சேதி தெரியுமா? - சென்னையைப் பாதித்த வார்தா

சேதி தெரியுமா? - சென்னையைப் பாதித்த வார்தா
Updated on
2 min read

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைக் கடுமையாகத் தாக்கிய வார்தா புயலில் 10-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். தமிழகம் கடந்த 22 ஆண்டுகளில் சந்தித்திராத அதிக சக்தி வாய்ந்த புயல் இது என்று கூறப்படுகிறது. டிசம்பர் 12-ம் தேதி, மணிக்கு 100 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கிய இப்புயல் மாலை வேளையில் பலமிழந்து காரைக்காலைக் கடந்தது.

வார்தா புயல் காரணமாகத் தெற்கு ஆந்திரப் பகுதிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தமிழகத்தில் 6 ஆயிரத்து 750 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது. லட்சத்துக்கும் மேலான மரங்கள் வீழ்ந்தன. வார்தா புயல் சேத நிவாரணம், மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமானப் பணிகளுக்காகத் தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மத்திய அரசிடம் ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி கேட்டுள்ளார்.

161 நாடுகளுக்கு இ-டூரிஸ்ட் விசா நீட்டிப்பு

மத்திய அரசு இணையவழியிலான இ-டூரிஸ்ட் விசா திட்டத்தை 161 நாடுகளுக்கு நீட்டித்துள்ளது. மத்தியச் சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா, மாநிலங்களவையில் இதை அறிவித்தார். கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரை இ-டூரிஸ்ட் விசா திட்டத்தின் மூலம் 9 லட்சத்து 17 ஆயிரத்து 446 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் சென்ற ஆண்டை விட, 168.5 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

வருகையின் போது விசா கொடுக்கப்படும் இத்திட்டம் 2014 நவம்பர் 27-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. விசா வழங்கப்படுவதற்கு முன்னரே வெளிநாட்டுப் பயணிகள் இணையம் மூலம் விண்ணப்பித்துப் பயணத்துக்கான ஒப்புதலை இந்திய அரசிடம் வாங்கிக்கொள்ளலாம். மின்னஞ்சல் மூலம் அளிக்கப்படும் பதிலை ஆவணமாகப் பயணத்தின்போது காண்பித்தால் போதுமானது. இந்தியாவின் சுற்றுலா வர்த்தகத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் இது.

மோடியைச் சந்தித்தார் ராகுல் காந்தி

விவசாயக் கடன்களை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் பிரமுகர்கள், டிசம்பர் 16 அன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு முடிந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, பஞ்சாபில் வேளாண்மைத் துறையில் பெரிய நெருக்கடி நிலவுவதாகக் கூறினார். நாடு முழுவதும் நிலவும் விவசாயிகளின் பிரச்சினைகளைப் பற்றி மோடி கவலை தெரிவித்தததாகவும், ஆனால் கடன் ரத்து குறித்து அவர் மவுனமே சாதித்ததாகவும் கூறினார்.

பி.வி.சிந்து தோல்வி

சீனாவில் நடைபெற்றுவரும் ஹாங்காங் பேட்மிண்டன் ஓபன் தொடரின் இறுதிப்போட்டி டிசம்பர் 15 அன்று நடைபெற்றது. இப்போட்டியில் சீனாவின் சன் யு-வை எதிர்த்து இந்தியாவின் ஒலிம்பிக் வீராங்கனை பி.வி.சிந்து விளையாடினார். பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 15-21, 17-21 என்ற புள்ளிகள் கணக்கில் சிந்துவைச் சன்-யு தோற்கடித்தார். உலகத் தரவரிசைப் பட்டியலில் சன் யு, ஆறாவது இடத்தில் உள்ளார். சிந்து, இதற்கு முந்தைய போட்டிகளில் தரவரிசைப் பட்டியலில் முன்னணியிலிருந்த வீராங்கனைகளைத் தோற்கடித்திருந்த நிலையில் இப்போட்டியில் அதிர்ச்சிகரமான தோல்வியைத் தழுவினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in