Last Updated : 29 Nov, 2016 12:10 PM

 

Published : 29 Nov 2016 12:10 PM
Last Updated : 29 Nov 2016 12:10 PM

ஆங்கிலம் அறிவோமே - 136: நெருப்புடா சமாச்சாரம்!

கேட்டாரே ஒரு கேள்வி

‘மதிப்பற்றது என மதிப்பிடும் செயல்’ ஏன் வெகு நீளமானது என்று தெரியுமா?



“Man Booker Prize குறித்துச் சமீபத்தில் ஒரு செய்தியைப் படித்தேன். ஆண்களுக்கு மட்டுமே வழங்கப்படும் பரிசா இது? ” என்று கேட்டிருந்தார் ஒரு வாசகி.

யார் சொன்னது, நீங்களும் ஆங்கிலத்தில் ஒரு புதினத்தை எழுதி அதைப் பிரிட்டனில் பதிப்பித்தால் அந்தப் பரிசு உங்களுக்குக் கிடைக்க வாய்ப்பு உண்டு சகோதரி.

பிறகு எதற்காக Man என்ற வார்த்தை அதில் இடம்பெற வேண்டும் என்று கேட்கிறீர்களா? இந்தப் பரிசை வழங்குபவர்கள் Man Group என்கிற நிறுவனம்.

தொடக்கத்தில் Booker என்ற நிறுவனம் பரிசுத் தொகையை வழங்கியதால் இது ‘Booker Prize’ என்று அறியப்பட்டது. 2002-லிருந்து Man Group பரிசை வழங்க முடிவு செய்தது. என்றாலும் Booker என்ற வார்த்தையையும் தங்கள் பெயருடன் இணைத்துக்கொள்ள முடிவு செய்தனர். எனவே, Man Booker Prize.

மற்றபடி booker என்பது நாடகம் (போன்ற கலை நிகழ்ச்சிகளில்) பங்கேற்பவர்களை வேலைக்கு அமர்த்துபவரைக் குறிக்கிறது. கணக்குகளைப் பார்த்துக் கொள்பவர்களையும் booker என்று அழைப்பதுண்டு.



கேட்டாரே ஒரு கேள்வியில் நண்பர் குறிப்பிடுவது ஆங்கிலத்தின் மிக நீளமான வார்த்தையாகக் கருதப்பட்டு வந்தது. அதாவது ஆக்ஸ்ஃபோர்டு அகராதியிலுள்ள மிக நீளமான வார்த்தை 29 எழுத்துகள் கொண்டது. அது ‘Floccinaucinihilipilification’. இதன் பொருள் மதிப்பற்றது என்று மதிப்பிடும் செயல்.

Flocci, nauci, nihili, pilifi என்ற நான்கு லத்தீன் வார்த்தைகளின் கூட்டு இது. லத்தீனில் இந்த ஒவ்வொரு வார்த்தைக்கும் ‘மிக மிகக் குறைந்த விலைக்கு’ அல்லது ‘மதிப்பற்ற’ என்று அர்த்தம்.

ஆனால், இதைவிட நீண்ட வார்த்தை ஒன்று வெப்ஸ்டர் அகராதியில் உள்ளது. 45 எழுத்துகள் கொண்ட இந்த வார்த்தையை நீங்கள் படிக்கும் வசதிக்காக நடுநடுவே கொஞ்சம் இடைவெளி கொடுத்து அளிக்கிறேன்.

Pneumono ultra microscopic silico volcano coliosis.

இது ‘சுரங்கத் தொழிலாளர்களிடையே காணப்படும் ஒருவித நுரையீரல், நோயைக் குறிக்கிறது. (மருத்துவ ஆவணத்தில் இந்தப் பெயரை டாக்டர் எழுதி முடிப்பதற்குள் நோயாளியின் நுரையீரல் மேலும் பழுதடைந்து விடுமே!).



Flair Flare

Flair என்பது திறமை தொடர்பானது. ஈடுபாடு கொண்ட திறமை. She has a flair for management என்றால் அவருக்கு மேலாண்மைத் துறையில் தனி ஈடுபாடும், திறமையும் இருக்கிறது என்று அர்த்தம். I have artistic flair என்றால் எனக்கு ஓவியத் திறமை உண்டு. அதை நான் உணர்ந்திருக்கிறேன் என்று அர்த்தம்.

பிரெஞ்சு மொழியில் flairer என்றால் முகர்தல் என்று அர்த்தம்.

Flare என்றால் அது நெருப்புடா சமாச்சாரம். அதாவது திடீரென்று உருவாகும் தீப்பிழம்பு. அதை உருவாக்கும் கருவியையும் சில சமயம் flare என்பார்கள் (A flare gun). உருவகமாகவும் இதைப் பயன்படுத்துவதுண்டு. I felt a flare of anger within me.



Umbrella என்பதற்கு வேறு அர்த்தம் உண்டா என்று கேட்கிறார் ஒரு நண்பர்.

