Last Updated : 31 Dec, 2016 11:27 AM

 

Published : 31 Dec 2016 11:27 AM
Last Updated : 31 Dec 2016 11:27 AM

2016 வேளாண் நிகழ்வுகள்

2016 - ல் வேளாண்மைத் துறை சார்ந்து ஆக்கபூர்வமாகவும், பாதிக்கும் வகையிலும் பல நிகழ்வுகள் நடைபெற்றன. அவற்றின் தொகுப்பு:

மீண்டும் காவிரி விவகாரம்

காவிரியிலிருந்து தொடர்ந்து தமிழகத்துக்கு தொடர்ந்து 10 நாட்களுக்கு தினசரி 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. முதலில் தண்ணீர் திறந்தவிடப்பட்டவுடன், பெங்களூருவில் தமிழகத்தைச் சேர்ந்த 40 பேருந்துகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. தொடர்ந்து கர்நாடகத்தில் வன்முறை பரவலானது; தமிழர்கள் தாக்கப்பட்டனர்.

அதன் பிறகு உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்துவிட்டது. இதனால் காவிரிப் பாசன மாவட்டங்களில் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டது.



மீத்தேன் திட்டம் ரத்து

காவிரிப் பாசன மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்கு தமிழக விவசாயிகள், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். இந்தத் திட்டம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. அது மட்டுமில்லாமல் ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டம் தொடர்பாக தமிழகத்தில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த ஆய்வும் கைவிடப்பட்டது. மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அக்டோபர் மாதம் இதை அறிவித்தார்.



முழு இயற்கை வேளாண் மாநிலம்

2016-ன் தொடக்கத்தில் இந்தியாவிலேயே முதன்முதலாக முழுமையான இயற்கை வேளாண் மாநிலமாக சிக்கிம் மாறியது. உலக அளவில் வரவேற்பைப் பெற்ற இந்த மாற்றம் மூலம் அறுவடை அதிகரித்தது, அனைவருக்கும் ஆரோக்கியமான உணவும் கிடைத்தது. கேரள மாநிலமும் பூச்சிக்கொல்லிகள் இல்லாத காய்கறிகள், மாடித் தோட்ட வேளாண்மை போன்றவற்றை ஊக்குவிக்கும் முயற்சிகளை முன்னெடுத்தது.



சிறுதானியங்கள் ஊக்குவிப்பு

கர்நாடக மாநிலம், ஆந்திரப் பிரதேசம், ஒடிஷா உள்ளிட்ட மாநில அரசுகள் சிறுதானியங்களை ஊக்குவிக்கும் திட்டங்களை இந்த ஆண்டு முன்னெடுத்துள்ளன. தமிழகத்திலும் ஆரோக்கிய விழிப்புணர்வு பரவலாகி வருவதன் ஒரு பகுதியாக சிறுதானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ளும் பண்பு அதிகரித்திருக்கிறது.



அதிகரித்த விவசாயிகள் தற்கொலை

கடைசியாக விருத்தாசலத்தில் மணவாளநல்லூர் விவசாயி மான்துரை தற்கொலை செய்துகொண்டதுடன், தமிழகத்தில் இந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 35. காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படாதது மழை பொய்த்தது, வறட்சி, பயிரிழப்பு போன்ற காரணங்களால் விவசாயிகள் தற்கொலைகள் செய்துகொண்டனர். தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த காவிரி பாசன விவசாயிகளே இவர்களில் அதிகம்.

மற்றொரு புறம் விவசாயிகளுக்கு எதிரான வன்முறையும் 2016-ல் அதிகரித்தது. டிராக்டருக்கான கடனை திரும்பச் செலுத்தத் தவறியதால் நிதிநிறுவன ஊழியர்கள் அடித்த அவமானம் தாங்காமல், ஒரத்தூரைச் சேர்ந்த விவசாயி அழகர் தற்கொலை செய்துகொண்டார். டிராக்டர் கடன்தொகையைச் செலுத்தச் சொல்லி மற்றொரு விவசாயி பாலனை, நிதி நிறுவன ஊழியர்கள் அடித்து இழுத்துச் சென்றது மிகப் பெரிய சர்ச்சையானது.



