Published : 24 Dec 2016 11:29 AM
Last Updated : 24 Dec 2016 11:29 AM

வார்தா போன்று எத்தனை புயல்களைச் சென்னை தாங்கும்?

கடந்த ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் சென்னை கடுமையான மழை வெள்ளத்தை எதிர்கொண்டது. அப்போது, அரசமைப்பு சாராத வானிலை தகவல் ஆதாரங்களின் வலைப்பின்னல் சென்னையில் உருவானது. ‘தமிழ்நாடு வானிலை மனிதர்’ (TamilNadu Weatherman) என்று தன்னையே அழைத்துக்கொள்ளும் ஆ. பிரதீப் ஜான், அதுபோன்ற அமைப்புசாராத் தகவல் ஆதாரங்களில் மிக முக்கியமான ஒருவராக மாறினார்; சென்னை மக்களுக்குப் பேருதவி புரிய ஆரம்பித்தார். வானிலை தொடர்பான ராடார் தரவுகளைக் கொண்டு, அந்தத் தரவுகளை விளக்கங்களாக மாற்றி, உரிய நேரத்தில் இணையம் வழியாக அளித்தார்.

வார்தா புயலுக்குச் சில நாட்களுக்கு முன்பிருந்தே அதைப் பற்றி ஜான் எழுத ஆரம்பித்துவிட்டார். ஆனால், டிசம்பர் 12 பிற்பகலில் புயல் சென்னையைத் தாக்க ஆரம்பித்தபோது, “இது போன்று எதையும் என் வாழ்நாளில் நான் கண்டதில்லை” என்று கலவரம் மிகுந்த தொனியில் அவர் பதிவிட்டார். “1994-ஐவிட இது மோசம்; படுநாசம். எனக்குப் புயலை ரொம்பவும் பிடிக்கும் என்றாலும், இதயம் அச்சத்தால் துடித்துக்கொண்டிருக்கிறது. வீட்டுக்குள் பத்திரமாக இருங்கள். இதுபோல் கடுமையாக வீசும் காற்றுக்குச் சென்னை பழக்கப்பட்டிருக்க வில்லை. இதை எனது வலுவான அறிவுரையாகக் கருதுங்கள்” என்று சமூக ஊடகங்களில் அவர் பதிவிட்டார்.

புரட்டிப்போட்டது

அவரது சொற்கள் அபாயச் சங்காக ஒலித்தன. அடுத்த சில மணிநேரத்தில் வங்காள விரிகுடாவிலிருந்து இந்தியத் தீபகற்பத்துக்குள் வார்தா புயல் நுழைய, சென்னையையும் அதையொட்டிய மாவட்டங்களையும் கடும் வேகக் காற்றும் கடுமையான மழையும் புரட்டியெடுத்தன. வார்தா புயல் தனது தடத்தைச் சிறிதே மாற்றிக்கொண்டது. சென்னையின் தெற்குப் பகுதியைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், சென்னைக்கு வடக்கே பழவேற்காடு ஏரியின் மீது புயல் கடந்தது. காற்றின் போக்கைக் கண்காணிக்கும் விண்ட்ஃபைண்டர் (Windfinder) எனும் இணையதளத்தின் தரவின்படி சென்னை விமான நிலையத்தில் வீசிய சராசரி காற்று வேகம் மணிக்கு 101.86 கி.மீ; காற்றுவீச்சின் (gust) வேகம் மணிக்கு 138.9 கி.மீ.

‘கடுமையான புய'லுக்கு மிகப் பொருத்தமானதொரு எடுத்துக்காட்டு வார்தா புயல். சென்னையைப் புயல் மையத்தின் முன்சுவர் (Eyewall) கடந்தபோது ஒரு திசையை நோக்கிக் கடுமையாகக் காற்று வீசி, மழையும் அடித்துப் பெய்தது. புயலின் மையம் சென்னையைக் கடந்தபோது சற்று இடைவெளி; அதற்குப் பிறகு மேலும் மழையும் காற்றும் புயலுக்கு எதிர்த்திசையில் வீசின. புயல் கடந்த பிறகு சென்னையும் அதன் சுற்றுப்புறங்களும் போர்க்களம் போல் காட்சியளித்தன.

