள்வதோ, விடுவிப்பதோ கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். அதை உருவாக்குவதற்குக்கூடத் திறமை வேண்டும். Crossword puzzle, jigsaw puzzle போன்றவை சில எடுத்துக்காட்டுகள்.

இதோ கொஞ்சம் வித்தியாசமான ஒரு crossword puzzle. குறிப்புகளில் உள்ள வார்த்தைகளுக்குச் சமமான ஆங்கில வார்த்தைகளைக் கட்டங்களில் நிரப்புங்கள்.

இடமிருந்து வலம்

1)Rows and columns அடங்கியது (5)

4) Master - எதிர்ச்சொல் (5)

5) Upright என்றால்? (5)

மேலிருந்து கீழ்

1)ரசனை (5)

2)குற்றம் சுமத்து (5)

3)வெளியேற்று (5)

இந்த crossword puzzleக்கான விடைகளையும் வாசகர்கள் எழுதி ​மூன்று நாட்களுக்குள் அனுப்பலாமே.

**************

“Non lexical fillers என்பது பற்றிக் கொஞ்சம் விளக்க முடியுமா?” என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர். இவையெல்லாம் அதிகப்படியான வார்த்தைகள் - அர்த்தமில்லாதவை. um, hm, uh, er போன்றவை சில வழக்கமான non lexical fillers.

பேச்சில் மட்டுமல்ல எழுத்திலும் கூட இவை இடம் பெறுகின்றன.

இவை அர்த்தமில்லாதவை என்று கூறப்பட்டாலும் வேறொருவிதத்தில் அர்த்தம் கொண்டதாகவே உள்ளன.

​‘uh’ அல்லது ‘er’ என்பது பெரும்பாலும் சொன்ன​தைக் கொஞ்சம் மாற்றும் வகையில் திசை திருப்பும் சொற்கள். “He was wearing blue – uh, I mean a brown shirt” என்பது ஓர் உதாரணம்.

பேச்சின் இடையில் ஒரு சிறு தடங்கல் ஏற்படும்போதோ, நேர அவகாசம் தேவைப்படும்போதோ um என்பது பயன்படுகிறது. “I went there exactly at, um – 5.15 p.m.”.

பொதுவாக அமெரிக்கர்கள் ‘um’ அல்லது ‘em’ என்றும், பிரி​​ட்டிஷ்காரர்கள் ‘uh’ மற்றும் ‘eh’ என்றும் பயன்படுத்துவதுண்டு.

**************

போட்டியில் கேட்டுவிட்டால்?

The local officer ___________ the Minister of the situation.

1)pointed

2)warned

3)apprised

4)explain

5)asked

இங்கே கீழ்நிலையிலுள்ள ஒருவர் (local officer) உயர்நிலையிலுள்ள ஒருவரிடம் (Minister) உள்​ளூரிலுள்ள சூழல் குறித்துத் தெரியப்படுத்துகிறார் அல்லது விளக்குகிறார்.

ஆக asked என்ற வார்த்தை இங்குப் பொருந்தவில்லை. ஏதோ அமைச்சரைக் கீழ்நிலையில் உள்ளவர் அங்குள்ள சூழல் குறித்துக் கேட்பதுபோல் இது அமைந்து விடுகிறது. எனவே தவறு.

Warned என்பது நிச்சயமாகப் பொருந்தாது. ஏதோ திரைப்படக் காட்சியாக இருந்தாலொழிய, அமைச்ச​ரைக் கீழ்நிலையில் இருப்பவர் எச்சரித்தார் என்பது பொருத்தமற்றது.

சுட்டிக் காட்டுவது என்ற பொருள் கொண்ட pointed என்பதும் சரியல்ல.

Appraise என்றால் மதிப்பிடுதல். Apprise என்றால் தெரியப்படுத்துதல். அங்குள்ள சூழலைப் பற்றி local officer அமைச்சருக்குத் தெரியப்படுத்தினார் என்பது பொருந்துகிறது.

Explained என்பதும் பொருந்தும்தான். ஆனால் அளிக்கப்பட்டிருக்கும் விடைகளில் ஒன்று explain என்பதுதான். Explained அல்ல.

எனவே The local officer apprised the Minister of the situation.

**************

சிப்ஸ்

* Theirselves என்று ஒரு வார்த்தை உண்டா?

இல்லை. Themselves என்றுதான் உண்டு. ஆனால் இதற்கு நேரடியான ஒருமை வடிவம் இல்லை. Himself அல்லது herself என்றுதான் இதை ஒருமைப்படுத்த முடியும்.

* Globe trotters என்பவர்கள் யார்?

​உலகெங்கும் பயணம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்பவர்கள்.

* Fearful என்றால் என்ன? Fearsome என்றால் என்ன?

Fearful என்றால் ஒன்றைப் பார்த்துப் பயப்படுவது. Fearsome என்றால் பிறரிடம் பயத்தை உண்டாக்குவது.

(தொடர்புக்கு - aruncharanya@gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x