ஜல்லிக்கட்டு தடை

2016 பொங்கலுக்கு முன்னாலிருந்து ஜல்லிக்கட்டு நடக்கும்-நடக்காது என்ற நிலை மாறி மாறி இருந்துவந்தது. முதலில் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிப்பதாக மத்திய பா.ஜ.க. அரசு அரசாணை வெளியிட்டவுடன் ஜல்லிக்கட்டு நடத்துபவர்களும் விவசாயிகளும் மகிழ்ந்தார்கள். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருந்ததே இந்த ஆணைக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. ஆனால், அரசு அமைப்பான விலங்குகள் நல வாரியமும் பீட்டா உள்ளிட்ட அமைப்புகளும் தொடர்ந்த வழக்கால், உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தது. ஜல்லிக்கட்டைத் தடை செய்வதன் மூலம் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் இந்திய உள்நாட்டு மாட்டு இனங்களின் இனப்பெருக்கத்தை ஒழிக்க நினைப்பதாக ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடப்பதும் சந்தேகமே.



எதிர்ப்பை மீறித் தொடரும் கெயில்

விவசாயிகளின் தொடர் எதிர்ப்பு, மாநில அரசின் எதிர்ப்பை மீறி விவசாய நிலங்களில் கெயில் நிறுவனத்தின் இயற்கை எரிவாயு குழாய்களைப் பதிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. கொச்சியிலிருந்து பெங்களூருவுக்கு எரிவாயு கொண்டு செல்லும் இந்தத் திட்டத்தில் தமிழகத்தில் 310 கி.மீ. தொலைவுக்கு குழாய்கள் பதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கேரளத்தில் சாலையோரம் குழாய்களைப் பதிக்கும் கெயில் நிறுவனம், தமிழகத்தில் குழாய் பதிக்கத் தேர்ந்தெடுத்துள்ள பகுதிகள் பெரும்பாலும் விவசாய நிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயிகள் தொடர்ந்து போராடிவருகின்றனர்.



மரபணு மாற்றுக் கடுகு

உலகிலும் இந்தியாவிலும் முதன்முறையாக மனிதர்கள் உண்ணக்கூடிய, மரபணு மாற்றுக் கடுகுப் பயிரை வணிகரீதியில் அறிமுகப்படுத்த 2016-ல் மத்திய பா.ஜ.க. அரசு தீவிரமாக முயற்சித்தது. விவசாயிகள், பாதுகாப்பான உணவை வலியுறுத்துபவர்கள், சுற்றுச்சூழல் செயல்பட்டாளர்களின் தொடர் எதிர்ப்பால் இந்த ஆண்டு அது அறிமுகப்படுத்தப்படவில்லை. இத்தனைக்கும் மரபணு மாற்றுக் கடுகுக்கு ஆதரவாக முன்வைக்கப்பட்ட வாதங்கள் போலியாக உருவாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



காப்பீட்டுக்கு ஆதரவில்லை

ஃபசல் பீமா யோஜனா என்ற பெயரில் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தை பிரதமர் மோடி ஆர்ப்பாட்டமாக அறிமுகப்படுத்தினார். பெரிய அளவில் விளம்பரங்களும் களைகட்டின. ஆனால், இந்தத் திட்டம் விவசாயி களிடையே வரவேற்பைப் பெறவில்லை. முந்தைய ஆண்டைவிட 2016-ல் இந்தத் திட்டத்தை தேர்ந்தெடுத்தவர்களின் எண்ணிக்கை குறைவு என்கின்றன செய்திகள்.



வாழ்வைப் பறித்த பண மதிப்பு இழப்பு

ஆண்டு முழுக்க பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்த உழவர்களின் தலையில், ஆண்டு இறுதியில் மிகப் பெரிய இடியாக இறங்கியது பண மதிப்பு இழப்பு. இதனால் விவசாயிகள் விளைபொருளை விற்க முடியாமலும், மொத்த விற்பனையாளர்கள் பொருட்களை வேறு யாருக்கும் அனுப்ப முடியாமலும், வாடிக்கையாளர்கள் விவசாய விளைபொருட்களை வாங்க முடியாமலும் கஷ்டப்பட்டனர். நாட்டில் பாதிக்கும் மேற்பட்டோர் உழவு, அது சார்ந்த தொழில்களை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் நிலையில், பண மதிப்பு இழப்பு மிகப் பெரிய பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x