வருங்காலத்திலும் தொடருமா?

வார்தாவின் தீவிரம், ‘பருவநிலை குறித்த தமிழ்நாடு மாநிலச் செயல்திட்டம்’ செய்திருந்த கணிப்பு சரிதான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஜூலை 2014-ல் வெளியிடப்பட்ட அந்த ஆவணம் இப்படிச் சொல்கிறது: “வருங்காலத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் கிழக்குக் கடற்கரையைத் தாக்கக்கூடிய புயல்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். அதேநேரத்தில் அந்தப் புயல்களின் வேகம், அதாவது காற்றின் வேகம் கடுமையாக அதிகரிக்கும்.” ஆனால், அந்தக் கணிப்பால் ஒரு விஷயத்தைக் கற்பனைசெய்து பார்க்க முடியவில்லை; சென்னை சுற்றுச்சூழலின் மீட்டெடுக்கும் தன்மையை வலுப்படுத்துவதற்கு, புதுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியத்தை, இதுபோன்ற இயற்கைப் பேரிடர்கள் நமக்கு வலுவாக உணர்த்தும் என்பதுதான் அது!

வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்திருக்கும் சென்னை, புயல் மழையாலும் வெள்ளத்தாலும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய ஒரு நகரம். எனினும், 2015 மழை வெள்ளமும் வார்தா புயலும் இந்த நகரத்தைத் தாக்கிய மிகக் கடுமையான இயற்கைப் பேரிடர்களாக அமைந்துவிட்டன. வருங்காலத்தில் இதுபோன்ற கடுமையான இயற்கைப் பேரிடர்களைச் சென்னை எதிர்கொள்ளும் என்பதற்கான முன்னோட்டமாக இதை எடுத்துக்கொள்ளலாமா என்பதுதான் நம் முன்னால் உள்ள கேள்வி.

தண்ணீர் பிரச்சினை

சென்னை இதற்கு முன்பு கணக்கில் எடுத்துக்கொள்ளாத ஒரு பாதிப்பை வார்தா புயல் நமக்குக் காட்டிவிட்டுச் சென்றிருக்கிறது. கடும் வேகக் காற்றுதான் அந்தப் பாதிப்பு! கடற்கரையையொட்டி இருக்கும் தட்டையான நகரமாக இருப்பதால், வெள்ளத்தாலும் தண்ணீர் தேங்குவதாலும் சென்னை எளிதில் பாதிக்கப்படும். நிலநடுக்க வாய்ப்புள்ள மண்டலம்-3 என்ற பிரிவின் கீழ் இருக்கும் சென்னை, மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ள பகுதியும்கூட. சென்னையின் சில பகுதிகள் சற்றுத் தீவிரமான நிலநடுக்கம் ஏற்படக்கூடிய நிலநடுக்க வாய்ப்புள்ள மண்டலம்-4 என்ற பிரிவுக்குள் வருபவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னையின் பயன்பாட்டுக்குப் போதுமான நீர் ஆதாரங்கள் இல்லை என்னும் உண்மை எல்லாப் பிரச்சினைகளையும் இன்னும் மோசமாக்குகிறது. நிலத்தடி நீர், தொலைதூரத்திலிருந்து பெறப்படும் நீர், உப்புத்தன்மை நீக்கப்பட்ட கடல் நீர் ஆகிய நீராதாரங்களையே சென்னை நம்பி இருக்கிறது. நீர் கிடைக்கும் இந்த முறைகளை நீண்ட காலத்துக்குத் தடுக்கக்கூடிய எந்த ஒரு நிகழ்வும் சென்னைவாசிகளை மிக மோசமான நிலைக்குத் தள்ளிவிடுகிறது.