அதாவது ‘குடை’என்பதைத் தவிர வேறு அர்த்தம் உண்டா என்று அவர் உணர்த்துவது புரிகிறது.

பாதுகாக்கும் எதையுமேகூட umbrella என்று குறிப்பிடுவதுண்டு. It will provide a defensive umbrella எனும்போது umbrella-வின் பொருள் ‘ஒரு கேடயம்போல’ என்றாகிறது. இந்த விதத்தில் umbrella என்பதின் சம வார்த்தைகளாக protection, care, patronage போன்றவற்றைக் கொள்ளலாம்.

விலங்கியலைப் பொருத்தவரை சொரி மீனின் உடலில் உள்ள டிஸ்க் போன்ற பகுதியை umbrella என்பதுண்டு. இதைச் சுருக்கியும், விரித்தும் தண்ணீரில் அந்த உயிரினம் நகர்ந்து செல்கிறது.



லத்தீன் மொழியில் umbrella என்றால் ‘கொஞ்சம் நிழல்’ என்று அர்த்தம்.

Umbrella என்பதை இங்கு யாரும் ‘உம்பர்லா’ என்று உச்சரிப்பதில்லை. எனவே, இதன் சரியான உச்சரிப்பு ‘அம்ப்ரெலா’ என்பதை விளக்கத் தேவையில்லை (கடைசிப் பகுதியை ‘ரெல்லா’ என்று அழுத்தி உச்சரிக்க வேண்டாம். ‘ரெலா’ என்பது போதும்).



‘Loin’ என்றால் கோவணம் என்கிறார்களே. அப்படியானால் ஆங்கிலம் பேசும் நாடுகளில்கூடக் கோவணம் கட்டுவார்களா?

எந்தெந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் கோவணம் கட்டுவார்கள் என்ற புள்ளி விவரம் கைவசம் இல்லை என்பதால், இந்த நண்பரின் கேள்வியின் பொது அறிவுக் கோணத்தை விட்டுவிடுகிறேன்.

Loin என்பது கோவணம் என்றே நமது நடைமுறையில் ஆகிவிட்டது என்றாலும் loin என்பது கோவணம் மறைக்கும் உடல் பிரதேசங்களைக் குறிக்கிறது. The fruit of your loins என்றால் அது குழந்தைகளைக் குறிக்கிறது.

ஆகக் கோவணத்தை loin cloth என்று கூறலாம்.

‘Gird up your loins’ என்றால் ஆடையை வரிந்து கட்டிக்கொள்வது என்று அர்த்தம். அதாவது ‘கடினமான பணியைச் செய்யத் தயாராக இரு’ என்பது உள்ளர்த்தம்.



போட்டியில் கேட்டுவிட்டால்?

Weather ________, I shall __________ the wedding.

கோடிட்ட இடங்களில் இடம் பெற வேண்டிய இரு வார்த்தைகள் எவை?

(a) Bettering, go

(b) Granting, visit

(c) Allowing, reach

(d) Permitting, attend

முதலில் வாக்கியத்தின் பொருள் என்ன என்பதை அறிந்துகொள்வோம். ஒருவேளை இப்போது மழை பெய்து கொண்டிருக்கலாம் அல்லது புயல் அடித்துக்கொண்டிருக்கலாம். ‘நிலைமை சரியானால் நான் அந்தத் திருமணத்துக்குச் செல்வேன்’ என்பதுதான் வாக்கியம்.

இதை அப்படியே ஆங்கிலப்படுத்தினால் முதல் விடையான bettering, go என்பதுதான் சரியானது என்று தோன்றலாம். ஆனால் weather bettering என்பது சரியான பயன்பாடு அல்ல.

Weather granting என்பதும் சரியான பயன்பாடு அல்ல. ஆக முதல் இரண்டு விடைகளும் வாக்கியத்தில் பொருந்தவில்லை.

Allowing, permitting ஆகிய இரண்டுமே பொருத்தமானவை. ஆனால், இரண்டாவது வார்த்தைகளைக் கவனியுங்கள். Wedding என்றால் திருமணம். திருமணத்தை நீங்கள் attend செய்யலாம். திருமண மண்டபத்தை reach செய்யலாம்.

எனவே, weather permitting I shall attend the wedding என்பது பொருத்தமான தேர்வாக இருக்கும்.

சிப்ஸ்

Quite என்றால் என்ன? Quiet என்றால் என்ன?

Quite என்றால் நிறைய. Quiet என்றால் உஷ்ஷ்ஷ்!

Overzealous ஆக இருப்பது தவறா?

தவறில்லை. அதீத ஆர்வத்துடன் இருப்பதில் என்ன தவறு? ஆனால் எக்கச்சக்க பொறாமையுடன் (Overjealous) இருப்பது தவறு.

Interrogation என்றால் விசாரணையா?

Interrogation என்பது கேள்வி கேட்பது தொடர்பானது. அந்த விதத்தில் விசாரணையும் அதில் சேர்த்தி.

(தொடர்புக்கு - aruncharanya@gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x