Last Updated : 27 Dec, 2016 10:51 AM

 

Published : 27 Dec 2016 10:51 AM
Last Updated : 27 Dec 2016 10:51 AM

ஆங்கிலம் அறிவோமே - 140: வாயிலேயிருந்து வார்த்தையைப் பிடுங்காதே!

கேட்டாரே ஒரு கேள்வி

ஆச்சரியத்தையோ பாராட்டையோ குறிக்க ‘வாவ்’ என்கிறார்களே இளைஞர்கள். அப்படி ஒரு வார்த்தை ஆங்கிலத்தில் உண்டா என்ன?



“உன்னை அந்தப் பெண் ஒரு துரும்பும் மதிக்கலை. நீதான் அவள் உன்னை விரும்புறதாகச் சொல்றே” என்று நண்பர்கள் உங்களைச் சீண்டினால் “யார் சொன்னது? நேத்துகூட அவ என்கிட்டே பல்லைக் காட்டினா” என்று ரீல் சுற்றுவது உங்கள் விருப்பம். ஆனால் அதையே அப்படியே ஆங்கிலத்தில் கூறிவிடா தீர்கள். ஏனென்றால் showing one’s teeth என்றால் மிரட்டுவது அல்லது வெறுப்பை உமிழ்வது என்று அர்த்தம். While playing cricket he accidentally smashed a window and the house owner showed his teeth.

To grind teeth என்றால் உங்களால் விள ங்கிக் கொள்ள முடியும். பற்களை நறநறப்பது. அதாவது கோபத்தை வெளிப்படுத்துவது.

பல்லைக் கடித்துக் கொ ண்டிருப்பது என்றால்? அதாவது வேதனையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பது என்றால்? To grit one’s teeth.

In the teeth of என்றால் கடும் தடைகளையும் மீறி என்ற அர்த்தம். Aravind married Manisha in the teeth of her parents’ disapproval.

Pulling teeth என்றால் மிகவும் கடினமான ஒரு காரியம் என்று பொருள். Getting information out of you is like pulling teeth. ‘உன் வாயிலேயிருந்து வார்த்தையைப் பிடுங்குவதற்குள் போதும்போதும்னு ஆயிடுது’ என்கிறோமே, அந்த அர்த்தம்.

To give teeth to என்றால் ஒரு நிறுவனத்துக்கோ, அமைப்புக்கோ போதிய அதிகாரங்களை வழங்குவது எனலாம். We must give the leader teeth so that he can enforce his decisions.



‘கேட்டாரே ஒரு கேள்வி’க்கான பதில் இது: நவீன ஆங்கிலத்தில் இந்த வார்த்தை ஒரு பகுதியாகிவிட்டது. ஆங்கிலத்துக்கு இந்த வார்த்தையை நன்கொடையாக அளித்தது இந்தியாதான்! இந்தியில் ‘வாரே வா ஹ்’ என்பதிலிருந்து வந்ததுதான் ஆங்கிலத்தில் WAH.

Vow என்பது வேறு. அழுத்தமான உறுதிமொழியை அது குறிக்கிறது. அர்ப்பணிப்பது என்ற பொருளிலும் vow என்ற சொல்லைப் பயன்படுத்துவதுண்டு. I vowed myself to this organization.

Chest thumping என்றால் என்ன?

Chest thumping என்பதற்கும், ஒப்பாரி வைப்பவர்களுக்கும் தொடர்பில்லை. சாகப் பிழைக்கக் கிடப்பவர்களுக்குச் செய்யப்படும் முதல் உதவியாகவும் இதை நினைத்துவிடக் கூடாது.

இப்படிக் கேட்கும் வாசகரிடம் நான், “chest thumping என்பது தெரியாமல் இருக்குமா? அதுவும் எனக்கு” என்று கூறினால் அதுதான் chest thumping. அதாவது தற்பெருமை அடித்துக்கொள்வது. Bragging என்றும் boasting என்றும் சொல்வோமே அதுதான்.

Thumping என்றால் என்னவென்று தெரியாத ஆளும்கட்சி சட்டசபை உறுப்பினர்களோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ இருக்க முடியாது. அங்குள்ள மேஜைகளைக் கண்ணீர் வடிக்கச் செய்யும் காரியம்தான் thumping. அதாவது தங்கள் கட்சியின் வி.ஐ.பி. (முக்கியமாக முதல்வர் அல்லது பிரதமர்) பேசும்போது அதைப் பாராட்டும் விதமாக மேஜையைத் தட்டுவார்களே அதுதான் thumping.