2015-ன் வெள்ளத்தின்போதும் தற்போதைய புயலின்போதும் இதுதான் நடந்தது. எனினும், மின்சாரம் முற்றிலும் தடைபட்டுப்போனதே தண்ணீர் கிடைக்காமல் மக்கள் திண்டாடியதற்கு முக்கியக் காரணம். புயல் வீசியதற்குப் பிறகு சென்னையின் பல இடங்களில் ஒரு வாரத்துக்கு மேலாக மின் விநியோகத்தைச் சீரமைக்க முடியாத சூழல் நிலவியது. 2015 மழை வெள்ளத்தின்போதும் சென்னையில் மின்சாரம் திரும்பவும் கிடைப்பதற்குப் பல இடங்களில் ஒரு வாரத்துக்கு மேல் ஆனது.

மக்களை எட்டாத எச்சரிக்கை

கடந்த ஆண்டின் மழை வெள்ளமும் சரி, தற்போதைய புயலும் சரி ஒரு விஷயத்தை வெட்டவெளிச்சமாக்கியிருக்கின்றன. இதுபோன்ற பேரிடர்களின்போது நம்பகத்தன்மை கொண்டதும், மிகவும் பயனுள்ளதுமான தகவல் பரிமாற்றம் தேவையான அளவு இல்லை என்பதே அது. 2015 மழை வெள்ளத்தின்போது சென்னைக்கு வெளியே இருந்த மக்களால் வெள்ளத்தைப் பற்றிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள முடிந்தது; ஆனால், சென்னைக்குள் இருந்த மக்களுக்கோ எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

மழை வெள்ளத்தில் மாட்டிக்கொண்டு, அடுத்து என்ன ஆபத்து நேருமோ என்று தவித்துக்கொண்டிருந்த மக்களுக்கு ‘இந்திய வானிலைத் துறை’ வெளியிட்ட வானிலை அறிக்கைகளால் எந்தப் பயனும் இருக்கவில்லை. எந்தத் தகவலையும் அடைய முடியாத வகையில் மக்கள் அகப்பட்டிருந்தார்கள்! வானிலை நிலவரத்தை வெளியிடும் ‘ஸ்கைமெட் வெதர்’ இணையதளம் ‘இன்சாட்’ விண்கலம் எடுத்த ஒளிப்படங்களை ஒவ்வொரு மணி நேரமும் வெளியிட்டுக்கொண்டிருந்தது. வானிலை மையத்தின் அந்நாள் இயக்குநர் ரமணனும் தொலைக்காட்சி அறிக்கைகளை விட்டுக்கொண்டிருந்தார்; கூடுதலாக, அமைப்புசாரா வானிலை ஆர்வலர்களும் தகவல்களை வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனாலும், ஒரு முக்கியப் பிரச்சினை இருந்தது! இந்தத் தகவல்களை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க மின்சாரமோ இணைய இணைப்போ உயிர்ப்புடன் இல்லை.

செம்பரம்பாக்கத்தின் மதகுகள் 2015 டிசம்பர் 1-ம் தேதி திறக்கப்பட்டதால், அடையாற்றின் கரையில் வசித்த மக்களின் வீடுகளில் எதிர்பாராத வகையில் வெள்ளம் புகுந்தது. கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு, கண்காணும் தூரத்தைத் தாண்டி என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியாத நிலையில்தான் சென்னைவாசிகள் இருந்தார்கள். இந்தச் சூழ்நிலையில் தரை வழியாக அரசு அறிவிப்பு களைத் தெரிவித்திருந்தால் மக்களுக்கு நிச்சயம் உதவியாக இருந்திருக்கும்.

காற்றின் தாக்கம்

சென்னை மழை வெள்ளம் போல், வார்தா புயல் நாள் கணக்கில் நீடிக்கவில்லை; ஒரு சில மணி நேரம்தான் நீடித்தது. ஆனாலும், அந்த நேரத்தில் தேவையான தகவல் பரிமாற்றம் நிகழ முடியவில்லை. இந்த முறை வீசிய புயல் கடந்த காலங்களில் வீசிய மிதமான புயல்களைவிட வித்தியாசமானது. மழையால் ஏற்பட்ட தாக்கத்தைவிட, காற்றால் ஏற்பட்ட தாக்கமே இந்த முறை அதிகம். கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப் பட்டிருந்த பலரும் தங்கள் வாகனங்களை மேடான, உலர்ந்த தரைப்பகுதிகளில் நிறுத்திவைத்திருந்தார்கள். இந்த ஆண்டு புயலால் சாய்ந்த மரங்களோ, அந்த வாகனங்களையெல்லாம் நொறுக்கித் தள்ளின.

சென்னை ஓரளவு பசுமையான நகரம்தான்; பல அடுக்கக வளாகங்களிலும் சாலையோரங்களிலும் நிறைய மரங்கள் இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் சென்னை மாநகராட்சியும் மரவளர்ப்பு ஆர்வலர்களும் தூங்குமூஞ்சி மரம், குல்மொஹர் மரம் போன்ற அலங்கார மரங்களை நடுவதில் ஆர்வம் காட்டிவந்தனர். இந்த மரங்கள் வேகமாக வளர்வதும் நிழல் கொடுப்பதும்தான் இந்த மரங்களை அவர்கள் நாடியதற்குக் காரணம். ஆனால், இந்த மரங்கள் மா, வேம்பு போல் ஆழமாக வேரூன்றி வளர்பவை அல்ல; ஆகவே, புயல்காற்றுக்கு அவற்றால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. வார்தா புயலின்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வீழ்ந்தது மட்டுமல்லாமல், மின்கம்பிகள், கட்டிடங்கள், வாகனங்கள் போன்றவற்றையும் சேதப்படுத்தின.

தாக்குப்பிடிக்குமா சென்னை?

கடந்த மழை வெள்ளமும் சரி, தற்போதைய வார்தா புயலும் சரி சுற்றுச்சூழல்ரீதியில் தாக்குப்பிடித்து மீளும் திறன் சென்னைக்கு இருக்கிறதா என்பதையும், இதுபோன்ற பேரிடர்களின்போது தேவையான தகவலை மக்களிடம் கொண்டு செல்ல முடிகிறதா என்பதையும், அதைச் சார்ந்து உரிய முடிவுகளை எடுக்கும் திறன் உருவாகிறதா என்பதையும் கடுமையாகச் சோதித்துப் பார்த்தன;

இந்திய வானிலைத் துறையின் ராடார்கள், வானிலை விண்கலங்கள் போன்றவற்றின் வலைப்பின்னல் அமைப்பைக்கொண்டு கனமழையையும் புயலின் வருகையையும் கணிப்பது வெகு சுலபம். இருக்கும் தொழில்நுட்பங்களை வைத்துப் பார்க்கும்போது, கடந்த மழை வெள்ளமும் தற்போதைய வார்தா புயலும் எதிர்பாராத நிகழ்வுகளல்ல. இருந்தாலும், தகவல்களை மக்களிடம் எடுத்துச்சென்று மக்களின் உயிரையும் உடைமைகளையும் காப்பதில் நிறைய இடைவெளிகள் காணப்படுகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்னை எதிர்கொண்ட இயற்கை நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும்போது, இதுபோன்ற தீவிரமான நிகழ்வுகள் எதிர்காலத்தில் மிகவும் வழக்கமாகிவிடும் என்றே தெரிகிறது. கடற்கரையோர நகரமான சென்னைக்குப் புயல்களும் வெள்ளங்களும் மட்டுமே பிரச்சினையல்ல. கடல் மட்டம் உயர்தல், நிலத்தடி நீர் உப்பாதல் போன்ற பருவநிலை சார்ந்த மற்ற ஆபத்துகளும் அதிகமாக இருக்கின்றன. சமீபத்திய வெள்ளம், புயல் போன்றவற்றிலிருந்து ஏதாவது பாடங்கள் கற்றுக்கொண்டிருப்போமென்றால், இவற்றைப் பற்றிப் புதுவிதப் புரிதலும் மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளும் இனிமேலாவது தேவை. அவற்றைக் கொண்டுதான் சென்னையின் சுற்றுச்சூழல் சார்ந்த மீளும்தன்மையை வலுப்படுத்த முடியும், வலுப்படுத்த வேண்டும்.

கட்டுரையாளர், பானோஸ் தெற்கு ஆசியா அமைப்பின் மண்டலச் சுற்றுச்சூழல் மேலாளர்
தொடர்புக்கு: gopiwarrier@gmail.com

நன்றி: India Climate Dialogue | தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x