“Wee என்பதன் பொருள் என்ன என்பதை விரிவாக விளக்க முடியுமா?’’ என்று கொஞ்சம் நீட்டி முழக்கிக்கூடக் கேட்டிருக்கலாம். ஆனால் “Wee?” என்று மட்டும் கேட்கும் வாசகர் அதன் பொருளைப் புரிந்துகொண்டு அந்தக் கேள்வியை வடிவமைத்தது போல் இருக்கிறது.

Let me be frank. I am a wee bit jealous of her.

The injury had been troubling him for a wee while.

ஸ்காட்லாந்தில் ‘மிகக் கொஞ்சம்’ என்பதை ‘Little wee’ என்று கூறுவதுண்டு. அந்த அடிப்படையில் wee பயன்படுத்தப்படுகிறது.

பேச்சு வழக்கத்தில் wee என்பது சிறுநீரைக் குறிக்கிறது! I should check my wee for sugar.



“Standing Committee என்கிறார்களே அதற்கு ஏதோ வித்தியாசமான அர்த்தம் இருக்கிறது என்று தோன்றுகிறது. கொஞ்சம் விளக்குங்களேன்”.

அந்தக் குழுவின் உறுப்பினர்கள் நின்று கொண்டே இருக்க மாட்டார்கள்! Standing Committee என்பது குறிப்பிட்ட இடைவெளிகளில் சந்திக்கும் ஒரு நிரந்தரக் குழு. இந்தக் குழுவின் உறுப்பினர்கள் பெரும்பாலும் பாராளுமன்ற உறுப்பினர்கள்.

Ad hoc Committee என்பது ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட குழு. அந்த நோக்கம் நிறைவேறியதும் அந்தக் குழு கலைக்கப்படும்.

ஆனால் ad hocism என்பது கொஞ்சம் கிண்டலாகவும் தரமற்றது என்ற பொருள் படும்படியாகவும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது தொலைநோக்குப் பார்வை இல்லாமல் பிரச்னைகளுக்கு அப்போ தைக்கு ஏதோ தாற்காலிகமாக முடிவெடுப்பது (எடுத்தேன் கவிழ்த்தேன் என்பது போல).



போட்டியில் கேட்டுவிட்டால்?

They died _______________ dengue.

a) of

b) to

c) from

d) on

On என்றால் மேலே என்று பொருள் கொள்ளலாம் The ball is on the table என்பதுபோல். எனவே on என்பது கோடிட்ட இடத்தில் பொருந்தாது.

டெங்குவின் காரணமாக அவர்கள் இறந்தனர். இதுதான் அந்த வாக்கியத்தின் பொருள். எனவே to என்பது பொருத்தமற்றது. ஒரு வேளை ‘due to’ என்பதைப் பயன்படுத்தினால் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறதா? ஆனால் சில prepositions இந்த வகை லாஜிக்கில் அடங்குவதில்லை.

Died என்ற வார்த்தையைத் தொடர்வது of அல்லது from ஆகிய இரண்டில் எதுவாகவும் இருக்கலாம். ஆனால் இவற்றைப் பயன்படுத்துவதில் ஒரு நுட்பமான வேறுபாடு உண்டு.

ஒரு நோயின் காரணமாக இறப்பு எனும்போது of என்பதைப் பயன்படுத்த வேண்டும்.

வேறு ஏதாவது குறிப்பிட்ட காரணத்தால் இறக்கும்போது from என்பதைப் பயன்படுத்துகிறார்கள். He died from overwork. They died from malnutrition.

இந்த விதத்தில் பார்க்கும்போது they died of dengue என்பதே சரி.

சிப்ஸ்

# Belligerent nation என்றால் அது எத்தகைய நாடு?

ஆக்ரோஷமான நாடு. Belligerent என்பது noun ஆகப் பயன்படும்போது அது போரில் ஈடுபடும் நாட்டைக் குறிக்கிறது.

# Church என்பதற்கும் Cathedral என்பதற்கும் என்ன வேறுபாடு?

Cathedral என்பது அளவில் பெரிய Church. Cathedral-க்கு ஒரு பிஷப் இருப்பார்.

# To go west என்றால் என்ன அர்த்தம்?

இறந்து போவது. He went west in a plane crash. பேராபத்தையோ பெரும் சிக்கலையோ சந்திப்பதையோ கூட இப்படிக் குறிப்பிடுவதுண்டு. Many crores of rupees went west as a result of the recent demonetization. ஒருவேளை சூரியன் மேற்கில் அஸ்தமிப்பதால் இப்படிக் கூறுகிறார்களோ என்னவோ! தமிழ் இலக்கியங்களில் ‘வடக்கிருத்தல்’ என்று படித்தது நினைவுக்கு வருகிறது.

(தொடர்புக்கு - aruncharanya@gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x